Home Featuredஜனனி 5

ஜனனி 5

by GK Tamil Novels
35 views

ஜனனி சட்டென்று “உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு பாலா” என்று சொல்ல பாலா திகைத்துப் போய் அவளையே பார்த்தான்.

பிறகு தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

இந்த பிடிச்சிருக்கு எனும் ஒற்றை வார்த்தை செய்யும் குழப்பம் வேறு எந்த வார்த்தையும் செய்வதில்லை.

பிடிச்சிருக்கு என்றால் எப்படி எந்த வகையில் என்ற குழப்பம் மனதை அலை பாய வைக்கும். எண்ணற்ற வகையில் எதை எதையோ எண்ண வைக்கும்.

தானாக எதையாவது நினைக்க வைக்கும். வீணான கற்பனைகளை வளர்த்து வைக்கும். எல்லாம் ஒரு நாள் இல்லை என்றாகும்போது எவரையும் பார்க்க விருப்பம் இன்றித் தனியே புலம்ப வைக்கும்.

இத்தனை இன்னல்கள் தேவையா ? பேசாமல் அவளிடமே கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லதுதானே?
பாலா கேட்டுத் தெளிவு பெறு குழம்பாதே. மனசாட்சி ஆசைப்பட்டது.

இதைப்போய் எப்படி ஒரு பெண்ணிடம் கேட்பது? எந்த வகையில் என்னை பிடித்திருக்கிறது என்று கேட்டால் என்ன நினைப்பாள்?
தன் மீது ஆசைப்படுகிறானோ அல்லது தன்னை அடைய முயற்சிக்கிறானோ அல்லது தன் பதிலைப் பொறுத்து வேறு எதுவும் திட்டம் தீட்டுகிறானோ என்று யோசிக்க மாட்டாளா? அப்படி எதுவும் தப்பித்தவறி கேட்டு விடாதே. மனம் எச்சரிக்கை செய்தது.

“என்ன பாலா ரொம்ப யோசிக்கிறீங்க?”

ஜனனி புன்னகையுடன் கேட்க பாலாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“சட்டுனு பிடிச்சிருக்குன்னு சொன்னா என்ன ரியாக்ட் பண்றதுன்னு தெரியலங்க. அதான்”

உண்மையைச் சொன்னான்.

ஜனனி அவனையே பார்த்தாள். புன்னகைத்தாள்.

“உங்ககிட்ட ரொம்பப் பிடிச்சது என்ன தெரியுமா பாலா?”

கேட்டவள் பாலாவின் ஆர்வமான விழிகளைப் பார்த்து அவளே தொடர்ந்தாள்.

“வெளிப்படையாப் பேசறது. மனசுல எதுவும் நினைக்காமல் டக்குனு கேட்கிறது.”

ஜனனி சொல்ல

‘யார் நானா? எனக்குள்ள என்னென்ன நெனச்சு நான் குழம்பறேன்னு எனக்குத்தானே தெரியும்?’

தனக்குள் எண்ணியபடி பாலா அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

“அப்ப நான் கிளம்பட்டுமா பாலா? மறக்காம கடையில் கொடுத்து காசு வாங்கிடுங்க”

பாட்டிலை காண்பித்து ஜனனி சொல்ல பாலா புன்னகையுடன் தலையசைத்தான்.

கையசைத்து ஜனனி விடைபெற்றுப் போய்விட தென்றல் புயலாக அடித்து ஓய்ந்தது போலிருந்தது பாலாவிற்கு.

மனம் முழுவதும் இனிமையான பரபரப்பு ஓடியது.

உற்சாகமாய் விசிலடிக்கத் தோன்றியது.

பாட்டிலைப் பார்த்தான். கடையில் மீண்டும் கொண்டு போய் கொடுக்க

‘அப்பவே நெனைச்சேன் உன்னப் பத்தி’ என்னும் கேவலமான பார்வையில் சுட்டெரித்த படி கடைக்காரன் வாங்கிக் கொண்டு காசு திரும்பக் கொடுத்தான்.

வீட்டிற்கு சென்றவனின் உற்சாகமான முகத்தைப் பார்த்த கமலம்

“என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க?

