Home Featuredஜனனி 9

ஜனனி 9

by GK Tamil Novels
41 views

“பாலா கணேஷ் அழைத்தான்.

“ம்”

“போலாமா?” ஆதரவாய் தோளைத் தொட்டான்.

இருவரும் எழுந்தனர். மண்டபத்தின் வாசலை அடையும்போது பாலா எதார்த்தமாய் திரும்பிப் பார்க்க ஜனனியின் பார்வை பாலாவின் மீது இருந்ததை உணர்ந்தான்.

ஒரு பெருமூச்சு விட்டபடி வெளியேறினான்.

***

பாலமுருகன் சொல்ல வசந்த் அவரைப் பெருமையாகப் பார்த்தான்.

“உங்களுக்கு கஷ்டமா இல்லையா அப்போ?” வசந்த் கேட்க

பாலமுருகன் சிரித்தார்.

“இல்லாம இருக்குமா? அவ எனக்கு வரம் கொடுக்க இந்த பூமிக்கு வந்த தேவதை. என்னோட கல்யாணத்துக்கு முன்னாடி நான் அவளைப் பார்த்திருந்தா இந்த உலகத்திலேயே அதிக சந்தோசமா இருக்கிற ஆள் நானாத்தான் இருந்திருப்பேன். என் விதி அப்படி. பரவாயில்லை. ”

“அதுக்கப்புறம் நீங்க ரெண்டு பேரும் பார்த்துக்கிட்டதில்லையா?”

“உண்டு. அவ வீட்டுக்குப் போய்ருக்கேன். ஒரே ஒரு முறை. அவளுக்கு பையன் பொறந்ததா அருண் போன் பண்ணான். என்னோட தேவதையோட குழந்தை எப்படி இருக்குன்னு பார்க்கறதுக்கு ஆர்வம். அப்போ டெல்லி தமிழ்ச் சங்கத்தில் எனக்கு ஒரு பாராட்டு விழா நிகழ்ச்சி. அவங்ககிட்ட சொல்லிட்டு ரயில் ஏறிட்டேன். மூணு நாள் ரயில்ல நிம்மதியா இருக்க முடியல. எப்போ ஊருக்கு போவேன். எப்ப குழந்தையைப் பார்ப்பேன்னு இருந்துச்சி.ஐயோ இப்ப நினைச்சாக் கூட ஒரு மாதிரியா இருக்கு தம்பி.”

பாலமுருகன் கண்களை மூடிக்கொண்டார். பெருமூச்சு விட்டார்.

“ஊருக்கு போய் இறங்கின உடனே அவள் வீட்டுக்கு ஓடினேன். ”

***

“டிரைவர்”

“சார்”

“கொஞ்சம் வேகமாப் போப்பா”

“யெஸ் சார்.”

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியிருந்த பாலா டாக்ஸி பிடித்திருந்தான்.

டாக்ஸி கால்மணி நேரத்தில் சோலார் தாண்டியது.

போக்குவரத்து நகரை அடைந்த டாக்ஸி இடதுபுறம் திரும்பியது.

“போதும்பா இங்கயே நிறுத்திக்கோ”

பாலா இறங்கினான்.

கையில் பிறந்த குழந்தைக்குத் தேவையான அனைத்தும் பரிசாய் வாங்கியிருந்தான்.

இதயம் அதிகமாகத் துடித்தது.

யாரோ ஒரு வயதான அம்மாள் வெளியே வந்து எட்டிப்பார்த்தார்.

பாலாவைப் பார்த்தவுடன் ஓடி வந்தாள்.

“வாங்க சார் நீங்க ரைட்டர் பாலா சார் தானே?”

“ஆமாங்க.”

“அய்யோ இவ்ளோ சிம்பிளா இருக்கீங்களே என்னால் நம்ப முடியலையே. நான் உங்களைத்தான் பார்க்கிறேனா?”

பாலா புன்னகைத்தான்.

அந்த அம்மாள் உள்ளே ஓடினாள்.

“ஜனனி ஜனனி யார் வந்திருக்காங்க பாரு”

கொஞ்ச நேரத்தில் ஜனனி வெளியே வந்தாள். கொஞ்சம் இளைத்திருந்தாள். அந்தக் குழந்தை முகத்தில் வழக்கமாக இருக்கும் சிரிப்பு இல்லாமலிருந்தது. பாலா உள்ளுக்குள் பதறினான்.

“வாங்க உட்காருங்க” ஜனனி சொல்ல
ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று அமர்ந்தான்.

