மண் மேட்டில் அது அமர்ந்திருந்ததைப் பார்த்த வெட்டியானுக்கு மனம் நம்ப மறுத்தது. தன் முகத்தில் வழிந்த மழை நீரை விலக்கி விட்டு மீண்டும் பார்த்தான்.
அது அமர்ந்திருந்தது. வெட்டியானுக்கு இதயம் தாறுமாறாகத் துடித்தது. தன் அனுபவத்தில் பல நிறைவேறாத ஆத்மாக்களை அவன் சந்திக்க நேர்ந்திருப்பினும் இது அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. ஏதோ ஒன்று தப்பாக நடக்கப்போகிறது என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. மீண்டும் உள்ளே சென்று காளிதேவியின் முன் அமர்ந்து விட்டால் தனக்கு ஒன்றும் நேராது என்று உறுதியாக நம்பியவன் உள்ளே செல்வதற்காக திரும்பிப் பார்க்க கதவு மூடப்பட்டிருந்தது. அதிர்ச்சியான வெட்டியான் கதவை தள்ளிப் பார்க்க திறக்க முடியவில்லை.
பயத்தில் உறைந்த வெட்டியான் என்ன நடக்கப் போகிறது என்று புரியாமல் திகிலாய் சுற்றுமுற்றும் பார்த்தான்.
திடீரென்று ஏதோ தலையில் வந்து அடிக்க கீழே உருண்டான். அவனைச் சுற்றி வெளவால்கள் பறந்தன. ஆந்தை அலறியது.
எழ முற்பட்டவன் இதயம் எக்கச்சக்கமாய் துடிக்க எப்படியாவது இந்தக் காட்டை கடந்து வெளியே ஓடி விட வேண்டும் என்று தீர்மானித்தபடி எழுந்தான்.
அவன் முன் அது நின்றிருந்தது.
முகம் சலனமற்றிருந்தது. முகம் உடை எங்கும் மண் தீற்றல்கள்.
“வேண்டாம் என்னை விட்டுடு ஒண்ணும் பண்ணிடாத” வெட்டியான் அலறினான்.
அது ஒன்றும் பேசாமல் அவன் அருகில் வந்தது.
“வேண்டாம்” ஏதோ சொல்ல முயன்றவனை அது பேச அனுமதிக்கவில்லை. அவனை அப்படியே தூக்கி எறிந்தது
வெட்டியான் எகிறிப்போய் விழுந்தான். தலை மரத்தில் மோதி பிளந்து கொள்ள ரத்தம் கொட்டியது.
வெட்டியான் உடல் துடித்தது. விழிகள் நிலைத்தன.
***
லக்காபுரம்.
ஜேபி என்று போர்ட் போடப்பட்டிருக்க புதிய கல்லூரிக்கான கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கியிருந்தன.
கான்ட்ராக்டர் கைலாசம் பணிகளை மேற்பார்வையிட்டார். அவ்வப்போது அவரது கண்கள் அவரையும் மீறி அஞ்சலின் மீது படிந்தன.
‘செம்மயா இருக்கா. என்னா ஸ்ட்ரக்சர். இவ கூட ஒரு நாள் இருந்தா அது தான் வாழ்க்கைக்கான அர்த்தம் ‘ மனம் சொல்ல கபடமாய் புன்னகைத்துக்கொண்டார்.
‘எங்க போய்டப் போறா? இந்த கட்டடம் கட்டி முடிக்க இன்னும் நிறைய நாள் இருக்கு. இன்னிக்கு இல்லனாலும் என்னைக்காவது ஒரு நாள் முடிச்சுட வேண்டியதுதான்’
கைலாசம் தன்னை தேவையில்லாமல் அடிக்கடி பார்ப்பதை அஞ்சலியும் அறிந்திருந்தாள். அவளுக்கு கைலாசத்தை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது.
இந்தாளுக்கு எப்படியும் அம்பது வயசு இருக்கும். வயசுக்கு தகுந்த மாதிரியா இருக்கான்? பார்வை சரியில்ல.
அதுக்கு நீ என்ன பண்ண முடியும்?
