Home Featuredவருவேன் 3

வருவேன் 3

by GK Tamil Novels
14 views

“கத்தியால் குத்தும்போது எனக்கு ரொம்ப வலிச்சது சார்” ப்ரியா அவரை நேர் பார்வை பார்த்தபடி சொல்ல விஜயானந்த் தீயை மிதித்தாற்போல் அதிர்ந்தார்.

“ப்ரியா “

“சார்”

“நான் அப்பாம்மா”

அவர் உரக்கக் கத்த ப்ரியா எழுந்து நின்ற அவரையே பார்த்தாள்.

கேட்டாள்.

“ஏன்பா எந்திரிச்சு நிக்கறீங்க? சாப்பிடலையா?” கேட்டவளை விஜயானந்த் அதிர்ச்சியுடன் பார்த்தார்.

“என்னப்பா அப்படி பார்க்கறீங்க?” இது ப்ரியாவின் குரல்தான்.

“என்னங்க ஆச்சு?” தோசைகளை ஹாட்பாக்ஸில் கொண்டு வந்த சிவகாமி கேட்க சுதாரித்தார்.

“ஒண்ணுமில்ல நீ ப்ரியாக்கு சர்வ் பண்ணு” சொன்னவர் ப்ரியாவின் முகத்தை உன்னிப்பாகப் பார்த்தார்.

முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. பிரியா அவரை அப்பாவியாகப் பார்த்தாள்.

“என்னாச்சுப்பா?”

“ப்ரியா”

“சொல்லுங்கப்பா”

“இப்ப ஏதோ என்கிட்ட சொன்னியே ?”

“எப்பப்பா ?”

“ரெண்டு நிமிஷம் முன்னாடி”

“தெரியலப்பா”

“சரி சாப்பிடு”

ப்ரியா தோசையை சட்னியில் தொட்டு வாயில் போட்டுக்கொண்டாள்.

“அம்மா”

“என்னடி?”

“அமிர்தம்”

“எது தோசையா?”

“ஆமா”

“கனடால தோசை எங்கயும் கிடைக்கலயா?”

“கிடைச்சது. ஆனா உன் கைப்பக்குவத்தில எங்கயும் கிடைக்கல” ப்ரியா சிரித்தபடி சொல்ல சிவகாமி நெகிழ்ந்து பார்த்தாள்.

“சாப்பிடும்மா” சிவகாமி சொல்ல பிரியா சாப்பிட ஆரம்பித்தாள். விஜயானந்த் ஒன்றும் பேசாமல் சாப்பிடும் பிரியாவை திகைப்பாய் பார்த்தார்.

ஏதோ தவறு.

நான் கேட்டது உண்மையா?

நிச்சயம் ப்ரியா என்னிடம் சொன்னாள்.

உறுதியாகவா?

ஆம்,

அப்படியென்றால் இதை ஜேபியிடம் சொல்லவேண்டும்.

முட்டாள்

முட்டாளா?

ஆம்

ஏன்?

ஜேபியிடம் சொன்னால் என்னவாகும்?

என்னவாகும்?

ப்ரியாவின் உயிருக்கு ஆபத்து.

என்ன?

ஜேபி கொடூரமானவன் என்று உனக்கு நன்றாகத் தெரியும். அவனுக்கு விஷயத்தைத் தெரிவித்தால் அவன் ப்ரியா உன் மகள் என்று பார்க்கமாட்டான்.நிச்சயம் பிரியாவை கொன்று விடுவான்.

உண்மைதான்.

நீ எதிர்பார்த்தபடியே ஏதாவது வில்லங்கம் இருக்கும் என்றாலும் அது ஜேபிக்குத் தெரியக்கூடாது.

புரிகிறது.

“அப்பா” பிரியா அருகில் வந்து அழைக்க அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“சொல்லும்மா”

“நான் சாப்பிட்டு முடிச்சு ரொம்ப நேரம் ஆச்சு. இன்னும் நீங்க எதையோ யோசனை பண்ணிட்டிருக்கீங்க. அப்படி என்னப்பா யோசிக்கிறீங்க ?”

ப்ரியா புன்னகையுடன் கேட்க விஜயானந்த் நிம்மதியாக உணர்ந்தார்.

அனாவசியமாக எதையும் நினைத்து என்னை நானே குழப்பிக்கொள்ளக்கூடாது. பிரியா அப்படி சொல்லவில்லை.

தனக்குள் எண்ணியவர் பார்வை வெளியே நின்றிருந்த நாய் மீது பட்டது. நாய் தன் நாக்கை நீட்டியபடி அவரை வெறித்தது.