ஜனனி குழந்தையைக் கொண்டு வந்து கையில் கொடுத்தாள்.

பாலா வாங்கிக் கொண்டான்.

குட்டியாய் ஜனனியைக் குழந்தையாய் பார்ப்பது போல உணர்ந்தான்.

நெஞ்சம் எல்லாம் பரவசம் தாக்கியது.

“பேர் என்ன வச்சிருக்கீங்க?” பாலா கேட்க ஜனனி சொன்னாள்.

“பாலா”

தன்னைத்தான் அழைக்கிறாளோ என்று சட்டென்று நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான்.
புரிந்து கொண்டு ஜனனி சொன்னாள்.

“குழந்தை பெயர் பாலா.”

சட்டென்று பாலாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ஜனனியைக் கும்பிட வேண்டும் போல் தோன்றியது. மௌனமாய் தன் கைக்குட்டை எடுத்துக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

அதை எதிர்பார்க்காத ஜனனி பதறினாள். அருகில் வந்து மெதுவாக அவன் காதில் கேட்கும்படி மட்டும் சொன்னாள்.

“ரொம்ப நாள் கழிச்சு உன்னைப் பார்க்கிறேன் பாலா. திரும்ப அழுதுடாத. என்னால் தாங்க முடியாது.”

“ம்”

“என்ன சாப்பிடற?”

“எது வேணாலும்.”

“கை கழுவு. டிபன் எடுத்து வைக்கிறேன்.”

“ம்”

இட்லி சட்னி கேசரி மூன்றும் தட்டில் கொண்டு வந்து பாலாவின் முன் வைத்தாள் ஜனனி.

பாலா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்தான் அருண்.

“வாங்க சார் எப்ப வந்தீங்க?”

“அரை மணி நேரமாச்சு.”

“சாப்பிடுங்க சார்.”

“ம். நீங்க சாப்பிட்டீங்களா?”

“நீங்க சாப்பிடுங்க சார் நான் அப்புறம் சாப்பிடுறேன்.”

“ம்”

பாலா சாப்பிட்டுமுடித்து சோபாவில் வந்து அமர்ந்தான்.

“ஜனனி “அருண் அழைத்தான்.

“குழந்தையைக் கொண்டுவந்து சார்கிட்ட காட்டும்மா”

ஜனனி மீண்டும் குழந்தையை கொண்டுவந்து காண்பித்தாள்.

பாலா வாங்கிக் கொண்டான்.

“உங்க பேர் தான் சார் வச்சிருக்கோம்”

அருண் சொல்ல பாலா புன்னகைத்தான்.

“தேங்க்ஸ் குமார்.”

“ஜனனி வேறெந்தப் பேரும் வெக்கக்கூடாதுன்னு சொல்லிட்டா”

பாலா ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தான்.

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கேட்டான்.

“குமார் அப்ப நான் கிளம்பட்டுமா?”

“இருங்க சார் மதியம் சாப்பிட்டுப் போலாம்”

“இல்ல குமார் டெல்லியில் இருந்து நேரா இங்க தான் வந்தேன். இனிமே தான் வீட்டுக்குப் போகணும்.”

“சரிங்க சார்.” சொன்ன அருண் ஜனனியை அழைத்தான்.

“ஜனனி சார் கிளம்பறார்.”

ஜனனி வெளியே வந்தாள்.

“அப்போ போய்ட்டு வரவா?” பாலா கேட்டான். ஜனனி தலையசைத்தாள். பார்வை மட்டும் வழக்கம்போல பாலாவை ஊடுருவிப் பார்க்க பாலா திரும்பினான். வெளியேறினான்.

வீட்டிற்கு செல்லும்போது கணேஷைப் பார்த்துவிட்டு வந்தால் என்ன என்று தோன்றியது பாலாவிற்கு.

“டிரைவர் பெரியார் நகர் போங்க”

“யெஸ் சார்.”

கார் லோட்டஸ் ஹாஸ்பிடல் தாண்டியது.

பாலாவின் மனதிற்குள் கலவையான உணர்வுகள். கணேஷைப் பார்த்தால் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என்று தோன்றியது.

பெரியார் நகர் வளைவில் நுழைந்த கார் பூங்காவின் முன் போய் நின்றது. பாலா இறங்கிக் கொண்டான்.

அழைப்பு மணியை அழுத்தினான்.

கணேஷ் வந்து கதவைத் திறந்தான்.

மகிழ்ந்தான்.

