Home Featuredஜனனி 6

ஜனனி 6

by GK Tamil Novels
46 views

தன்னையே ஊடுருவிப் பார்த்த ஜனனியை திகைப்பாய் பார்த்தான் பாலா.

“என்னாச்சுங்க? ஏன் ஒரு மாதிரி பார்க்கறீங்க?”

“பாலா எனக்கு என்ன வேணும்னாலும் கொடுப்பீங்களா?”

“நிச்சயமா”

“வாக்குத் தவற மாட்டீங்க தானே?”

“மாட்டேன்.”

“எனக்கு உண்மை வேனும்.”

“உண்மையா?”

“ஆமா எனக்கு உண்மை தான் வேணும்.”

“என்ன உண்மை?”

“கொஞ்ச நாள் முன்னாடி பாட்டில் வாங்கினீங்களே. எதுக்கு? என்ன பிரச்னை உங்களுக்கு?”

ஜனனி அதை ஞாபகம் வைத்து கேட்பாள் என்று பாலா எதிர்பார்க்கவில்லை.

“அதை விடுங்க அது ஒண்ணுமில்ல”

“பாலா ப்ளீஸ் வாக்கு கொடுத்திருக்கீங்க.” ஜனனி பாலாவை நேர்பார்வை பார்த்தபடி புன்னகைத்தாள்.

கொஞ்ச நேரம் தயங்கிய பாலா சொல்ல ஆரம்பித்தான்.

“நைட் தூக்கம் வரமாட்டேங்குது. அதான் ட்ரிங்க்ஸ் அடிச்சுப் பார்த்தாலாவது தூக்கம் வருமான்னு வாங்கினேன். ஆனா வாங்கின முதல்நாளே உங்ககிட்ட மாட்டிக்கிட்டேன்.”

பாலா சொல்ல ஜனனி சிரித்தாள்.

“தூக்கம் வரலன்னா நிறைய வழிமுறை இருக்கு. புக் படிக்கலாம். பாட்டு கேட்கலாம். இல்ல நீங்களும் உங்க மனைவியும் பால்கனியில் உட்கார்ந்து பேசலாம். அவங்களைக் கொஞ்சலாம். இப்படி எத்தனையோ லாம் இருக்கே.”

“இருக்கு ஆனா எதுவுமே நடக்காம இருந்தா என்ன பண்றது?”

தன்னையும் மீறி எதையோ சொல்லி விட்ட பாலமுருகன் சுதாரித்துக் கொண்டான்.

“பாலா என்ன சொன்னீங்க திரும்ப சொல்லுங்க கம் அகெயின்.”

“இல்ல நத்திங் ஒண்ணும் இல்ல”

“ப்ளீஸ் பாலா. உங்களுக்கு ஏதாவது பிரச்னைன்னா என்கிட்ட சொல்லத் தயங்காதீங்க. சந்தோசத்தைப் பகிர்ந்தா அதிகமாகும் துக்கத்தைப் பகிர்ந்தா குறையும்னு உங்களுக்கு நல்லாத் தெரியும்.”

“ம்”

கொஞ்ச நேரம் யோசித்த ஜனனி பாலாவின் கண்களைப் பார்த்து கேட்டாள்.

“பாலா நீங்க சந்தோசமா இல்லையா?”

“புரியல.”

“ஐ மீன் நீங்களும் உங்க மனைவியும்”

பாலா மௌனமானான்.

“சொல்லுங்க பாலா.”

“அதான் பாட்டில் வாங்கிட்டுப் போகும்போதே தெரியலையா?”

பாலா மெதுவாகக் கேட்க

“சாரி பாலா ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி.”

“நீங்க ஒண்ணும் தப்பு பண்ணலங்க. சாரி சொல்லாதீங்க ப்ளீஸ்”

“ம்”

“ஜனனி”

“ம்”

“ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே?”

“இல்ல”

“நீங்க சீரியஸா மூஞ்சிய வெச்சுட்டு வருத்தமா இருக்கிறது பார்க்கறதுக்கு சுத்தமா நல்லா இல்ல.”

