“பயமாயிருக்கு பாண்டி” உஷா இருட்டை பயமாய் பார்த்தபடி சொல்ல பாண்டிக்கு உள்ளே உதறல் எடுத்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் அவளைத் தேற்றினான்.
“பயப்படாத நான் இருக்கேன்”
தோளில் லெதர் பேக்கை மாட்டியிருந்த பாண்டியன் தன் மொபைலை எடுத்து மணி பார்த்தான்.
நேரம் இரவு 11.30.
இந்த ஊர் வழியாக செல்லும் கடைசி பஸ் இந்த நேரத்திற்குத்தான் வரும் என்று திட்டம் போட்டு எல்லோரும் தூங்கிய பின் பாண்டி உஷா இருவரும் ரகசியமாய் காட்டு வழி வந்து மறைவில் காத்திருந்தனர்.
எங்கும் கும்மிருட்டு. சுவர் கோழிகள் கத்தும் சத்தம் மட்டும் கேட்டது.
ஏன் பஸ் இன்னும் வரவில்லை? இன்றைக்கென்று பார்த்து சதி செய்கிறதே.
நேரம் செல்லச் செல்ல பாண்டியின் பதட்டம் அதிகரித்தது.
***
“சாமி வேட்டைக்குப் போறப்ப யாரும் குறுக்க போகக்கூடாது”
முத்து தன் ஆறு வயது மகளிடம் சொல்ல அவள் தன் கண்கள் விரியக் கேட்டாள்.
“ஏன்பா ?”
“வேட்டைக்கு போறப்ப சாமி ரொம்ப உக்கிரமா இருக்கும். அப்படி உக்கிரமா இருக்கிற சாமி கண்டிப்பா காவு வாங்கிடும். அதான்”
“அப்பா”
“சொல்லுமா”
“எவ்வளவு உக்கிரமா இருந்தாலும் சாமி சாமிதானேப்பா ? நல்லவங்க யாராச்சும் குறுக்க வந்துட்டா எப்படிப்பா சாமி காவு வாங்கும் ?”
“அது வந்து…”
“அப்ப சாமிக்கு நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு தெரியாதாப்பா?”
“அப்படி இல்லமா அது வந்து…”
“அதுவே தெரியலன்னா அப்புறம் எப்படிப்பா அது சாமியா இருக்கும்?”
“அதிகபிரசங்கித்தனமா பேசக்கூடாது புரியுதா ? ஸ்கூலுக்கு போய் ரொம்ப கெட்டுப் போயிட்டே நீ”
“கேள்வி கேட்கிறது தப்பாப்பா ?”
“வாய மூடு சும்மா தொணதொணன்னு கேட்டுக்கிட்டு” சொன்ன பழனி தன்மகள் கேட்டது சரிதானே என்று யோசித்தான்.
***
“என்னடா சொல்றே?”
“அவங்க ரெண்டு பேரும் ஒளிஞ்சு ஒளிஞ்சு போனத நான் பார்த்தேங்க”
“எந்தப் பக்கம் போனாங்க?”
“கிழக்காலங்க”
“அங்க எங்க?”
“கருப்பன் கோயில் க்கு பக்கத்துலங்க ..”
மாரிமுத்துவிற்கு புரிந்தது.
அந்த ரெண்டு நாய்களும் ஊரை விட்டு போவதற்காக பேருந்து நிறுத்தத்திற்கு சென்றிருக்கிறார்கள்.
“காளி” அவர் உரத்த குரலில் அழைக்க காளி பதட்டமாக ஓடி வந்தான்.
“சொல்லுங்கய்யா”
“நம்மாளுங்க எத்தனை பேர வேணாலும் கூட்டிட்டுப் போ. அந்த ரெண்டு நாய்களும் இந்த ஊர் மண்ணைத் தாண்டக்கூடாது”
“சரிங்க” சொன்ன காளி அவரைப் பார்த்தான்.
“என்ன காளி?”
“இப்ப டவுனுக்கு போறதுக்கு ஒரு பஸ் இருக்கு கடைசி பஸ். எதுக்கும் அந்த கண்டக்டர்க்கு போன் பண்ணி ஒரு வார்த்தை நீங்க சொல்லிட்டீங்கன்னா பஸ்ல அவங்களை ஏத்த மாட்டாங்க”
காளி சொல்ல மாரிமுத்துவின் முகம் மலர்ந்தது.