கொஞ்சம் காசிருக்கிற குடும்பத்தில் பிறந்திருந்தா நீ பாட்டுக்கு நிம்மதியா வீட்ல வேலைய பார்த்துட்டு இருந்திருக்கலாம். உன்னோட நேரம் இப்படி இருக்கு. சாப்பாட்டுக்கே வேலை செய்ற மாதிரி ஒரு நிலைமை. அவன் சரி இல்லை இவன் சரி இல்லன்னு புலம்பி ஒண்ணும் ஆகப்போறதில்ல. உனக்கு தப்பா ஒண்ணும் நடக்காம இருந்தா சரி. ஒருத்தன் பார்வையை நாம சரி பண்ண முடியாது.
அஞ்சலியின் மனம் பலவாறாக எண்ணிக் கொள்ளும். நாட்கள் இப்படியே போய்க் கொண்டிருக்க அன்று அஞ்சலி செல்லும்பொழுது ஆட்கள் யாரும் வந்திருக்கவில்லை.
கைலாசம் மட்டும் நின்றிருந்தார்.
“சார்”
“சொல்லு அஞ்சலி”
“இன்னிக்கு வொர்க்கர்ஸ் யாரும் வரலயா?”
“லேட்டா வருவாங்க”
“ஓகே சார் அப்புறம்?”
“சொல்லு”
“நீங்க இதுவரைக்கும் பர்சேஸ் பண்ண பில் கொடுக்கல அது கொடுத்தீங்கன்னா அது சரி பார்த்துட்டு சப்மிட் பண்ணிடுவேன்”
அஞ்சலி சொல்ல கைலாசத்தின் முகம் மாறியது.
“தர்றேன்”
“அப்ப நான் வரவா சார்?”
“ஒரு நிமிஷம்”
“சொல்லுங்க சார்”
“என்ன சோப் போடறே? நல்ல வாசனையா இருக்கு உன்மேல”
“சார்”
“சொல்லு”
“அது எதுக்கு சார் உங்களுக்கு?”
“ஏன்? தெரியக்கூடாதா?”
“தெரியவேண்டாம் சார்” சொன்னவள் அவர் பதிலை எதிர்பாராமல் வெளியேறினாள்.
தனக்கு பதில் சொல்லாமல் செல்லும் அவள் முதுகை வெறித்த கைலாசத்துக்கு உள்ளே வெறி ஏறியது.
‘என்னடி ரொம்ப ராங்கு காட்டற? நான் பார்க்காத பொம்பளங்களா? உன்ன சீக்கிரமே உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடறேன்’
தனக்குள் எண்ணிக்கொண்டார்.
***
அருண் மனதிற்குள் குமைந்தான்.
அஞ்சலி தன்னை ஏற்றுக் கொள்ளாமல் போனதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
ஏன் என் மனம் அவள் பின்னே செல்கிறது? என்னுடன் பேசுவதற்கு எத்தனையோ பேர் காத்திருக்கின்றனர். நான் விழி அசைத்தால் போதும். என்னுடன் பழகுவதற்கு போட்டிபோட்டு ஓடி வருவர். அப்படி இருந்தும் என் மனதில் அவள் மட்டும் தானே இருக்கிறாள்? ஒருவேளை என் காதலை நான் சரியாக சொல்ல வில்லையோ? அவள் புரிந்து கொள்ளும்படி சொல்லி இருக்க வேண்டுமோ? அல்லது அவள் நிலைமையை புரிந்து கொண்டு அதன் பிறகு என் காதலை தெரியப்படுத்தி இருக்க வேண்டுமோ?
கடவுளே எனக்கு பைத்தியம் பிடித்தது போல் இருக்கிறது.
என்னைக் காப்பாற்று எப்படியாவது என் அஞ்சலிக்கு என் மனதை புரிய வை.
காதலில் நிலையான ஆண்கள் அபூர்வம் என்கிறாள். என் மனம் தெரிந்திருந்தால் அப்படி பேசத்தான் அவளுக்கு முடியுமா?
அஞ்சலி.
எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை ஆனால் என் மனசுல நீ மட்டும் தான் இருக்கே. ப்ளீஸ். புரிஞ்சுக்க.
அருண் தனக்குள் புலம்பியபடி எங்கும் செல்ல பிடிக்காமல் வீட்டிலேயே இருக்க அவன் அப்பா நாகராஜன் அவனை நினைத்து கவலை கொண்டார்.
மனைவியிடம் சொல்லி வேதனைப்பட்டார்.
“என்னம்மா ஆச்சு அவனுக்கு?”
“தெரியலங்க”
“கஷ்டமா இருக்கும்மா. ஏதாவது சொன்னானா?”
