Home Featuredஜனனி 8

ஜனனி 8

by GK Tamil Novels
53 views

கொஞ்ச நேரம் கழித்து ஜனனி விடைபெற்றுப் போய்விட பாலா எழுந்தான்.

நேராக அருண் அமர்ந்திருந்த டேபிளுக்குச் சென்றான். அதை எதிர்பார்க்காத அருண் திகைத்தான்

புன்னகைத்த பாலா கேட்டான்.

“யார் நீங்க? எதுக்காக எங்களை ஃபாலோ பண்றீங்க?”

அருண் கோபமாய் நிமிர்ந்தான்.

“என்ன பிரச்னை பண்ண வந்திருக்கியா?”

கேட்ட அருணின் கோபமான முகத்தை சாந்தமான விழிகளால் பார்த்தான் பாலா.

“இல்ல பிரச்னையைத் தீர்க்கலாம்னு வந்திருக்கேன்”

பாலா அமைதியாக பதில் சொல்ல அருணின் கோபம் சற்று தணிந்தது.

“அது உங்களால் முடியாது”.

“முதல்ல உன்னோட பிரச்னை என்னன்னு சொல்லு. அதுக்கப்புறம் அது என்னால் தீர்க்க முடியுமா முடியாதான்னு நான் சொல்றேன்.”

பாலா அவன் விழிகளைப் பார்க்க அருண் தலைகுனிந்தான்.

“தலை குனியாதே என்னைப் பார்த்துப் பேசு. உன்னோட பிரச்னை என்ன?”

“நான் ஜனனியைக் காதலிக்கிறேன்”

“சரி அது உன்னோட விருப்பம்”

“ஆனா அவ ஒத்துக்க மாட்டேங்கிறா”.

“பாருப்பா. நான் மூணாவது மனுஷன். என்கிட்ட நீ காதலிக்கிற பொண்ணப் பத்தி பேசும்போது மரியாதையாப் பேசணும். அதுதான் நாகரிகம்.”

“ஸாரி”

“சொல்லு”

“அவங்க ஒத்துக்க மாட்டேங்கிறாங்க.”

“அது அவங்க விருப்பம்.”

“என்னால அவங்களை மறக்கமுடியாது”

“யார் உன்னை அவங்களை மறக்கச் சொன்னாங்க? *

“எனக்கு அவங்க வேணும்.”

“அவங்க என்ன உணர்ச்சியில்லாத பொம்மையா? நீ வேணும்னு கேட்டா உடனே கிடைக்கிறதுக்கு? அவங்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கும். இல்லையா அதை நீ மதிக்கணும் .அதானே உனக்கு நல்லது? உன் காதலுக்குப் பெருமை?”

பாலா அவன் கண்களைப் பார்த்து கேட்க

“ஸார் ”

அருண் அழைத்தான். அழ ஆரம்பித்தான்.

“என்னால அவ இல்லாம வாழ முடியாது சார்”

பாலா ஒன்றும் பேசாமல் கொஞ்ச நேரம் அவன் அழுவதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அருண் உனக்கு நான் ஒண்ணு சொல்லட்டுமா?”

“சொல்லுங்க சார்”

“பின்னாடி சுத்தியோ மிரட்டியோ யாரும் யாரையும் காதலிக்க வைக்க முடியாது.”

“சார்”

“உங்க நேசத்தை நான் குறை சொல்லல. யார் வேணாலும் யார வேணாலும் நேசிக்கலாம் தப்பில்லை. ஆனா நாம நேசிக்கிறவங்க நம்மளக் கட்டாயம் திருப்பி நேசிக்கணும்னு எதிர்பார்க்கிறது ரொம்பத்தப்பு.”

“சார்.”

“உங்கள விட வயசுல பெரியாளு நான். ஒரு அண்ணனா சொல்றேன். உங்களோட வேலைய மட்டும் பாருங்க. உங்களப் பார்க்க விரும்பாத பொண்ணு முன்னாடி திரும்ப நின்னு உங்க தன்மானத்தை இழக்காதீங்க.”

“சார்”

“உன் நல்லதுக்குத் தான் சொன்னேன் அருண். நான் சொன்னது புரிஞ்சா நீ ரொம்ப நல்லா இருப்பே. யோசிச்சுப் பாரு. இப்பக் கிளம்பு”

“சார்”

“நீ போலாம் அருண்.”

***
மறுநாள் மாலை
காஃபி ஷாப்.

“என்னப்பா ஏதோ பேசணும்னு கூப்பிட்டு ரொம்ப நேரமா சைலண்டா உக்காந்திருக்கே?”

ஜனனி பாலாவைப் புன்னகையுடன் பார்க்க

“ஜனனி இப்ப நான் சொல்றது கேட்டு நீ கவலைப்படக் கூடாது சங்கடமாகத் கூடாது”

பாலா சொல்ல ஜனனி சிரித்தாள்

“அப்படி என்ன சொல்லப் போற?”

“நேத்து நீ சொன்னது வீட்ல போய் நல்லா யோசிச்சுப் பார்த்தேன். நீ சொன்ன வார்த்தையில் உன்னோட களங்கமில்லாத அன்பு மட்டும்தான் எனக்குத் தெரிஞ்சது. உண்மையா வேற எந்த பொண்ணும் இப்படி சொல்வாங்களான்னு எனக்குத் தெரியாது. அதே நேரத்தில் எனக்கும் பொறுப்புணர்ச்சி இருக்கு. இவ்வளவு பாசம் வச்சிருக்கிற பொண்ண நான் எப்படி பார்க்கணும்? யோசிச்சுப் பார்த்தேன்.