***

அஞ்சலி அன்று கல்லூரி வந்ததும் நீரஜைத் தேடினாள்.

அவன் இருக்குமிடம் செல்ல சாப்பிட்டுக்கொண்டிருந்தவன்

“பஹன்” என்றபடி எழுந்தான்.

“சாப்பிடு உட்காரு”

“அப்புறம் சாப்பிடறேன் பஹன். நீங்க சொல்லுங்க. என்ன வேலை?”

“ஒரு வேலையும் இல்ல. உன்ன பார்க்கறதுக்குத்தான் வந்தேன்”

“பஹன்”

“ரொம்ப நன்றி நீரஜ். நீ மட்டும் அங்க வரலைன்னா என் நிலைமை ரொம்ப மோசமாயிருக்கும்”

“சும்மா இருங்க பஹன். நீங்க வேற என் தங்கச்சி வேற இல்ல பஹன்”

சொன்னவனை நெகிழ்வாய் பார்த்தாள்.

“ஆமா உன் தங்கச்சி மேல ரொம்பப் பாசமா?”

“ஆமா பஹன். அவ பசியா இருந்தா என்னால தாங்கிக்க முடியாது பஹன். தமிழ்நாட்டுக்கு வந்ததிலருந்துதான் என் தங்கச்சிக்கு பணம் அனுப்ப முடியுது பஹன். தமிழ்நாடு தான் எங்களுக்கு சோறு போடுது பஹன்”

“அடடா இன்னும் எத்தனை முறை இதைச் சொல்வே?”

“உடம்புல உயிர் இருக்கிறவரைக்கும் பஹன்” நீரஜ் சொல்ல அவனைப் பாசமாய் பார்த்தாள்.

“உனக்கு ஏதாவது பண்ணனும்னு தோணுது. ஏதாச்சும் கேளு”

“என் தங்கச்சி பிளஸ் டூ படிக்கிறா அடுத்த வருஷம் காலேஜ் போவா. நான் பணம் சேர்த்து வச்சிருக்கேன் பஹன். பத்தலன்னா கொஞ்சம் கொடுங்க. நான் மாசாமாசம் திருப்பித் தந்துடுவேன்” சொன்னவனைப் புன்னகையுடன் பார்த்தவள் சொன்னாள்.

“கண்டிப்பா தர்றேன்”

***

கைலாசத்தின் மொபைல் அடித்தது.

தூங்கிக்கொண்டிருந்த கைலாசம் மணி பார்த்தார்.

விடியற்காலை ஐந்து மணி.

இந்நேரம் யார் அழைக்கிறார்கள்? இவனுங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா?

சலித்த படி கண்களை தேய்த்து விட்டுக் கொண்டு அழைப்பை புறக்கணித்தார்.

மொபைல் மீண்டும் விடாமல் அடித்தது.

சை என்றபடி எடுத்துப் பார்த்தார்.

புது எண்

“யாரு?”

“கான்ட்ராக்டர் கைலாசம்?”

“ஆமா நான் தான் பேசறேன்”

மறுமுனையில் ஏதோ சொல்லப்பட அவர் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.

சட்டென்று எழுந்தார். அவசரமாக உடை மாற்றி வெளியில் விரைந்தார்.

அடுத்த அரை மணி நேரப் பயணத்தில் சைட்டை அடைந்தார்.

பாதி எழுப்பப்பட்ட கட்டிடம் விழுந்து நொறுங்கியிருக்க ஆட்கள் அதைச் சுற்றிலும் கூட்டமாக சூழ்ந்திருந்தார்கள்.

சூப்பர்வைசர் மணி ஓடிவந்தான்.

“சார்”

“என்னய்யா ஆச்சு?”

“தெரியல சார்”

“இதச் சொல்ல நீ ஏன்யா சூப்பர்வைசர்னு இருக்கே?”

“எல்லாமே சரியாத்தான் சார் பண்ணோம். எப்படி இந்த மாதிரி ஆச்சுன்னு தெரியல”

“உனக்கு என்னய்யா நீ பாட்டுக்கு சொல்லிட்டுப் போய்டுவே. முதலாளிய நினைச்சா எனக்கு இப்பவே வயித்தைப் புரட்டுது”

சொன்ன கைலாசம் மனதில் எக்கச்சக்கமாய் பதட்டம்.

முதலாளி கேட்டால் என்ன சொல்வது?

நினைத்து முடித்திருக்கவில்லை கைலாசத்தின் மொபைல் அடித்தது.

யார் என்று பார்த்தார்.

பாலன்.