“ம்”

“உங்களுக்கு பெரிய பிளஸ். உங்க முகத்துல எப்பவுமே இருக்கிற அழகானபுன்னகை. அது எப்பவுமே இருக்கணும். அப்பத்தான் எனக்கு உங்களைப் பிடிக்கும்”

பாலா சொல்ல ஜனனியின் கண்களில் மின்னல்.

***

சம்பத் நகர்.

பொழுது விடிந்திருந்தது.

“ஜனனி ”

“ஜனனி”

உடன் தங்கியிருக்கும் தோழி கயல்விழி ஜனனியை எழுப்பினாள்.

“என்ன கயல்?” ஜனனி தூக்கக் கலக்கத்துடன் கேட்க

“பால் வாங்கிட்டு வர்றது இன்னிக்கு உன்னோட முறை. எழுந்து போய் வாங்கிட்டு வா.”

“ப்ளீஸ் கயல். நீயே போய்ட்டுவா எனக்குத் தூக்கம் வருது. ”

“முடியாது. போன வாரம் ஃபுல்லா நான்தான் வாங்கினேன். இப்ப நீ படுக்கையிலிருந்து எந்திரிக்கலன்னா தண்ணி கொண்டுவந்து மூஞ்சில அடிப்பேன்”.

கயல்விழி சொல்ல ஜனனி போர்வையை விலக்கி கயலைப் பார்த்து சிரித்தாள்.

அவள் சிரிப்பைப் பார்த்த கயலின் கோபம் மறைந்தது. அருகில் வந்து ஜனனியைப் பார்த்தாள்.

“சரி தூங்கு நானே போய் வாங்கிட்டு வரேன்.”

சொன்ன கயலைப் பார்த்து சிரித்த ஜனனி

“தெரியும் நீ வழிக்கு வருவேன்னு”

“அதென்னமோ தெரியலடி உன் மேல எவ்வளவு கோபம் இருந்தாலும் நீ சிரிச்சா டக்குன்னு மனசு அப்படியே மாறிடுது ஜனனி.”

கயல் சொல்ல ஜனனிக்கு பாலாவின் நினைவு வந்தது.

‘உங்களுக்கு பெரிய பிளஸ். உங்க முகத்துல எப்பவுமே இருக்கிற அழகானபுன்னகை. அது எப்பவுமே இருக்கணும்’

‘பாலா. நீங்க உண்மையிலேயே ரொம்ப ஜென்டில்மேன். இது வரைக்கும் எத்தனையோ முறை பேசியிருக்கோம். ஒருமுறை கூட தப்பா பார்த்ததில்லை நீங்க. ரொம்பவும் மரியாதையா தன்மையா பேசறீங்க. நான் சொன்னேன்னு பாட்டிலை திருப்பிக் கொடுத்திருக்கீங்க. எவ்வளவு டேலண்ட் உங்களுக்கு. நூறு பக்க நாவலை மூணு நாள்ல எழுதறீங்க. படிச்சுப் பார்த்தா ஒவ்வொரு கேரக்டரும் கூட நின்னு பேசற மாதிரி இருக்கு. நீங்க கண்டிப்பா ரொம்ப உயரத்துக்கு போவீங்க. உங்களோட வெளிப்படையான பேச்சும் அப்பாவித்தனமும் என்னை உங்க பக்கம் முழுமையா ஈர்த்துடுச்சு பாலா. வீட்ல பிரச்னை சந்தோசமா இல்லன்னு நீங்க சொல்லும் போது உங்கள இழுத்து என் மடியில் போட்டுக்கணும்னு தோணுச்சு.
உங்க தலைமுடியைக் கோதிவிட்டு பாலா உங்களுக்காக நான் இருக்கேன்னு கத்தணும்னு தோணுச்சு. எனக்கேத் தெரியாம எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சுப் போச்சு பாலா. என்னைக்காவது என்னோட மனசு உங்களுக்குப் புரியும். புரியலன்னாலும் பரவாயில்லை. உங்க கூடத்தான் இருப்பேன் எப்பவும் உங்களுக்கு ஒரு சினேகிதியா.’

ஜனனி தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.

“என்னடி ஆச்சு நீயே சிரிக்கிற?” கயல்விழி கேட்க

“ஒண்ணுமில்ல கயல்” சொன்னபடி ஜனனி கயலை அணைத்துக்கொண்டாள்.

