Home Featuredஜனனி 3

ஜனனி 3

by GK Tamil Novels
52 views

பாலமுருகன் தன் வேலையில் மும்முரமாக மூழ்கியிருக்க

“சார்” என்ற குரல் அவன் கவனத்தைக் கலைத்தது.

நிமிர்ந்து பார்த்தான்.

ஜனனி நின்றிருந்தாள். புன்னகைத்தாள்.

பாலமுருகன் ஒருக்கணம் சுவாசிக்க மறந்தான்.

“சார்” மீண்டும் ஜனனி கூப்பிட தன்னிலைக்கு வந்தவன்

“யெஸ் மேடம் சொல்லுங்க” என்றான்.

“அடுத்த வாரம் நான் ரெண்டு நாள் லீவ்” ஜனனி சொல்ல பாலமுருகன் கேட்டான்.

“பிரின்ஸ்பால் சாங்ஷன் பண்ணிட்டாரா?”

“இல்ல டேபிள்ல வச்சிருக்கேன். சார் சேம்பர்ல இல்ல.”

“சரி மேடம் சார் வந்தா நான் சொல்லிடறேன்.”

எதுக்காக லீவ் என்று கேட்க நினைத்தான். ஆனால் கேட்டால் தவறாகிவிடும் என்று அந்த கேள்வியைத் தவிர்த்தான்.

“தேங்க்யூ சார்” சொல்லி விட்டுத் திரும்பிய ஜனனி மீண்டும் அவனை அழைத்தாள்

“சார்”

“சொல்லுங்க மேடம்”

“நாவல் சூப்பரா இருக்கு சார்.”

ஜனனி சொல்ல பாலமுருகன் தன் தலையில் பனிக்கட்டி பொழிவது போல் உணர்ந்தான்.

ஒரு நிமிடம் அவனுக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. முதன்முறையாக அவன் வாழ்க்கையில் அவனை பாராட்டிப் பேசும் ஒருவரைப் பார்த்ததில் பேச மறந்துபோய் ஜனனியையேப் பார்த்தான்.

“சார் ஆர் யூ ஓகே?”

தன் உணர்வுகளை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டு

“யெஸ் மேடம்” என்றான்.

“தேங்க்யூ சோ மச் மேடம்.”

“நான் என்ன பெருசா சொல்லிட்டேன்? தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க.”

“நீங்க சொன்னது சாதாரணமான வார்த்தையா இருக்கலாம். எனக்கு ரொம்ப நாளா நான் கேட்க ஆசைப்பட்ட வார்த்தை. யாராச்சும் சொல்ல மாட்டாங்களா யாராச்சும் என் கதையைப் படிக்க மாட்டாங்களான்னு எத்தனையோ நாள் நெனச்சிருக்கேன். நீங்க இப்ப சொன்ன வார்த்தை எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருக்குன்னு எப்படி சொல்றதுன்னு எனக்குத் தெரியல மேடம்.”

“இட்ஸ் ஓகே பி கூல்” ஜனனி புன்னகைத்தாள்.

“மேடம்”

“யெஸ்”

“உங்ககிட்ட என்னோட கதை எப்படி வந்துச்சு?”

“வளர்மதிக்காவும் நானும் ஒண்ணாத்தான் போவோம்.”

பாலமுருகனுக்குப் புரிந்தது.

“தேங்க்ஸ் மேடம்”

பாலமுருகன் சொல்ல தலையசைத்த ஜனனி புன்னகைத்தபடி சென்றுவிட்டாள்.

“என்ன பாலா ரொம்ப சந்தோசமா இருக்கே?” நடந்தவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த கணேஷ் பாலாவிடம் புன்னகைத்தபடி கேட்டான்.

“என்னோட நாவல் நல்லா இருக்குன்னு சொல்லிட்டுப் போனாங்க.”

“ஒருவேளை படிச்சிருக்க மாட்டாங்கன்னு நெனைக்கிறேன். படிச்சிருந்தா அந்தமாதிரி சொல்ல முடியாதுதானே?”

கணேஷ் சிரிக்க பாலா முறைத்தான்.

“ஓகே ஓகே பாலா காமெடிக்குச் சொன்னேன்.”

“கணேஷ் நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் எது வேணாலும் கேளு.”

“இதே மாதிரி எப்பவும் சந்தோசமா இரு அது போதும்.”

“இல்ல நான் உனக்கு ஏதாவது வாங்கித் தரணும் போல இருக்கு”

பாலா சொல்ல கணேஷ் சிரித்தான்.