நடுக்கமாய் எடுத்தார்.

“சார்”

“என்னய்யா என்னாச்சு?”

“சார் எல்லாம் சரியாத்தான் பண்ணோம் ஆனா…”

“நீ நேரா வா”

“சார்”

“சொல்லு”

“முதலாளி?”

“அய்யா ஊர்ல இல்ல. உனக்கு நல்ல நேரம். இல்லன்னா என்ன நடக்கும்னு உனக்கே தெரியும்”

பாலன் சொல்ல கைலாசத்திற்கு நிம்மதியானது.

“சார்”

“நேரா வா. அடுத்த அரை மணி நேரத்தில நீ இங்க இருக்கணும்”

“வர்றேன் சார்” நெற்றியில் இருந்த வியர்வையை அழுந்தத் துடைத்தவர் கிளம்பினார்.

அடுத்த அரை மணி நேரத்தில் கணபதி பாளையத்தில் விஸ்தீரமாய் இருந்த பங்களாவின் கேட் முன் நின்றார்.

வாட்ச்மேன் பழகியவர் என்பதால் எதுவும் கேட்காமல் உள்ளே விட்டான்.

நாய் ஒன்று ஓடி வந்தது. கண்கள் ஒளிர நாக்கை நீட்டியபடி அருகில் வந்த நாயைப் பார்த்து பயத்துடன் கைலாசம் நிற்க

“ஜானி சைலண்ட்” என்ற குரல் கேட்டது. கைலாசம் நிமிர்ந்து பார்த்தார்.

பாலன் நின்றிருந்தான்.

“என்னய்யா ஆச்சு?”

“சார் எங்க மேல எதுவும் தப்பில்ல சார்”

“நீ பொம்பளங்க மேல வைக்கிற கவனத்தை வேலைல வெச்சிருக்க மாட்டே.”

“அய்யோ சார்”

“நிறுத்துய்யா. நீ பண்றதெல்லாம் யாருக்கும் எதுவும் தெரியாதுன்னு நினைச்சிட்டிருக்கியா? நீ யார்கிட்ட வேலை செஞ்சிட்டு இருக்கேன்னு தெரியுமா? ஜேபி கிட்ட. ஏதாவது தப்பாச்சுன்னா உன்ன உயிரோட அங்கயே வச்சு சமாதி பண்ணிடுவாரு”

“சொல்லாதிங்க சார். குலைநடுங்குது எனக்கு”

“தெரிஞ்சும் இப்படி வேலை செஞ்சிருக்கே”

“சார்”

“சொல்லு என்ன சொல்லப்போறே?”

“சில நேரத்துல நாம எல்லாமே சரியா பண்ணினாலும் நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு”

“என்னய்யா சொல்ற?”

“இப்ப புது வீடு வாங்கறோம் இல்ல புது வண்டி வாங்கறோம். அதுக்கு ஒரு கோழியை பலியிடறோம். அதாவது ரத்தக்காவு கொடுத்தா எல்லாம் சரியாகும்னு நம்பிக்கை”

“புரியலயே”

“சார் நாம கட்டப்போறது பெரிய காலேஜ். அவ்வளவு இடத்தில பல குடும்பங்க இருந்திருப்பாங்க. நிறைவேறாத ஆசையோடு செத்துப்போனவங்க நிறைய பேர் அங்க இருந்திருப்பாங்க”

“அதுக்கு?”

“அவங்கள சாந்தப்படுத்தலன்னா அவங்க இந்த மாதிரி தடங்கல் கொடுத்துட்டே இருப்பாங்க”

“என்ன சொல்ற நீ சொல்றதெல்லாம் நிஜமா?”

“ஆமா சார்”

“அப்ப என்ன பண்ணனும்னு சொல்றே? “

“ரத்தக்காவு கொடுத்துட்டு வேலைய ஆரம்பிச்சா தடங்கல் இல்லாம வேலை முடியும்”

“செஞ்சுட வேண்டியதுதானே?”

“சார்”

“ஒரு ஆடு வாங்கிப் பலி கொடுத்திடலாம்”

“சார்”

“சொல்லு”

“ஒரு வீடு இல்லனா சின்னதா ஒரு ஃபேக்டரி அப்படி கட்டினா ஆடு போதும்”

“அப்படின்னா?”

“நாம கட்ட போறது ஒரு பெரிய காலேஜ். எல்லா கோர்ஸ் அதிலயே படிக்கலாம். அதனால ஆடு கோழி பலியிட்டு காரியமில்லை”

“தெளிவா சொல்லுய்யா”

பாலன் அவரைக் குழப்பமாகப் பார்க்க சுற்று முற்றும் பார்த்த கைலாசம் மெதுவாய் சொன்னார்.