“பாலா வா வா எதிர்பார்க்கவே இல்லை. உட்காரு”

வீடு அலங்கோலமாக இருப்பதைப் பார்த்த பாலா கேட்டான்.

“உன் வீட்ல எல்லாரும் எங்க போய்ருக்காங்க?”

“எப்படி பாலா கரெக்டா கண்டு பிடிச்சுட்டே?”

“வீட்டை பார்த்தாலே தெரியுதே”. பாலா புன்னகையுடன் கூற கணேஷ் சிரித்தான்.

“பையனுக்கு ஸ்கூல் லீவு விட்டாங்க அதான் வீட்டுக்காரம்மாவும் பையனும் அவங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்காங்க. சரி நானும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு” சொன்னபடி கணேஷ் பாட்டிலைக் காண்பித்தான்.

“நீ வேற வந்துட்ட. ஜமாய்ச்சுடலாம். என்ன சமைக்கட்டும் சொல்லு. சிக்கனா மட்டனா?”

“எது வேணாலும் நீ செஞ்சு சாப்பிடு நான் வீட்டுக்குப் போறேன். கமலம் தனியா இருப்பா. உன்னப் பார்க்கணும் போல தோணுச்சு. அதான் பார்க்க வந்தேன்.”

“ஜனனி வீட்டுக்குப் போயிருந்தியா?”

“ம்”

புரிந்து கொண்ட கணேஷ் பாலாவின் தோளை ஆதரவாய் தொட்டான்.

“காஃபி சாப்பிடறியா பாலா?”

“ம்”

கணேஷ் கிச்சனுக்குள் சென்று காஃபி கலந்து கொண்டு வந்தான்.

“பாலா”

“ம்”

“நிஜமாவே உன்னை நினைச்சு நான் ரொம்ப பெருமைப் பட்டுருக்கேன் பல நாள்.”

“ம்’

“வீட்ல புரிஞ்சுக்காத மனைவி. ஆனாலும் வெளியே எந்த தப்பும் பண்ணாம இருக்க. தானா ஒரு பொண்ணு தேடி வந்தும் கூட அவளுக்கு எது நல்லதுன்னு பார்க்கிறே. யூ ஆர் ரியலி க்ரேட் பாலா. நான் பொண்ணா இருந்திருந்தா உன்னத்தான் லவ் பண்ணியிருப்பேன்.”

கணேஷ் சொல்ல பாலா விழுந்து விழுந்து சிரித்தான்.

“ஏண்டா இப்படி ஒரு ஆசை?”

***
“அன்னைக்கு நான் சிரிச்சது தான் தம்பி வாழ்க்கையில் நான் கடைசியா சிரிச்சது”

வசந்த் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தான்.

“திரும்ப நீங்க அவங்கள எப்பவுமே பாக்கலையா?”

“பார்த்தேன். ஆனா அதை அவ உணரக் கூடிய நிலையில் இல்லை.”

“அய்யா”

“ஆமா தம்பி. அதுக்கப்புறம் ஒரு ஆறு மாசம் போயிருக்கும். அருண் எனக்கு போன் பண்ணான். என்னோட வாழ்க்கையில அந்த போன் கால் வந்திருக்கக் கூடாதான்னு எத்தனையோ முறை நினைச்சு ஏங்கியிருக்கேன்.”

***

பாலா பால்கனியைப் பார்த்தபடி நின்று கொண்டிருக்க போன் அடித்தது.

“ஹலோ”

“யார் பாலா சாரா?”

“ஆமாங்க”

“நாங்க விகடனில் இருந்து பேசுறோம்.”

“சொல்லுங்க.”

“தீபாவளி மலருக்கு ஒரு பேட்டி கொடுக்க முடியுமா?”

“கண்டிப்பா பண்ணலாம்.”

“ரொம்ப நன்றி சார் அப்போ எப்ப உங்களுக்கு வசதிப்படும்?”

“ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை வாங்க.”

“சரிங்க சார்”

போனை வைத்து விட்டான்.

மீண்டும் ஃபோன் அடித்தது.

எடுத்தான்.

“சார் நான் அருண்குமார் பேசறேன்”

“சொல்லுங்க குமார் ”

“ஜனனி செத்துட்டா.”

ஒரு நிமிடம் பாலாவிற்கு உலகம் சுழன்றது.

“என்ன சொல்றீங்க குமார்?”

“ஜனனி செத்துட்டா சார் உங்களுக்குத் தகவல் சொல்ல போன் பண்ணேன்.”

You may also like

Leave a Comment

error: Content is protected !!