“சரி ஈவினிங் சிம்னி ரெஸ்டாரண்ட்ல டின்னர்” கணேஷ் சொல்ல பாலா “ஓகே” என்று தலையசைத்தான்.

சிம்னி ரெஸ்டாரண்ட்.

மங்கலான வெளிச்சத்தில் கணேஷ் பாலா இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.

“பாலா”

“ம்”

“ஒண்ணு சொல்றேன் தப்பா நினைச்சுக்காத”

“சொல்லு கணேஷ் நீ என்னோட ஃப்ரெண்ட். எதுவானாலும் சொல்லு.”

“ஜனனி வந்து கதை நல்லா இருக்குன்னு சொன்னா உடனே நீ ரொம்ப ஓவரா அவ கிட்ட ரியாக்ட் பண்ண மாதிரி இருந்துச்சு.”

“அப்படியா இருந்துச்சு?”

“ஆமா. கெத்து எப்பவுமே இருக்கணும் அதை விட்டுக்கொடுக்கக் கூடாது. அப்புறம் மரியாதை போய்டும்.”

“இல்ல திடீர்னு வந்து கதை நல்லா இருக்குன்னு சொன்னவுடனே ரொம்ப எமோஷனல் ஆயிட்டேன்.”

“கதை எழுதுனது நீ. கதை எப்படி இருக்குன்னு உனக்கு முதல்ல தெரிஞ்சுருக்கணும். மத்தவங்க நல்லா இருக்குன்னு சொன்னாலும் சரி நல்லா இல்லைன்னு சொன்னாலும் சரி அதனால அதிகமா பாதிக்கப்படக்கூடாது.
நல்லா இருக்குன்னு சொல்றாங்களா சந்தோசம் நல்லா இல்லைன்னு சொல்றாங்களா ரொம்ப சந்தோஷம் அவ்வளவுதான். மைண்ட் செட் அப்படி ஃபிக்ஸ் பண்ணிக்கோ அதுதான் உனக்கு ரொம்ப நல்லது”

சொன்ன கணேஷைப் புன்னகையுடன் பார்த்தான் பாலா.

“எப்படி கணேஷ் தெளிவா இருக்கே?”

“நாங்க பெரிய குடும்பத்தில் இருக்கிறவங்க. எங்கப்பா கூட பொறந்தது நாலு பேர். அவங்க குடும்பம் எங்க குடும்பம் எல்லோரும் ஒண்ணா இருக்கோம். சொந்த பந்தம் நம்மைச் சுத்தி நிறைய பேர் இருந்தா அவங்களே வாழ்க்கைக்குத் தேவையான பாடத்தைக் கத்துக் குடுத்துடுவாங்க.”

கணேஷ் சிரித்தபடி சொல்ல
பாலா புன்னகைத்தான்.

***

பாலமுருகன் அன்று பள்ளிக்கு சீக்கிரமே வந்து விட்டான்.

ஜனனி இரு நாட்கள் லீவு முடிந்து இன்று வர வேண்டிய நாள்.

வருகைப் பதிவேடு எடுத்துப் பார்த்தான். ஜனனியின் கையெழுத்து இல்லை. இன்னும் வரவில்லை போலிருக்கிறது.

தன் இருக்கையில் போய் அமர்ந்தான்.

வழக்கமாக எதையாவது எழுதுபவன் அன்று ஒன்றும் எழுதாமல் வாசலைப் பார்த்தபடி இருந்தான்.

அவன் விழிகள் மலர்ந்தன.

ஜனனி அன்று மலர்ந்த பூவைப் போல் புதிதாய் அவனுக்கு தென்பட்டாள்.

“குட் மார்னிங் சார்”

ஜனனி சொல்ல

“குட் மார்னிங் மேடம் லீவ் முடிஞ்சதா?”

“ம்” புன்னகைத்தாள்.

“ஊருக்குப் போயிருந்தீங்களா?” பாலமுருகன் ஒருவாறாகக் கேட்டுவிட

ஜனனி முகம் மாறியது.

“எனக்குன்னு யாரும் இல்ல சார் ”

சொன்னவள் போய்விட்டாள்.

பாலமுருகன் திகைத்து நின்றான்.

அப்படி என்றால் என்ன பொருள்?

எனக்குன்னு யாரும் இல்ல சார்.