உடனே தன் மொபைலை எடுத்தார். காளி சொன்ன கண்டக்டர் நம்பருக்கு டயல் செய்தார். ரிங் போனது. போய்க் கொண்டேயிருந்தது.
***
பாண்டி தவிப்பாய் பஸ் வரும் திசையையே பார்க்க உஷா ஏதோ ஒரு வெளிச்சம் தூரத்தில் வருவதைப் பார்த்து திடுக்கிட்டாள்.
“பாண்டி” கிசுகிசுத்தாள்.
“ம்”
“அது என்ன வெளிச்சம் ?”
“இன்னிக்கு சாமி வேட்டைக்குப் போற நாள்.”
“அப்படின்னா?”
“அது தீப்பந்தம்”
“நாம வேற எங்காவது ஓடிரலாமா?”
“இங்க பாரு பஸ் கரெக்டா வரும் போது நாம உடனே போய் பஸ் ஏறதுக்கு இங்க ஒளிஞ்சிருக்கிறது தான் கரெக்ட்.”
“சாமி வேட்டைக்கு வர்றவங்க கண்ணுல நாம பட்டுட்டா நம்ம கதி என்னன்னு நினைச்சுப் பார்த்தியா?”
“அதான் நாம ஒளிஞ்சு தானே இருக்கோம்? கவலைப்படாத”
“ம்” உஷா மனசின்றி தவிப்பாய் சொல்ல வெளிச்சம் அவளை நெருங்கியது.
***
கண்டக்டர் முருகன் பேருந்தில் இன்னும் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தார்.
ஓர் இளைஞன் மட்டும் தூங்கிக் கொண்டிருக்க யார் இவன் இவனை இதற்கு முன் எங்கும் பார்த்ததில்லையே என்று யோசித்தபடி அருகில் வந்து எழுப்பினார்.
“எங்க இறங்கணும்?”
அவன் சுற்றிலும் பார்த்தபடி சொன்னான்.
“நத்தக்காடையூர்”
“அடுத்த ஸ்டாப் தான்” சொன்ன கண்டக்டர் கேட்டார்.
“தம்பி யாரு? இதுக்கு முன்னாடி பார்த்ததில்லையே ? அங்க யார் வீட்டுக்குப் போகணும்?”
கண்டக்டர் கேட்ட எந்த கேள்விக்கும் அவன் பதில் சொல்லவில்லை ஊர் நெருங்கப் போகிறது என்ற தகவல் தெரிந்ததும் அவன் முகம் மாறியது பேக்கில் இருந்த க்ளவ்ஸை எடுத்து இரண்டு கைகளிலும் அணிந்து கொண்டான். பேக்கில் இருந்த அந்தப் பொருளைப் பார்த்தவன் கண்கள் குரூரமாய் மின்னின. ஏன் ஒரு மாதிரி பார்க்கிறான் என்று யோசித்த கண்டக்டர் அவனுக்கு தெரியாமல் அவன் என்ன பார்க்கிறான் என்று எட்டிப் பார்த்தார். அது பளபளவென்று மின்னிய ஒரு கத்தி.
***

பலி
கவுதம் கருணாநிதி
1
நத்தக்காடையூர்.
விடிந்து கொஞ்ச நேரமாகியிருக்க டீக்கடையில் மாஸ்டர் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்.
“அண்ணா ஒரு கருப்பட்டி காபி”
வளர்மதி கேட்க நிமிர்ந்து பார்த்தவர் முகம் மலர்ந்தது.
“தோ தர்றேன்மா” சொன்னவர் கேட்டார்.
“என்னம்மா நீ மட்டும் வந்திருக்கே?”
“ஆமாண்ணா. அவ இன்னிக்கு லீவ்”
“என்னம்மா ஆச்சு எதுவும் உடம்பு சரியில்லையா?”
“தெரியலண்ணா. நேத்து சாயங்காலமே சொன்னா. லீவுன்னு . இன்னிக்கு வர மாட்டேன்னு சொன்னா”
“சரிமா”
ஒரு கருப்பட்டி காபியை பார்சலாக தூக்குபோசியில் வாங்கிய வளர்மதி தன் வீட்டை நோக்கி நடந்தாள்.
