சப் இன்ஸ்பெக்டர் மனோ தன் அறையில் அமர்ந்தபடி உஷாவின் டைரியைப் படிக்க ஆரம்பித்தார்.
***
‘எனக்கு அம்மா இல்ல. சின்ன வயசுலயே தவறிட்டாங்க. ஆனா எனக்கு இன்னும் ஒரு மாதிரி தான் இருக்கு. எனக்கும் அம்மா இருந்திருந்தா என்னையும் பார்த்து பார்த்து கவனிச்சிருப்பாங்க.
அப்பா நல்லவர் தான். ஆனா அப்பா பெரும்பாலும் வீட்ல இருக்க மாட்டார்.
நான் வீட்ல தனியாத்தான் இருப்பேன். ஸ்கூல்ல நான் நல்லா படிப்பேன். ஏதாச்சும் ஒரு சப்ஜெக்ட்ல ஆன்சர் பேப்பர் கொடுத்தா அதை யார்கிட்டயும் காட்டி என்னால சந்தோஷப்பட முடியாது கொண்டு வந்து அம்மா போட்டோ முன்னாடி வச்சுட்டு அமைதியா உட்கார்ந்து இருப்பேன்.
பல நாள் எனக்கு தோணும். நான்லாம் எதுக்கு இந்த பூமியில் வாழணும்னு ?
அப்பா கிட்ட என்னால எதுவுமே சொல்ல முடியாது. இப்படியே நாள் போயிட்டு இருந்துச்சு. நான் ஏஜ் அட்டென்ட் பண்ணப்ப எனக்கு பெரிய குழப்பம். அது போய் நான் யார்கிட்ட சொல்றதுன்னு. கொஞ்சம் தள்ளியிருந்த அத்தைக்கிட்ட தயக்கமா போய் சொன்னேன். அத்தை நல்லாத்தான் பார்த்துக்கிட்டாங்க. ஆனா அது ரொம்ப நாள் இல்லை.
எனக்குன்னு யாராவது இருக்க மாட்டாங்களான்னு ரொம்ப ஏக்கமா இருந்துச்சு. காலேஜ் படிக்கப் போனேன். ஃபர்ஸ்ட் செமஸ்டர் முடிஞ்சு எக்ஸாம் ஸ்டார்ட் ஆச்சு. ஒரு நாள் எக்ஸாம் எழுதிட்டு வீட்டுக்கு வர்றதுக்கு பஸ் ஏறினேன்.
“ஹலோ” யாரோ என்னைக் கூப்பிட்டாங்க.
அப்பத்தான் அவனை நான் முதல் முறையா பார்த்தேன்.
***
“உங்களைத்தான்” அவன் சொல்ல பஸ்ஸில் நின்று கொண்டிருந்த உஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
அவனை குழப்பத்துடன் பார்க்க
“ஒரு டூ மினிட்ஸ் பேசணும்” என்றான்.
உஷாவிற்கு அவனை தவிர்க்கத் தோன்றவில்லை.
தன் ஸ்டாப் வந்ததும் இறங்கினாள். அவனும் இறங்கினான்.
அவன் அருகில் வர உஷாவிற்கு படபடப்பாக இருந்தது.
“ஜஸ்ட் டூ மினிட்ஸ் பேசிட்டு போயிடறேன்” அவன் சொல்ல
“ப்ளீஸ் இங்க யாராச்சும் பார்த்தாங்கன்னா என் பேர் கெட்டுடும் இது கிராமம்” உஷா கெஞ்ச அவன் அவள் முகத்தை ஒன்றும் சொல்லாமல் பார்த்து ரசித்தான்.
“க்யூட்” சொன்னவன் வசீகரமாய் சிரித்தபடி தொடர்ந்தான்.
“அப்ப நாளைக்கு மத்தியானம் பேசலாமா ?”
“எப்படி?”
“உங்க காலேஜ் லஞ்ச் பிரேக் எப்ப?”
“இல்ல நான் வெளியில எங்கயும் வர மாட்டேன்”
“நாளைக்கு மத்தியான லஞ்ச் பிரேக்கில் கேட்டுக்கு ஆப்போசிட்ல இருக்கிற பேக்ஸ் & கேக்ஸ்ல உக்காந்து ஒரு கேக் சாப்பிட்டுட்டே பேசறோம்”
“நோ”
“யெஸ்”
சொன்னவன் அவள் பதிலுக்கு காத்திராமல் எதிரில் வந்த பஸ்ஸைக் கைகாட்டி ஏறிக்கொண்டான்.