சொந்தம் ஒன்றுமில்லை என்று எடுப்பதா? அப்படி என்றால் ஜனனி யாருமில்லாத பெண்ணா?

அன்று காலையில் பாலாவிற்கு வேலை ஓடவில்லை.

மாலை மூன்று மணிக்கு கேண்டீனுக்குப் போன பாலாவின் பார்வையில் ஜனனி பட்டுவிட

“ஸாரி மேடம் நான் கேட்டது தப்பு”

பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்.

“ஐயோ சார் நான் உண்மையத்தான் சொன்னேன். நிஜமாவே எனக்குன்னு யாருமில்லை. சின்ன வயசுலயே பேரண்ட்ஸ் தவறிட்டாங்க.
நானும் என்னோட ஃப்ரெண்டு ஒருத்தியும் சம்பத் நகரில் வீடு எடுத்து தங்கியிருக்கோம்.”

சொன்னவள் பாலமுருகனிடம் இயல்பாய் திரும்பிக் கேட்டாள்.

“காஃபி ஆர் டீ?”

“காஃபி”

காஃபி வாங்கிக் கொண்டு சென்று அமர்ந்தனர்.

“இல்ல ரெண்டு நாள் லீவுனு சொன்னவுடனே டக்குனு தோணுச்சு அதான் கேட்டேன்.”

“எங்க ஃபிரண்ட் ஒருத்திக்கு மதுரையில் கல்யாணம். அதான் போயிருந்தேன்.”

“ஓகே மேடம்.”

“சார் ஒண்ணு சொல்லவா?”

“சொல்லுங்க மேடம்”

“மேடத்தை கட் பண்ணுங்க. ரொம்ப வயசான ஃபீல் வருது. ஜனனின்னு கூப்பிடுங்க”

“அய்யோ நீங்க டீச்சருங்க”

“அது பசங்களுக்கு உங்களுக்கு இல்லை.”

ஜனனி புன்னகைக்க பாலா சிரித்தான்.

“அப்போ நீங்களும் பாலான்னே கூப்பிடலாமே”

“நிஜமா நான் கூப்பிடுவேன். அப்புறம் ஏன்டா கூப்பிடச் சொன்னீங்கன்னு நீங்க வருத்தப்படக்கூடாது.”

ஜனனி சொல்ல

பாலா புன்னகைத்தான்.

“நிஜமாத்தான் சொல்றேன்”

“ஓகேங்க. எனக்கு உங்க கூட கொஞ்சம் பேசணும்னு தோணிச்சு”

ஜனனி சொல்ல பாலாவிற்கு மீண்டும் அவன் தலையில் அருவி கொட்டியது போல் உணர்ந்தான்.

“சொல்லுங்க”

“உங்க நாவல் நல்லா இருக்கு. ஆனா ப்ரசன்டேஷன் இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணணும்”

“என்ன பண்ணனும்?”

“பேரகிராஃப் ரொம்ப பெருசா இருக்கு. சின்னச் சின்ன வாக்கியங்களாப் பிரிச்சு எழுதுங்க.

வசனங்கள் கரெக்டா மேற்கோள் காட்டுங்க. ஒரு சாப்டருக்கும் இன்னொரு சாப்டருக்கும் தொடர்பு நல்லா இருந்தாலும் ஒவ்வொரு சாப்டர் முடிவிலயும் ஒரு குட்டி சஸ்பென்ஸ் வைங்க. இதெல்லாம் பண்ணிங்கன்னா எப்போ உங்க புக் வரும்னு எல்லாரும் காத்திருப்பாங்க.”

“நிஜமாவா சொல்றீங்க?”

“சத்தியம். நீங்க ஜெயிச்சதுக்கப்புறம் நினைச்சுப் பார்ப்பீங்க ”

“ஜெயிக்கிறேனா இல்லையான்னு தெரியல. ஆனா நீங்க சொல்றது கேட்கும்போது ரொம்ப நல்லா இருக்குங்க. ரொம்ப நன்றிங்க.”

“காஃபி ஆறுது பாலா” சொன்ன ஜனனி சட்டென்று தன் நாக்கைக் கடித்துக் கொண்டாள்

“ஸாரி பேர் சொல்லிட்டேன்” ஜனனி சொல்ல பாலா புன்னகைத்தான்.

“நீங்க என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க. என்னோட பேர் இப்பத்தான் அழகா இருக்கிற மாதிரி ஃபீல் பண்றேன்.”

You may also like

Leave a Comment

error: Content is protected !!