கோவில் வழியாக நடந்தால் சீக்கிரம் போய்விடலாம். யோசித்தவள் கொஞ்ச தூரம் நடந்திருப்பாள். ஏதோ காலுக்கு தட்டுப்பட விழப் போய் சுதாரித்து விழாமல் அது என்னவென்று பார்த்தாள். அது ஒரு லெதர் பேக்.
யாரோடதாக இருக்கும்? இது எப்படி இங்கே ?
யோசித்தவள் இன்னும் கொஞ்ச தூரம் நடக்க உச்சமாய் அதிர்ந்தாள்.
உஷா நிலைத்த விழிகளுடன் கழுத்தில் ரத்தக்கோட்டுடன் இறந்து கிடந்தாள்.
“ஐயோ உஷா” என்று கத்தியபடி ஓடிய வளரின் அழுகுரல் அனைவரின் கவனத்தையும் பெற எல்லோரும் பதறிப் போய் வளர்மதியை பின் தொடர்ந்தனர்.
அவள் இறந்து கிடப்பதையும் பொருட்படுத்தாமல் அவளை தூக்கச் சென்ற வளர்மதியை பின்னால் வந்த ஒரு பெரியவர் தூக்க விடாமல் தடுத்தார்.
“கண்ணு தொடாத போலீஸ் வரணும் போலீஸ் வர்றதுக்குள்ள நாம எதுவும் பண்ணிடக் கூடாது”
அவர் சொல்ல அனைவரும் சற்று இடைவெளி விட்டு நின்றனர்.
சற்று நேரத்தில் போலிஸ் ஜீப் வந்தது.
சப் இன்ஸ்பெக்டர் மனோ முன்னால் வர இரண்டு கான்ஸ்டபிள்கள் பின் தொடர்ந்தனர்.
உஷா இறந்து கிடந்ததை மனோவின் விழிகள் பார்த்தன.
கழுத்துல ஒரு ரத்தக் கோடு. கழுத்தறுத்திருக்கான். டிரஸ் கலையல. அப்ப ரேப் அட்டெம்ட் இருக்க வாய்ப்பில்ல.
யோசித்த மனோ அந்த இடத்தை சுற்றிலும் நன்றாக கவனித்தார். ஓரிடத்தில் ஒரு இன்ஹேலர் கிடைக்க ஒரு கான்ஸ்டபிளுக்கு கண்காட்டினார்.
வேறு எந்த தடயமும் இல்லை என்பதை உறுதி செய்த மனோ கூடியிருந்த கூட்டத்தை ஏறிட்டார்.
“யாரு ஃபர்ஸ்ட் பார்த்தது?”
வளர்மதி அழுதபடி முன்னால் வந்தாள்.
“நான் தான் சார்”
“யாருமா நீ ? என்ன பண்றே?”
“சார் நான் கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல காமர்ஸ் தேர்ட் இயர் படிக்கிறேன்”
“யார் இந்த பொண்ணுன்னு தெரியுமா?”
“தெரியும் சார் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் கிளாஸ்மேட் உஷா”
“சரி சொல்லு”
“நான் டெய்லி காலைல எங்க அப்பாக்கு கருப்பட்டி காபி வாங்கி வச்சுட்டு காலேஜ்க்கு போவேன் சார். இன்னிக்கும் அதே மாதிரி தான் டீ கடைக்கு வந்தேன். வந்துட்டு காபி வாங்கிட்டு வீட்டுக்கு போறப்ப கோவில் வழியாப் போனேன். அப்பதான் இந்த லெதர் பேக் என் கால்ல தட்டுப் பட்டுச்சு” வளர்மதி சொல்ல மனோ கேட்டார்.
“யாரோடது இந்த பேக்?”
“தெரியல சார்”
“அந்தப் பொண்ணோட ரிலேட்டிவ் யாரும் வந்திருக்காங்களா?”
“இல்ல சார் உஷாக்கு அம்மா இல்ல அப்பா மட்டும்தான் அப்பா எங்கயோ மேரேஜ்க்கு போய் இருக்காருன்னு சொன்னா”
“ம் உஷாவோட வீடு எங்க இருக்கு?”