***
சப் இன்ஸ்பெக்டர் மனோ அடுத்த பக்கத்தைப் புரட்ட அந்தப் பக்கத்தில் இருந்த எழுத்துக்கள் மேல் ஏதோ ஒரு திரவம் பட்டு அழிந்திருந்தன.
வாசலில் நிழல் ஆட மனோ நிமிர்ந்து பார்த்தார்.
கான்ஸ்டபிள் அகில் நின்றார்.
“சார்”
“சொல்லுங்க “
“அந்த பொண்ணோட அப்பா வந்திருக்கார்”
“வரச்சொல்லுங்க”
அடுத்த இரண்டாவது நிமிடத்தில் அந்த நடுத்தர வயது நபர் உள்ளே நுழைந்தார்.
கண்களில் சோகம் தெரிந்தது.
“நீங்க?” மனோ கேட்க
“என் பேரு கிருஷ்ணன். உஷாவோட அப்பா நான் தான்” சொன்னார்.
“உட்காருங்க” மனோ சேரைக் கண் காட்ட அமர்ந்தார்.
“சார்”
“ம்”
“யார் பண்ணாங்கன்னு தெரிஞ்சதா சார்?”
“இன்னும் இல்ல”
“அவனை விடக்கூடாது சார்”
“குற்றவாளியை கண்டிப்பா நாங்க அரெஸ்ட் பண்ணுவோம். உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?”
“என் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு சார் யார்கிட்டயும் எந்த வம்பும் வெச்சுக்க மாட்டா. அவளுக்கு எதிரிங்க இருக்கிறாங்கன்னு என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல”
“உங்க பொண்ணு கருப்பசாமி கோயில் பக்கத்துல நைட் டைம்ல எதுக்காக போயிருக்கணும்? “
“ அது வந்து…*
“சொல்லுங்க கொலைகாரன் வீட்டுக்கு வந்து உங்க பொண்ணை கொல்லல இல்லையா?”
“சார்”
“ஏதோ ஒரு காரணத்துக்காக நைட் கோயில தாண்டி உங்க பொண்ணு போயிருக்கா. அது எந்த காரணம்னு சொல்ல முடியுமா?”
“தெரியல சார்”
“இந்த மொபைல்ல இருக்கிற பேக் ஃபோட்டோ பாருங்க” சொன்ன மனோ தன் மொபைலைக் காட்டினார்.
அதில் இருந்த லெதர் பேக்கைப் பார்த்த கிருஷ்ணன் திகைத்தார்.
“என்ன இது?”
“உங்க பொண்ணு பக்கத்துல இந்த பேக் இருந்துச்சு”
“இந்த பேக் எங்களுது இல்ல”
“யாரோடதுன்னு தெரியுமா?”
“தெரியாது சார்”
“ஓகே ஏதாவது தகவல் தெரியும் போது நாங்க உங்களுக்கு சொல்றோம்” மனோ சொல்ல அப்போது கிருஷ்ணன் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து இன்ஹேலரை எடுத்து தன் நாசியில் வைத்து சுவாசிக்க மனோ கிருஷ்ணனை இமைக்காமல் பார்த்தார்.
சற்று நேரத்திற்கு கிருஷ்ணன் விடை பெற்று செல்ல மனோ கான்ஸ்டபிள் அகிலை அழைத்தார்.
“அகில்”
“சார்”
“இப்ப போற கிருஷ்ணன் மேல எப்பவுமே ஒரு கண்ணு இருக்கணும்”
“சார் இவர் அந்த பொண்ணோட அப்பாதானே?”
“கரெக்ட்தான் எதுக்கும் இவர் மேல ஒரு சந்தேகம் இருக்கட்டும்”
“புரியுது சார்”
மீண்டும் டைரியை கையில் எடுத்த மனோவின் மொபைல் அடித்தது.
புதிய எண்.
“ஹலோ”
“யார் பேசறது? சப் இன்ஸ்பெக்டரா?”
“ஆமா நீங்க?”
“நீங்க இப்ப விசாரிச்சிட்டிருக்குற உஷா கேஸ் அப்படியே முடிச்சிடுங்க. மேற்கொண்டு எதுவும் விசாரிக்காதீங்க”
“என்ன மிரட்டறியா?”
“இல்ல சார் உங்களுக்கு எதுவும் ஆகக்கூடாதுங்கிற பதட்டத்தில் சொல்லிட்டிருக்கேன்”
“யார் நீ?”
“மன்னிச்சுக்கங்க சார் அது என்னால சொல்ல முடியாது.”