நான் உன்னை ஏத்துக்கிட்டா உனக்கு மனைவி ஸ்தானம் தரமுடியாது.

சமூக அந்தஸ்து உனக்கு கண்டிப்பா கிடைக்காது. நான் ரொம்ப மதிக்கிற பொண்ணு உயிராக நேசிக்கிற பொண்ணு சமூகத்தில் மதிப்பு இல்லாம இருக்கிறது அதுவும் அதுக்கு காரணமே நான்தான்னு நினைக்கும்போது என்னால ஏத்துக்க முடியல.”

பாலா சொல்வது புரிந்தது போல் இருக்க ஜனனி திகைத்தாள்.

“என்ன சொல்ற பாலா?”

“என்ன மன்னிச்சிடு ஜனனி”. ஒற்றை வரியில் பாலா சொல்ல ஜனனி பாலாவைப் பார்த்தாள்.

“அப்போ இனிமே என் கூட பேச மாட்டியா?”

“தயவுசெஞ்சு என்னக் கஷ்டப் படுத்தாத ஜனனி. நான் உன்னை ரொம்பவே நேசிக்கிறேன் ஜனனி. என்னோட நேசம் உன்னை கௌரவப்படுத்தும். கண்டிப்பா களங்கப்படுத்தாது. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.”

ஜனனி ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

“உன்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும் அது எப்படி சொல்றதுன்னு தெரியல”

“சொல்லு பாலா இதுக்கு மேல வேற என்ன சொல்லப் போறே?”

“அருண் ரொம்ப நல்லவன். ”

பாலா அருணைப் பற்றி சொல்ல ஜனனி குழப்பமாகப் பார்த்தாள்.

“உனக்கு எப்படி தெரியும்?”

“நம்மள ரெண்டு முறை ஃபாலோ பண்ணான். நேத்தும் இங்க இருந்தான். நீ போனதுக்கப்புறம் அவனுக்கு அட்வைஸ் பண்ணினேன். உன்ன உயிருக்குயிரா லவ் பண்றான். ”

“யாரு?”

“அருண்.”

“அப்போ நீ பண்றதுக்குப் பேர் என்ன பாலா?” ஜனனி கேட்க பாலா நீண்ட பெருமூச்சு விட்டபடி மௌனமானான்.

“சொல்லு பாலா என்னமோ சொல்ல வந்தே”

“அவன் உன்ன ரொம்ப பிடிச்சதால்தான் எல்லா இடத்துக்கும் வந்து நின்னுருக்கான்.

அவனுக்கு படிப்பிருக்கு நல்ல வேலையிருக்கு. எனக்கென்னமோ அவன் உனக்கு சரியான மேட்ச் னு தோணுது ஜனனி.”

பாலா சொல்ல ஜனனி ஒன்றும் பேசவில்லை.

***

கார் திருப்பூரைத் தாண்டியது.

வசந்த் கதையில் மூழ்கியிருக்க பாலமுருகன் அழைத்தார்.

“தம்பி”

“சொல்லுங்கய்யா”

“அந்த தண்ணி பாட்டில் கொடுங்க”.

வசந்த் வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொடுக்க பாலமுருகன் குடித்தார்.

“கோயம்புத்தூர் வரதுக்குள்ள கதை சொல்லி முடிக்கணும்”. அதான் கொஞ்சம் தண்ணி குடிச்சேன்.

பாலமுருகன் சிரித்தபடி சொன்னார்.

வசந்த் அவரையே பார்த்தான்.

“என்னாச்சு தம்பி?”

“அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா சார்? அந்த அருணைத் தான் கல்யாணம் பண்ணாங்களா?”

வசந்த் ஆர்வமாய் கேட்க அவனைப் புன்னகையுடன் பார்த்தார் பாலமுருகன்.

***

திருமண மண்டபம்.

பாலா கணேஷ் இருவரும் அருகருகில் அமர்ந்திருந்தனர்.

மணக்கோலத்தில் அருண்குமார் ஜனனி இருவரும் நின்றிருந்தனர்.

தான் மனதில் விரும்பியவளை மணம் முடித்த பூரிப்பில் இருந்தான் அருண். ஜனனி மௌனமாய் அனைவரையும் பார்த்தபடி நின்றாள்.

“பாலா வா போய் கிஃப்ட் கொடுத்துட்டு வருவோம்” கணேஷ் அழைக்க பாலா எழுந்தான்.

இருவரும் மண மேடைக்கு அருகில் சென்றனர்.

ஜனனி பாலாவை வழக்கம்போல் ஊடுருவிப் பார்த்தாள். பாலா அருணின் கைகளைப் பற்றி குலுக்கினான்.

“விஷ் யூ போத் எ ஹேப்பி மேரிட் லைஃப்”

பாலா சொல்ல அருண் ஜனனி இருவரும் புன்னகைத்தனர்.

பாலா கீழே வந்து அமரும் போது அவன் அலைபேசி மெசேஜ் டோன் வெளியிட்டது.

எடுத்துப் பார்த்தான்.

ஜனனி.

‘நீ சொன்னபடி அருணை நான் கல்யாணம் பண்ணிட்டேன். உனக்கு சந்தோஷம் தானே பாலா?

விட்டுட்டுப்போயிருந்தாக் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். விட்டுக்கொடுத்துட்டியே பாலா.
ஜனனி’

பாலா குறுஞ்செய்தியை படித்துவிட்டு ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டான்.

9

You may also like

Leave a Comment

error: Content is protected !!