Home Featuredஜனனி 4

ஜனனி 4

by GK Tamil Novels
42 views

அலுவலகப் பணிகள் முடிந்த ஒரு மாலை வேளை.

பாலா அமைதியாக உட்கார்ந்திருந்தான். பள்ளி வெறிச்சோடியிருந்தது.

பள்ளியின் வேலை நேரம் மாலை முன்றரை வரை மட்டுமே.

பள்ளியின் அலுவலகம் ஐந்து மணி வரை இயங்கும். வேலையைப் பொறுத்து அது ஆறு மணி வரை கூடப் போகும். பாலாவிற்கு வீட்டைவிட அலுவலகம் தான் பிடித்திருந்தது.

சில நேரங்களில் வேலை சீக்கிரமாக முடிந்தால் கூட வேண்டுமென்று தாமதித்து தான் வீட்டுக்கு செல்வான்.

இன்று அனைவரும் போய் விட்டனர். என்ன செய்வது?

பாலா யோசித்தான்.

தினமும் உறங்குவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கிறது. கணேஷிடம் ஒருநாள் ஜாடைமாடையாக தெரிவிக்க அவன் புரிந்துகொண்டான்.

“தெரிஞ்ச இடம் இருக்கு போலாமா?”
ஒருநாள் அவன் கேட்க பாலா எக்கச்சக்கமாய் அதிர்ந்தான்.

“அது வேண்டாம். எனக்குப் பிடிக்கல”

“என்ன தப்பு?”

“அப்படி இருக்கிற ஒவ்வொருத்தரோட சூழ்நிலையும் சரியா இருந்தா அவங்க அப்படி இருக்க மாட்டாங்க. அவங்களோட சூழ்நிலையை நாம பயன்படுத்திக்கறோம்னு மனசாட்சி குத்தும்.”

“மனசாட்சிய கொஞ்ச நேரம் கழட்டி வச்சிடு”

“கணேஷ் மேற்கொண்டு இதப்பத்தி எதுவும் பேசாத. எனக்குப் பிடிக்கல”

பாலா சீரியஸாக சொல்ல கணேஷ் புரிந்து கொண்டான்.

“சரி வேற ஐடியா சொல்றேன் கேக்கறியா?”

“என்ன சொல்லு”

“பாட்டில்.”

“பாட்டிலா?”

“ஆமா. டெய்லி நைட் ரெண்டு ரவுண்டு சாப்பிடு நல்லா தூக்கம் வரும்.”

“கணேஷ்”

“சொல்லு பாலா”

“தப்பா நினைக்கலன்னா நீ என் கூட வரமுடியுமா வாங்கறதுக்கு?”

“ஏன்?”

“எனக்கு ஒரு மாதிரி இருக்கு யாராச்சும் பார்த்துட்டா என்ன பண்றதுன்னு”

பாலா சொல்ல கணேஷ் விழுந்து விழுந்து சிரித்தான்.

“தமிழ்நாட்டுல பாட்டில் வாங்க இந்தளவு யோசிக்கிற ஒரு ஆளு நீதான் பாலா.கவர்மெண்ட்டே கடை நடத்துது. மூலைக்கு மூலை கடை வச்சிருக்காங்க சின்ன பசங்க எல்லாம் போய் சர்வசாதாரணமா வாங்குறாங்க யாரும் எதைப்பற்றியும் கண்டுக்க மாட்டாங்க. உண்மையான சமத்துவம் அந்த கடையோட வரிசையில் போய் நின்னு பாரு புரியும்”

கணேஷ் சிரித்தபடி சொல்ல பாலாவிற்கு ஓரளவு நம்பிக்கை பிறந்தது.

இன்று எப்படியும் போய் ஒரு பாட்டில் வாங்கி விடுவோம் என்று தீர்மானித்தான்.

பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
பத்து நிமிடப் பயணத்தில் அந்த அரசு மதுபானக் கடை வந்தது. பாலா தயக்கமாய் சுற்றும் முற்றும் பார்த்தான்.

யாரேனும் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா? யாராவது திடீரென்று பார்த்து ஏதும் கேட்டால் என்ன சொல்வது? மனதில் யோசித்தான். பைக்கை கடையை ஒட்டி நிறுத்த வேண்டாம் என்று முடிவு செய்து சற்று தள்ளிப் போய் நிறுத்தினான்

மெதுவாய் வந்து வரிசையில் நின்று கொண்டான். ஏன் இந்த வரிசை வேகமாக நகர மாட்டேன்கிறது?

ஒருவழியாக அவன் முறை வரும்போதுதான் அவனுக்குப் புரிந்தது நிறைய பிராண்டுகள் இருக்கின்றன எதை வாங்குவது என்று கேட்காமல் வந்துவிட்டோம் என்று.

“என்னய்யா வேணும்?” கம்பிக் கூண்டில் நின்ற கடைக்காரன் கேட்க

“ஏதாவது கொடுங்க” என்ற பாலாவை அவன் விசித்திரமாகவும் கோபமாகவும் பார்த்தான்

“எவ்வளவு காசு வெச்சிருக்க?”

“ஐநூறு ரூபாய் இருக்கு”

அவன் உள்ளே சென்று ஒரு பாட்டிலை எடுத்து கொடுத்தான். ஐநூறு ரூபாய் தாளை வாங்கிக்கொண்டு மீதி நூறு ரூபாய் தந்தான்

சட்டென்று பாட்டிலை வாங்கிக்கொண்டு பாலா வெளியே வந்தான்.