“என்னால உன்னை கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைக்கிறியா?”
“நான் இப்ப பேசிட்டு இருக்கிற நம்பர் ஒரு திருட்டு மொபைல் சார். “
“ராஸ்கல்”
“உங்களுக்கு நல்லது பண்றதுக்காக தான் எச்சரிக்கை பண்ணேன் இனி உங்க விதி எப்படியோ அப்படி சார்”
“என்னோட விதியை நான் பார்த்துக்கறேன்”
“உங்க இஷ்டம் சார்”
***
கருப்பசாமி கோவில்.
பூசாரி வீரையன் சப் இன்ஸ்பெக்டரை கேள்வியாகப் பார்த்தார்.
“உங்களுக்கு என்ன சார் தெரியணும்?”
“கோவிலில் இருந்து கொஞ்சம் தூரத்திலயே கொலை நடந்திருக்கு. ஆனா யாருக்கும் எந்த சத்தமும் கேட்கலன்னு சொல்றது எப்படி?”
“அன்னிக்கி சாமி வேட்டை நடந்துச்சு. பட்டாசு சத்தத்திலயும் கொட்டு சத்தத்திலயும் எங்களுக்கு எதுவும் கேட்கல.”
“சாமி வேட்டைன்னா எப்படி? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க”
“ஊரோட நன்மைக்காக ஊரை சுத்தி சாமி வேட்டைக்கு போயிட்டு வரும்.”
“ம் சாமின்னா …?”
“யாரு அன்னிக்கி பூஜை பண்றாங்களோ அவங்க தான் சாமி”
“அன்னிக்கு யார் பூஜை பண்ணாங்க?”
“நான்தான்”
“உங்க கூட யாராவது வருவாங்களா?”
“இல்ல சாமி வேட்டைக்கு போறவங்க கூட யாரையும் கூட்டிட்டு போக மாட்டாங்க. அவங்க மட்டும் தான் போவாங்க. தனியா போவாங்க. ஒரு கையில தீப்பந்தம். இன்னொரு கையில வாள்”
பூசாரி சொல்ல உன்னிப்பாய் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் பூசாரியிடம் கேட்டார்.
“அன்னிக்கி சாமி வேட்டைக்கு போனது நீங்க தான் இல்லையா?”
“ஆமா”
“அன்னிக்கு நைட் என்ன நடந்தது?”
“எனக்கு தெரியாது”
“என்ன சொல்றீங்க?”
“சாமி வேட்டைக்கு கிளம்புனது மட்டும் தான் எனக்கு தெரியும். ஊர சுத்திட்டு வந்துட்டு திரும்ப கோவிலுக்குள்ள போறப்ப மட்டும்தான் எனக்கு உணர்வு வரும்”
“என்ன சொல்றீங்க நீங்க? இது எப்படி சாத்தியமாகும்? அப்படின்னா அன்னைக்கு நைட் வெளியே என்ன நடந்தாலும் உங்களுக்கு தெரியாதா?”
“தெரியாது”
“நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒரு கொஸ்டின் கேட்கலாமா?”
“கேளுங்க சார்”
“உஷாவை நீங்க ஏன் கொன்னிருக்கக் கூடாது? “
“இருக்கலாம்”
பூசாரி அலட்டிக் கொள்ளாமல் சொல்ல மனோ அதிர்ந்தார்.
“என்ன சொல்றீங்க?”
“சார் அந்த பொண்ணுக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவுமே இல்ல. ஆனா சாமி வேட்டைக்கு போகும் போது என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியாது. அந்தப் பொண்ணு கோவில் பக்கத்துல செத்து இருக்கிறதால எனக்குமே ஒரு மாதிரியா தான் இருக்கு. ஒருவேளை நான்தான் காரணமாயிட்டேனோன்னு”
பூசாரி சொல்ல மனோ ஒன்றும் சொல்லாமல் அவரைப் பார்த்தார்.
“சார் உண்மையா உஷாக்கு என்ன நடந்ததுன்னு நீங்க தான் கண்டுபிடிக்கணும். ஒரு வேளை நான் தான் காரணம்னு நீங்க சொன்னாலும் அதை நான் ஏத்துக்கறேன்”
பூசாரி பெருமூச்சுடன் சொல்ல மனோ சற்று நேரம் யோசித்தார்.
“நீங்க சாமி வேட்டைக்கு கொண்டு போறது என்ன?”