“இல்லைங்க. ஒண்ணும் சொல்லல”
நாகராஜன் எப்பொழுதும் அப்படித்தான். மகனுக்கு தேவையானதை பார்த்து பார்த்து நிறைவேற்றுவார் ஆனால் அவனிடம் அவனுக்கு என்ன வேண்டும் என்று அவர் கேட்க மாட்டார் அவன் தேவைகளை மற்றவர்கள் மூலமாக அறிந்து நிறைவேற்றுவார்.
வெளியே அம்மா அப்பா இருவரும் பேசிக் கொண்டது அருணுக்கு கேட்டது. ஆனால் அவன் மனம் அதில் முழுமையாக ஈடுபடவில்லை.
அவன் மனம் தொடர்ந்து விடாப்பிடியாக அஞ்சலியை பற்றிக்கொண்டிருந்தது.
அருண்
ம்
வேண்டாம் என்று சொன்ன பெண்ணை விட்டுவிடு. அதுதான் உனக்கு நல்லது.
முடியாது
முடியாதா?
ஆம் நிச்சயமாக என்னால் முடியாது.
ஏன்?
அவனுடன் எப்போதோ நான் வாழத் தொடங்கி விட்டேன்
இப்படி சொல்வது உனக்கு பைத்தியக்காரத்தனமாக இல்லையா?
இருக்கலாம் ஆனால் நான் இப்படித்தான்.
இது விதண்டாவாதம்.
எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்துக் கொள்ளலாம்.
ஏன் இப்படி?
என் மனம் சொல்வது போல் தான் என்னால் வாழ முடியும்
உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?
எதில்?
உனக்கு அஞ்சலி நிச்சயம் கிடைப்பாள் என்று.
ஆம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது
ஒருவேளை?
சொல்
உன் நம்பிக்கைக்கு மாறாக ஏதாவது நடந்துவிட்டால்?
என்ன நடக்கும்?
அதாவது அஞ்சலி உன் வாழ்க்கையில் உனக்கு கிடைக்காமல் போய்விட்டால்?
நிச்சயம் கிடைப்பாள்.
ஒருவேளை…?
வேண்டாம் அதை என்னால் கற்பனை செய்யக்கூட முடியாது. ஒருவேளை அவள் எனக்கு கிடைக்காமல் போய்விட்டால் அவளை நானே…
அருண் வார்த்தைகளை முடிக்கவில்லை அவன் விழிகள் சிவந்தன
***
கைலாசம் அன்று ஒரு தீர்மானம் எடுத்திருந்தார்.
இன்று எப்படியும் அஞ்சலி வருவாள்.
வேலையாட்கள் எவரும் வர வேண்டாம் என்று ஏற்கனவே தகவல் சொல்லியாகிவிட்டது.
வரட்டும் அவளை இங்கேயே வைத்து…
தனக்குள் புன்னகைத்துக் கொண்ட கைலாசம் பாட்டிலில் இருந்த பிராந்தியை கண்ணாடி கிளாஸில் ஊற்றினார். ஒரே மூச்சில் குடித்தார்.
அஞ்சலிக்காகக் காத்திருந்தார்.
சற்று நேரத்தில் வெளியில் சத்தம் கேட்க திரும்பி பார்த்த கைலாசம் அங்கே வந்த அஞ்சலியைப் பார்த்து புன்னகைத்தார்.
“வா அஞ்சலி” அருகில் வந்த கைலாசம் மது குடித்திருந்தது அஞ்சலிக்குத் தெரிந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவள் பணியாட்கள் எவரும் இல்லை என்பதை அறிந்தாள்.
ஏதோ தவறு என்று மனம் எச்சரிக்கை செய்ய அஞ்சலி திரும்பிச் செல்ல முயன்றாள்.
“நில்லு”
“சார்”
“எங்க போறே?”
“நாளைக்கு வர்றேன் சார்”
“எனக்கு நீ இன்னிக்கு வேணுமே” கோணலாய் சிரித்த கைலாசத்தை பயமாய் பார்த்தாள்.
“சார்”
“புரியலயா?”
“இல்ல சார்”
“புரிய வச்சிடறேன்” அருகில் வந்தவர் அவள் தோள்களின் மீது கைகளை வைக்க அஞ்சலி பதறினாள்.
“சார் கைய எடுங்க”
“என்னடி பிகு பண்றே?” கேட்டபடி அணைக்க முற்பட்டார்.