விரைவாக பைக்கை அடைந்த பாலாவை

“பாலா” என்னும் குரல் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஜனனி நின்றிருந்தாள்.

பாலா மிகவும் அவமானமாய் உணர்ந்தான். கையில் பாட்டிலுடனிருப்பது ஜனனி பார்த்துவிட்டாள்.

“வந்து” என்று ஏதோ பேச முற்பட்ட பாலாவை பேச விடாமல் முறைத்தாள்.

“கொஞ்சம் என்கூட வாங்க” ஜனனி கூப்பிட பாலா ஒன்றும் சொல்லாமல் அவள் பின் நடந்தான்.

அருகில் இருந்த ஒரு காஃபி ஷாப்பில் நுழைந்தனர்.

எதிரில் அமர்ந்தனர்.

கொஞ்ச நேரம் இருவரும் ஒருவரோடொருவர் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை.

பாலா தலைகுனிந்தபடி அமர்ந்திருக்க ஜனனி கேட்டாள்.

“என்ன பாலா நீங்க இப்படியா? நான் நினைச்சுக் கூடப் பார்க்கல. நீங்க எவ்வளவோ உயரத்துக்குப் போகப் போறீங்க. நான் சொல்றேன் இது நிச்சயம் நடக்கும். இந்த பழக்கம் உங்களுக்கு நிச்சயம் நல்லதில்லை.
யோசிச்சுப் பார்த்தீங்களா? நீங்க ட்ரிங்ஸ் சாப்பிட்டா உங்க மனைவி கஷ்டப்பட மாட்டாங்களா? அவங்களுக்குன்னு ஆயிரம் உணர்வுகள் இருக்கும். அவங்க பாவம் இல்லையா? அவங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா? மனைவியோட உணர்வுக்கு மதிப்பு கொடுக்கணும் பாலா”

ஜனனி வரிசையாகக் கேள்விகள் கேட்க பாலாவின் குனிந்த தலை நிமிரவில்லை.

“பாலா உங்க கிட்ட தான் பேசிட்டுருக்கேன் பேசுங்க”

“ஐ யாம் ஸாரி”

“எதுக்கு ஸாரி? யோசிங்க பாலா. உங்களோட நாவல் படிச்சேன். உங்களுக்கு கற்பனைத்திறன் ரொம்ப ஜாஸ்தி. எழுத்துநடை சான்சே இல்ல. இன்னும் கொஞ்சம் ட்யூன் பண்ணிட்டீங்கன்னா நீங்களும் ஒரு டாப் ரைட்டர் தான். ”

பாலாவின் அமைதி ஜனனியை துணுக்குறச் செய்தது.

“பாலா உங்ககிட்ட நான் ரொம்ப உரிமை எடுத்துக்கிறேனா? அப்படி நினைச்சா சொல்லிடுங்க ஐ யாம் எக்ஸ்ட்ரீம்லி சாரி.”

“அய்யோ ஜனனி அப்படி எல்லாம் இல்ல”

தன்னையும் மீறி ஜனனியின் பெயரை முதல் முறையாகச் சொல்லிவிட்ட பாலமுருகன் ஜனனி என்ன சொல்வாளோ என்று அவளையே பார்க்க ஜனனி புன்னகைத்தாள்.

“ரொம்ப டென்ஷன் ஆய்ட்டீங்க போல. ஜனனின்னு கூப்பிட்டீங்க.”

ஜனனி சிரிப்புடன் சொல்ல பாலா புன்னகைத்தான்.

“காஃபி சாப்பிடுங்க பாலா”

தங்களுக்கு முன் இருந்த காஃபி கோப்பைகளை இருவரும் எடுத்துக் கொண்டனர்.

“ஆமா நீங்க எங்க இந்தப் பக்கம்? ” பாலா ஜனனியைக் கேட்க

“பேப்பர் கரெக்ஷன் இருந்துச்சு நான் ஸ்கூல்ல இருந்து லேட்டாதான் கிளம்பினேன் வழியில். உங்க பைக் பார்த்தேன். சரி வருவீங்க பேசிட்டு போலாம்னு வெயிட் பண்ணேன். ஆனா பாட்டிலோடு உங்களை பார்ப்பேன்னு எதிர்பார்க்கல.”

ஜனனி புன்னகைத்தபடி சொல்ல

“நிஜமா சொல்றேன் இன்னைக்குத தான் தொடங்கலாம்னு வாங்கினேன். ”

“ஏன் அப்படி என்ன கஷ்டம் உங்களுக்கு?”

ஜனனி பாலாவின் கண்களைப் பார்த்து கேட்க பாலா தடுமாறினான்.

“ஒண்ணுமில்ல விடுங்க”

“பரவாயில்லை சொல்லுங்க.”

“நிஜமாவே ஒண்ணுமில்லைங்க”

“எதையோ மறைக்கறீங்க. சரி எப்ப சொல்லணுமோ அப்ப சொல்லுங்க”. சொன்ன ஜனனி கேட்டாள்.

“சரி அந்த பாட்டில் குடுங்க”

“என்ன செய்யப் போறீங்க?”

“உடைச்சிடறேன்”

“அய்யோ வேண்டாங்க அது நானூறு ரூவா. கடைக்காரன் கிட்ட திருப்பிக் கொடுத்துட்டு காசு வாங்கிடறேன்.”

பாலா பாவமாய் சொல்ல ஜனனி விழுந்து விழுந்து சிரித்தாள்.

சிரிப்பினூடே சொன்னாள்

“எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு பாலா”

 

You may also like

Leave a Comment

error: Content is protected !!