“வாள் சார்”
“அது இப்ப எங்க இருக்கு?*
“தர்மகத்தா வீட்ல இருக்கு”
“அத நான் பார்க்கணும்”
“பார்க்கலாம் சார்”
பூசாரியும் மனோவும் தர்மகத்தாவின் வீட்டை நோக்கி நடந்தனர்.
“வாங்க பூசாரி .என்ன இவ்வளவு தூரம்?” தர்மகர்த்தா முகம் மலர்ந்து கேட்க பூசாரி சொன்னார்.
“சாருக்கு சாமி வேட்டைக்குப் போற வாள் பார்க்கணும்”
“ஏன்?” தர்மகர்த்தா கேட்க மனோ புன்னகைத்தார்.
“பார்க்கக் கூடாதா?”
“நான் அப்படி சொல்லல எஸ்ஐ சார் என்ன காரணம்னு கேட்டேன் அவ்வளவுதான்”
“ஒரு சின்ன என்கொயரி”
“இப்ப கொண்டு வரேன்” சொன்ன தர்மகர்த்தா உள்ளே சென்றார் அடுத்த மூன்றாவது நிமிடத்தில் துணியால் சுற்றப்பட்ட வாளை வெளியில் கொண்டு வந்தார். மனோவிடம் நீட்டினார்.
அதை மிக கவனமாய் வாங்கிய மனோ துணியை விலக்கிப் பார்த்தார். நன்றாக கனமாக இருந்த வாளின் கைப்பிடி மிக உறுதியாக இருந்தது. அதை நன்றாகப் பார்த்த மனோவின் பார்வை வாள் முனைக்குச் செல்ல… அது என்ன தீற்றல்? மனோவின் பார்வைக்கு அது தட்டுப்பட்டது. உன்னிப்பாகப் பார்த்தான். அது ரத்தக்கறை.
அப்படி என்றால் சாமி வேட்டைக்குச் சென்ற இடத்தில் ஏதோ நடந்திருக்கிறது.
இது மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷயம்.
பூசாரியை லாக்கப்பில் கொண்டு சென்று விசாரித்தால் விஷயங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் ஏராளம். ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் யார் மீதும் கை வைக்க முடியாது.
அதற்கு முன்பு இந்த வாளில் இருக்கும் ரத்தக்கறை யாரோடது என்று ஃபாரன்சிக் மூலம் கண்டறிய வேண்டும். இந்த ரத்தக்கறை உஷாவுடையதுதான் என்றால் அப்பொழுது பூசாரியை கைது செய்து விசாரிக்கலாம்.
தனக்குள் யோசித்த மனோ கேட்டார்.
“ இந்த வாள் நான் கொண்டு போயிட்டு திரும்ப கொண்டு வரலாமா?”
“மன்னிக்கணும் இது கோயிலோட சொத்து வெளியில நாங்க கொடுக்க மாட்டோம்”
தர்மகத்தா சொல்ல மனோ பூசாரியை பார்த்தான்.
“உங்களுக்கு நான் என்ன சொல்றேன்னு புரியும்னு நினைக்கிறேன்” மனோ சொல்ல பூசாரி தர்மகத்தாவிடம் சொன்னார்.
“கொண்டு போயிட்டு கொண்டு வந்துருவாரு நம்பி கொடுக்கலாம் போலீஸ் டிபார்ட்மெண்ட் தானே?” பூசாரி சொல்ல தர்மகர்த்தா வேறு வழியின்றி தலையசைத்தார்.
ஃபாரன்சிக் டிபார்ட்மெண்டில் வாள் ஒப்படைக்கப்பட அதில் முனையில் ஒட்டியிருந்த ரத்தத் தீற்றலை சேகரித்தனர்.
“ரிசல்ட் எப்ப கிடைக்கும்?” மனோ கேட்க பாரன்சிக் டிபார்ட்மென்ட் ராபர்ட் புன்னகைத்தார்.
“ஈவினிங்”
அன்று மாலை ஃபோன் வர மனோ எடுத்துப் பார்த்தான்.
ராபர்ட்.
“சொல்லுங்க ராபர்ட். அந்த பிளட் சாம்பிள் உஷாவோடது தானே?”
“இல்ல”
“ஆர் யூ ஷ்யூர் ?”
“யெஸ். அந்த பிளட் சாம்பிள் உஷாவோடது இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம் கூட இருக்கு” ராபர்ட் சொல்ல மனோ ஆர்வமானார்.
“என்ன அது?”
மறுமுனையில் ராபர்ட் சொல்ல மனோ அதிர்ந்தார்.
தொடரும்