“சார் ப்ளீஸ்” அஞ்சலி விடுபட முயன்றாள் முடியவில்லை.
கைலாசத்தின் பிடி உறுதியாக இருந்தது. அவள் ஷாலை தூர எறிந்தார். அஞ்சலியின் கண்களில் நீர் திரண்டது.
“சார் ” கதறினாள்.
அஞ்சலியின் மீது படர கைலாசம் முயன்ற அதே நேரம்
“பஹன்” நீரஜ் குரல் கேட்டது. அந்நேரம் அவனை எதிர்பார்க்காத கைலாசம் அதிர்ந்தார்.
சுதாரித்துக் கொண்டு அவனைப் பார்த்து கத்தினார்.
“நீ போடா வெளிய. எதுக்குடா இப்ப வந்தே?”
கத்திய கைலாசத்தை கண்டுகொள்ளாமல் புன்னகைத்தான் நீரஜ்.
“சார் பஹன் பாவம் சார். விடுங்க” அவன் சொல்ல கைலாசத்தின் கோபம் நீரஜ் மேல் திரும்பியது.
“ஊர் விட்டு ஊர் வந்த நாய் எனக்கு நீ அட்வைஸ் பண்ணுவியா?”
பளாரென்று அறைந்தார். நீரஜ் பாவமாய் பார்த்தான். அஞ்சலியின் மீது மீண்டும் கைலாசம் கை வைக்க முயல எகிறிப் போய் தரையில் விழுந்து அலறினார். நீரஜ் வலிமையாய் மிக வலிமையாய் உதைத்திருந்தான்.
“பஹன் பாவம் சார்”
அஞ்சலி நீரஜை நெகிழ்ச்சியாய் பார்த்தாள்.
“வீட்டுக்குப் போங்க பஹன்” நீரஜ் சொல்ல அவசரமாய் எழுந்து கிளம்பினாள்.
“டேய் ” நீரஜைப் பார்த்து கைலாசம் கத்தினார்.
அவன் அவரைக் கண்டுகொள்ளாமல் வெளியேற கைலாசத்தின் மூளை வேறுவிதமாய் யோசித்தது.
கண்களில் வெறியேற செல்லும் நீரஜைப் பார்த்தார்.
**”
கோவை விமான நிலையம்.
ப்ரியா விமானத்திலிருந்து இறங்கியதை விஜயானந்த் மகிழ்வாய் பார்த்தார்.
அருகில் வந்தவள் புன்னகைத்தாள்.
“அப்பா”
“ம்”
“நீங்க ஏன்பா வந்தீங்க? நான்தான் வந்திருப்பேனே?”
“அது இல்லாம என்னோட பொண்ண நான் ரிசீவ் பண்றதுல எனக்கு ஒரு சந்தோசம். அது எனக்குக் கிடைக்கக் கூடாதா?”
“ஏதாவது சொல்லி சமாளிச்சுடுங்க”
பிரியா சொல்ல விஜயானந்த் புன்னகைத்தார்.
“அம்மா எப்படிப்பா இருக்காங்க?”
“எப்பவுமே உன்னோட புராணம்தான் அம்மாக்கு” அவர் சொல்ல பிரியா சிரித்தாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டை அடைந்தனர்.
அம்மா திலகவதி ஓடிவந்து பிரியாவை தழுவிக்கொண்டாள்.
“எத்தனை நாள் லீவு?”
“ரெண்டு வாரம் உங்க கூட தான் இருப்பேன்”
“சந்தோஷம் ப்ரியா சாப்பிடவா”
திலகவதி அழைக்க டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.
உணவு பரிமாறப்பட்டது. பிரியா ஒன்றும் சாப்பிடாது உணவை வெறித்தாள்.
அவள் முக மாறுபாட்டைக் கவனித்த விஜயானந்த் அவளிடம் கேட்டார்.
“என்னம்மா சாப்பிடலயா?”
பிரியா பதில் ஒன்றும் சொல்லாமல் இருக்க அவர் மனம் துணுக்குற்றது.
“ப்ரியா ” அழைத்தார்.
அவள் பதில் சொல்லாமல் இருக்க மீண்டும் அழைத்தார்.
“ப்ரியா”
“ம்”
“என்னம்மா ஆச்சு?”
“சார்”
“சாரா? நான் உன் அப்பாம்மா”
“கத்தியில குத்தும்போது ரொம்ப வலிச்சது சார்”