“என்னாச்சுடி உனக்கு? விடு என்னை”

“விடமாட்டேன் நீ என்னோட உயிர்த் தோழி”

ஜனனி புன்னகையுடன் சொல்ல

“அப்படியா அப்போ உயிர்த் தோழிக்கு காஃபி வேணும். போய் பால் வாங்கிட்டு வந்து காஃபி போட்டுக்குடு போ.”

கயல்விழி சிரித்தபடி கூற ஜனனி சுடிதார் அணிந்து கொண்டு கிளம்பினாள்.

பூத்திற்கு சென்று வரிசையில் நின்று பாக்கெட் பால் வாங்கிக் கொண்டு திரும்புகையில் அவன் எதிர்ப்பட்டான். ஜனனியைப் பார்த்து புன்னகைக்க முயன்றான். ஜனனி அவனைக் கண்டு கொள்ளாமல் விறுவிறுவென்று நடந்தாள்.

அவன் அவள் பின்னால் ஓடி வந்தான்.

“ஜனனி ஒரு நிமிஷம் நில்லு ப்ளீஸ்”

ஜனனி நிற்கவில்லை. நடையைத் தொடர்ந்தாள்.

அவன் கூட நடந்தபடியே பேசத் தொடங்கினான்.

“எனக்கு ஒரு பதில் சொல்லு ஜனனி. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீ இல்லாம என்னால இருக்க முடியாது.”

அவன் மூச்சு விடாமல் மனப்பாடம் செய்தது போல் எல்லாவற்றையும் ஒப்பிக்க ஜனனி அவனை அலட்சியப்படுத்தியபடி நடந்தாள்.

“நான் செத்துடுவேன் ஜனனி. கண்டிப்பா செத்துடுவேன்”. அவன் சத்தம் போட ஜனனி நின்றாள்.

“எதுக்காக சாகணும் அருண்? ” அவனிடம் கேட்டாள். அவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவளைப் பார்த்தான்.

“எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் நீ இல்லாத வாழ்க்கை எனக்குத் தேவையில்ல. அதான்.”

“அசிங்கமா இல்லையா அருண்?
நீ முதல் முறையா உன்னோட காதலை சொல்லும்போதே எனக்கு உன் மேல எந்த ஈடுபாடும் இல்லன்னு சொல்லிட்டேன். அதுக்கப்புறமும் விடாமல் நான் எங்கெங்கே போறேனோ அங்கெல்லாம் நீயும் வந்து நிக்கறே. மூஞ்சிய பாவமாக வெச்சிட்டு பார்க்கறே. இப்படியெல்லாம் பண்ணா உன் மேல எனக்கு லவ் வரும்னு நினைக்கிறியா? பரிதாபம் தான் வருது. லவ்ங்கிறது வேற.அது உன் மேல என்னிக்கும் எனக்கு வராது. என் பின்னால சுத்தறது எனக்கு டார்ச்சரா இருக்கு. ஒருமாதிரி அன் ஈஸியா இருக்கு. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ”

“ப்ளீஸ் அப்படி சொல்லாத ஜனனி. நீ இல்லைனா நான் செத்துடுவேன்.”

“முட்டாள் மாதிரி பேசாத அருண். நீ படிச்சிருக்கே. ஒரு நல்ல வேலையில் இருக்கே. லவ் னா என்னன்னு புரியல உனக்கு. செத்துடுவேன்னு சொல்லி பயமுறுத்தினா காதல் வரும்னு நினைக்கறியா அருண்? நெவர். ”

“ஜனனி ப்ளீஸ்”

“நான் உங்கிட்ட சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன். இதுக்கப்புறமும் நீ சாக ஆசைப்பட்டா அது உன்னோட விருப்பம். அப்படி செத்துத்தான் போவேன்னு நீ அடம்பிடிச்சா அது உன்னோட விருப்பம். நான் ஒண்ணும் தடை சொல்லப் போறதில்ல. உன் மனசு சொல்றபடி நீ செய்.”

சொன்ன ஜனனி அங்கிருந்து போய் விட அவளையே முறைத்தபடி அங்கேயே நின்றான் அருண்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!