“இங்க இருந்து ரொம்ப பக்கத்துல தான் சார்”
மனோ ஒரு கான்ஸ்டபிளை அழைத்தார்.
“ ஃபாரன்சிக் வரச் சொல்லிடுங்க ஆம்புலன்ஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க .இந்த பொண்ணோட வீட்ல ஏதாவது கிடைக்குதான்னு நாம பார்க்கணும்”
“யெஸ் சார்”
மனோவும் ஒரு கான்ஸ்டபிளும் உஷாவின் வீட்டை நோக்கி நடக்க வளர்மதி உஷாவின் முகத்தையே பார்த்தாள். அவளுக்கு கண்ணீர் வந்தது.
“வளர்”
“ம்”
“நீ யாரையும் லவ் பண்ணிருக்கியா?”
“இல்ல ஏன் கேட்டே?”
“அது ஒரு அற்புதமான ஃபீலிங் எல்லாரும் சொல்றாங்க அதான் கேட்டேன்”
“ஒரு நல்ல புரிஞ்சிக்கிற காதல் அமைஞ்சா அதைவிட வரம் எதுவுமே இல்ல. ஆனா புரிஞ்சிக்காத காதலா இருந்தா அதைவிட சாபமும் வேற எதுவும் இல்ல”
வளர்மதி சொல்ல உஷா அவளை இமைக்காமல் பார்த்தாள்.
“என்னடி அப்படி பார்க்கற?”
“எப்படி இப்படி ?”
“ஏன்?”
“அனுபவமா ?”
“நெருப்பு சுடும் னு சொல்றதுக்கு அனுபவம் எதுக்கு?”
“புரியுது”
“உஷா இப்ப எதுக்கு இந்த கொஸ்டின் கேட்டே?”
“சும்மாதான்”
“கேடி உண்மையை சொல்லு”
“ப்ராமிஸா சும்மாதான் கேட்டேன்”
“ம்”
ஒருவேளை உஷாவின் இந்த நிலைமைக்கு காதல் கூட காரணமாக இருக்கலாமோ? சரியாகத் தெரியாமல் என்னவென்று நான் யாரிடம் சொல்வது?
வளர்மதி தனக்குள் தவித்தாள்.
“இதுதான் சார் உஷா வீடு” ஒருவன் சொல்ல மனோ வெளியில் இருந்து வீட்டைப் பார்த்தார்.
ஒரு மிடில் கிளாஸ் என்பது புரிந்தது. போலீசை பார்த்ததும் அனைவரும் ரகசியமாக தங்களுக்குள் பேசியபடி பயமாய் பார்த்தனர்.
கான்ஸ்டபிள் மனோவிடம் உத்தரவிற்காக பார்க்க மனோ தலையசைத்தார்.
தன்னிடம் இருந்த மாஸ்டர் கீ பஞ்சில் இருந்து ஒவ்வொரு சாவியாக கான்ஸ்டபிள் திறக்க முயல ஐந்தாவது சாவிக்கு பூட்டு அடிபணிந்தது.
மனோவும் கான்ஸ்டபிளும் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றார்கள்.
வீடு சுத்தமாக பராமரிக்கப்பட்டிருந்தது.
சமையலறையில் சிங்கில் பாத்திரங்கள் எதுவும் இல்லை. புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. சுவரில் சிறு வயது உஷா தன் தாய் தந்தையுடன் சிரித்தாள்.
மனோ டேபிள் டிராயரை திறந்தார்.
உள்ளே ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தார்.
கொஞ்சம் நோட்டு புத்தகங்கள் சில பேனாக்கள் அவ்வளவுதான்.
இங்கே எதுவும் கிடைக்காது போல்.
தனக்குள் யோசித்தபடி சுற்றிலும் பார்த்த மனோவின் பார்வை பரண் மீது சென்றது.
“அகில்” கான்ஸ்டபிளை அழைத்தார் மனோ
“சார்”
“அந்த பரண்ல செக் பண்ணுங்க”
“யெஸ் சார்”
கான்ஸ்டபிள் ஒரு ஸ்டூல் போட்டு அதன் மீது ஏறி பரணில் கைவிட்டு துழாவினார். அது கைக்கு தட்டுப்பட்டது. எடுத்தார். அது ஒரு டைரி.
தொடரும்