“நரபலி”

பாலன் எக்கச்சக்கமாய் அதிர்ந்தான்.

“யோவ் வாய்ல நல்லா வந்திரப்போகுது. வேலைய சரியா செய்யாம நீ பாட்டுக்கு ஏதேதோ கதை சொல்லிட்டிருக்கியா?”

“சார் எனக்குத் தோணினத சொன்னேன். அப்புறம் உங்க இஷ்டம்”

“எந்தக் காலத்தில நீ இருக்கே? போ போய் வேலையப் பாரு.”

சொன்ன பாலனைப் பார்த்து புன்னகைத்தார் கைலாசம்.

“சார்”

“என்னய்யா சொல்லு?”

“பேப்பர் பார்க்க மாட்டீங்களா?”

“விஷயம் என்ன?”

“இது இந்தக்காலத்திலயும் நடக்கத்தான் செய்யுது. மதுரைல குவாரில நடந்த பலி விஷயம் பேப்பர்ல வந்தது. திண்டுக்கல்ல ஒரு கன்ஸ்ட்ரக்ஷன்க்கு ஒரு ஸ்கூல் பொண்ண கழுத்தறுத்து ரத்தத்தத் தெளிச்சிருக்காங்க. போலீஸ் அரெஸ்ட் பண்ணதுல ஒருத்தன் மாடில இருந்து கீழக் குதிச்சு செத்துப்போயிட்டான்.”

கைலாசம் சொன்னதை நம்ப முடியாமல் பார்த்தான் பாலன்.

“என்னய்யா சொல்ற? இப்படிலாம் நடக்குதா? “

“ஆமா சார். இப்ப ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷன் க்கு போங்க. மிஸ்ஸிங் கேஸ் கண்டிப்பா ஏதாவது இருக்கும். சொந்த பந்தம் இருக்கிறவங்க காணாம போயிட்டாங்கன்னா அவங்கள அந்த சொந்தபந்தம் கொஞ்சநாள் தேடும். அப்புறம் விதி விட்ட வழின்னு அமைதியாய்டுவாங்க. சொந்தபந்தம் இல்லாதவங்க நிலைமையை யோசிச்சு பாத்தீங்களா? அவங்க காணாமப் போயிட்டாங்கன்னா கேள்வி கேட்கக் கூட யாரும் இல்ல.”

கைலாசம் சொல்ல பாலன் பேச்சற்றுப்போனான்.

“என்னதான்யா சொல்ல வர்றே?”

“சார் கிட்ட பேசுங்க சார். சார் என்ன சொல்றார்னு பாருங்க.”

“நீ சொல்றது நினைச்சா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.”

“பதட்டப்படாதீங்க. மனுஷன்னு நினைச்சாத்தான் பதட்டமாகும். பலி கொடுக்கப்போறோம்னு நினைச்சுக்கங்க. பலிக்கு எங்கப் போறதுன்னு கவலைப்படாதீங்க. கைவசம் எனக்கு ஒரு யோசனை இருக்கு”

கைலாசம் கபடமாய் புன்னகைத்தார்.

***

நாய் தன்னையே பார்ப்பதை உணர்ந்த விஜயானந்த் மெல்ல எழுந்தார்.

நாய் பார்வை எங்கோ போனதை உணர்ந்தவர் அந்தத் திசையில் பார்க்க புகையாய் ஏதோ கலைந்தது போல் அவருக்குத் தோன்றியது.

அவசரமாய் தன் அறைக்குச் சென்று தாளிட்டார்.

‘இங்க அது இருக்கு’

பாலனுக்கு சொன்னால் என்ன?

ஜேபியிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளலாமே.

வேண்டாம்.

பாலனுக்கு எஜமான விஸ்வாசம் அதிகம். சொல்ல மாட்டேன் என்று விஷயத்தை வாங்கிக்கொண்டு சொல்லிவிட்டால் அது ப்ரியாவின் வாழ்க்கைக்கு ஆபத்தாகப் போய்விடும்.

யோசித்தவர் கவனத்தை ஈர்த்தது அந்த சத்தம்.

ஜன்னலை வெளியிலிருந்து யாரோ பிறாண்டுவது போல் உணர்ந்த விஜயானந்த் அதிர்ந்தார்.

“யாரு? ” குரல் நடுக்கமாய் வெளிவந்தது.

“சார் நான்தான் சார்”

You may also like

Leave a Comment

error: Content is protected !!