“கமலம் நான் எழுதின கதை நல்லா இருக்குன்னு ஒரு டீச்சர் சொன்னாங்க. ரொம்ப சந்தோசமா இருக்கேன்.”

“இந்த மாதிரி உருப்படாத வேலை தானே நீங்க பண்ணுவீங்க? உங்க வயசுல ஆம்பளைங்க எப்படி இருக்காங்க? பணம் சேர்க்கிறதுல எவ்வளவு குறியா இருக்காங்கன்னு தெரியுமா?”

“அதில்ல கமலம் நான் என்ன சொல்றேன்னா”

“பேசாதீங்க பண்றது உருப்படி இல்லாத வேலை. அதை யாரோ படிச்சுட்டு நல்லா இருக்குன்னு சொன்னாங்கன்னு என்கிட்ட வந்து சொல்லாதீங்க.”

கமலம் சொல்ல பாலாவிற்கு பால் பொங்கிய போது தண்ணீர் ஊற்றியது போல் சப்பென்று ஆனது.

சோபாவில் வந்தமர்ந்த கமலம் டிவியை ஆன் செய்தாள். தனக்குப் பிறந்த குழந்தையை ஒருவன் வேறு யாருக்கோ பிறந்தது என்று சந்தேகப்பட்டு மனைவியைத் திட்டும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. அதுவும் அந்த நாயகன் முகம் காணச் சகிக்கவில்லை. கோபப்படுகிறேன் என்று இஷ்டத்திற்கும் தன் முகத்தை மாற்றிக் கொண்டு குளோசப்பில் காட்சிகள் வர கமலம் ரசித்துப் பார்க்க தொடங்கினாள். பாலமுருகன் மெதுவாய் எழுந்து பால்கனிக்கு வந்து நின்றான்.

ஜனனியின் நினைவு வந்தது.

“உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பாலா”

ஜனனி சொன்னது மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்தது.

‘உனக்கென்னப் பெண்ணே?

ஒரு முறை சொல்லிவிட்டுச் சென்று விட்டாய்

ஓராயிரம் முறை எண்ணியும்
இன்னும் நினைத்துப் பார்க்கச் சொல்கிறதே என் மனம்.

இருட்டில் முடங்கிக் கிடந்தேன் நான்
வெளிச்சத்தை விழிகளில் கடத்துகிறாய் என்னுள்…

பாழும் என் மனம்
பாவையுன் விழிகளிலேயே
பட்டுக்கொண்டிருக்க
பேராசை கொள்கிறதே கண்ணே.’

பால்கனிக்கு வந்து நின்ற பாலமுருகனின் மனதில் கவிதை பெருக்கெடுத்து ஓட தாளில் எழுதி வைக்கலாமா? யோசித்தான்.

எழுதி என்ன செய்யப் போகிறாய்?

கரெக்ட். எழுதி என்ன செய்யப் போகிறேன்?

ஒன்றும் செய்யப் போவதில்லை. பாலா புன்னகைத்துக் கொண்டான்.

அவள் பாவம். அவளுக்கு இன்னும் வாழ்க்கை தொடங்கவேயில்லை. அவள் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் தான் தொல்லையாக இருக்கக் கூடாது. நினைத்தான்.

ஜனனியின் குழந்தை முகத்தின் புன்னகையை முதன் முதலில் கேண்டீனில் பார்த்தது நினைத்துப் பார்த்தான்.

‘பாலா… இந்தப் பிடிச்சிருக்குக்கு அர்த்தம் ரொம்ப சாதாரணம். வேற எந்த அர்த்தமும் எடுத்துக்காத’

‘ம்’

‘என்ன?.’

‘சரி. எடுத்துக்கல’.

“டேபிள் மேல உப்புமா இருக்கு”

கமலத்தின் குரல் ஹாலிலிருந்து கேட்க பாலாவிற்கு புன்னகை வந்தது.

***

நான்கு நாட்கள் கழிந்திருந்தன. பாலா என்னதான் தன் மனதிற்கு கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டாலும் ஜனனி அவன் முன் வந்து பாலா என்றால் தன்னையும் மீறி பாகாய் உருகிப் போனான்.

ஒரு நாள் அவளைப் பார்க்கவில்லையென்றாலும் எதையோ இழந்தாற் போல் எதிலும் பிடிப்பின்றி இருந்தது அவன் மனம்.

அன்று உணவு இடைவேளை முடிந்து தன் இருக்கையில் அமர்ந்து பாலா வருகைப் பதிவு விவரங்கள் கம்ப்யூட்டரில் டைப் செய்து கொண்டிருக்க

கணேஷ் அழைத்தான்

“பாலா”

“ம்”

“உனக்கு ஒரு ரெஜிஸ்டர்ட் போஸ்ட் வந்திருக்கு”

கணேஷ் சொல்ல பாலா நிமிர்ந்து பார்த்தான்.

தபால்காரர் நின்றிருந்தார். புன்னகைத்தார்.

குழப்பத்துடன் கையெழுத்துப் போட்டுக் கவரை வாங்கிய பாலா கவரைப் பிரித்தான்.

உள்ளே ஒரு கடிதமும் ஒரு செக் கும் இருந்தன.

என்னவென்று பார்த்தான்.

‘மதிப்பிற்குரிய பாலமுருகன் அவர்களுக்கு

தங்கள் நாவல் ராணிமுத்துவில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்துடன் தொகை ஐந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையும் இணைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெற்றுக்கொண்டமைக்கு அக்னாலேஜ்மென்ட் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

எடிட்டர்
ராணிமுத்து’

பாலாவுடன் ஒட்டி நின்ற கணேஷ் எல்லாவற்றையும் படித்தான்.

“வாவ் கலக்கிட்டே பாலா கை கொடு”.

பாலா பேச்சற்று நின்றிருந்தான்.

‘எப்படி இது சாத்தியம்? ‘

“பாலா என்னாச்சு?” கணேஷ் பாலாவின் முகத்தைப் பார்க்க பாலாவின் கண்கள் கலங்கியிருந்தன.

“கணேஷ்”

“ம்”

“என்னால் எதுவும் நம்ப முடியல”

“ஏன்? நீ அனுப்பினது செலக்ட் ஆயிருக்கு அவ்வளவு தானே? பெருமையா இருக்கு பாலா உண்மையா.”

“கணேஷ்”

“சொல்லு பாலா”

“நான் கதையை அனுப்பல.”

“என்ன சொல்ற? நீ அனுப்பலயா?”

“ம். ஆமா.”

“அப்போ யார் அனுப்பினா?”

***

“நான்தான் அனுப்பிச்சேன் பாலா. எனக்கு நம்பிக்கை இருந்துச்சு கண்டிப்பா செலக்ட் ஆகும்னு. உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் உங்ககிட்ட சொல்லல”

ஜனனி சொல்ல பாலா இரண்டு கைகள் எடுதது அவளைக் கும்பிட்டான்.

“அய்யோ பாலா என்ன பண்றீங்க? கைய கீழ இறக்குங்க.”

பாலா கைகளைக் கீழே இறக்கினான். நெகிழ்ந்திருந்தான்.

“ரைட்டர் சார்” ஜனனி அழைக்க பாலா திகைப்பாய் பார்த்தான்.

“இனி அப்படித்தான் உங்கள எல்லாரும் கூப்பிடுவாங்க”

புன்னகைத்தாள்.

“மத்தவங்க எப்படி வேணாலும் கூப்பிட்டுப் போகட்டும் நீங்க என்ன பாலான்னேக் கூப்பிடுங்க”

“உங்க கதையை யாருமே படிக்கலைன்னு ஃபீல் பண்ணுவீங்க. இனி தமிழ்நாடு ஃபுல்லா படிக்கும். சந்தோசமா?” ஜனனி கேட்க பாலா நெகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.

“ஆமா எனக்கு எதுவும் தரவே இல்லை நீங்க?”

ஜனனி கேட்க

“சொல்லுங்க என்ன வேணும் உங்களுக்கு? எது வேணும்னாலும் தரேன்.”

பாலா சொல்ல ஜனனி அவனை தீர்க்கமாய் ஊடுருவிப் பார்த்தாள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!