Home Featuredடேனியல் 3

டேனியல் 3

by GK Tamil Novels
10 views

டேனியல் 3
கவுதம் கருணாநிதி

அப்பாவைக் கொண்டுபோய் அடக்கம் பண்ணிட்டு வந்தாச்சு. சட்டுனு வாழ்க்கை வேற மாதிரி திசை மாறிடுச்சு. நான் சின்னப் பையன் இல்லன்னு எனக்குத் தெரிய ஆரம்பிச்சது. என்ன பண்ணனும்?

படிப்பு வேண்டாம். வேலைக்குப் போகணும். அக்காவையும் அம்மாவையும் நல்லபடியா வச்சிருக்கணும். இவங்க எப்படி வாழப் போறாங்கன்னு பார்க்கிற உலகத்துல வாழ்ந்து காட்டணும்.

என் முடிவை நான் யார்கிட்டயும் சொல்லலை. அக்கா கிட்ட அம்மாகிட்ட சொன்னா வேண்டாம் படின்னுதான் சொல்வாங்க.

படிப்பை விட்டுட முடிவு பண்ணேன்.

நான் மிரட்டும் போது ரத்தினம் பயந்தது நானே எதிர்பார்க்காத ஒண்ணு. எனக்கு உலகத்தை ஓரளவு புரிஞ்சது. நிறைய பேடிப் பசங்கதான் எல்லாரையும் மிரட்டறாங்க. யாராச்சும் திருப்பி அடிச்சா கதறிட்டு ஓடறாங்க.

என் மனசுக்குள்ள ஒரு நம்பிக்கை பொறந்துச்சு. இனி எந்த **** வந்தாலும் நான் பார்க்கறேன்.

படிப்பை விட முடிவு பண்ண எனக்கு ஹேமா மேடம் ஞாபகம் வந்துச்சு. அவங்களை நேராப் பாத்து சொல்லிட்டு வரலாம்னு தோணுச்சு.

காலேஜ்க்குப் போனேன். முதமுதலா எவனுக்கும் பயப்படாம உள்ள போனேன்.

மேடத்தோட சேம்பர் முன்னாடி நின்னேன். மேடம் இன்னும் வரல.

என்கிட்ட ஏற்கனவே கேட்ட பசங்கள்ல ரெண்டு பேர் வந்தாங்க.

“என்ன டேனியல் காலையிலேயே தரிசனத்துக்காக வெயிட் பண்றே?”

ஒருத்தன் கேட்டான்

“அவனுக்கு என்னடா? தரிசனம் எப்ப வேணாலும் கிடைக்கும் காலையிலயும் கிடைக்கும் ராத்திரியிலயும் கிடைக்கும்”

இன்னொருத்தன் சொன்னான். ரெண்டு பேரும் சிரிச்சாங்க.

அவங்களையே பார்த்தேன்.

யார் கிட்டயும் அடி வாங்காம வளர்ந்த பசங்க. அந்த விஷயத்துல நான் கொடுத்து வச்சவன். எங்க அப்பா என்ன அடிச்சு அடிச்சு என் உடம்பு உரமேறியிருக்கு.

வாட்ச் கழட்டி பாக்கெட்டில் போட்டேன்.

ரெண்டு பேரும் கேலியாப் பார்த்தாங்க.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு கைய பின்னாடி கொண்டு போனேன். முழு வேகத்துல ஒருத்தன் கன்னத்தில அறஞ்சேன். அப்படியே சுத்தி விட்டு விழுந்தான்.

இன்னொருத்தன் கோவமா என்னப் பார்க்க நான் யோசிக்கவே இல்லை. மூஞ்சில ஒரு குத்து. முழு பலத்தையும் உள்ளங்கையில் கொண்டுவந்து குத்தினா மூஞ்சி எப்படி ஷேப் மாறும்னு அன்னிக்குத் தான் பார்த்தேன்.

ரெண்டு பேரும் மூஞ்சிலயும் ரத்தம். முத முறையா ரத்தத்தைப் பார்க்கிறாங்க. அவங்க பக்கத்தில் திரும்ப போனேன். ரெண்டு பேரும் கத்தினாங்க.

“வேண்டாம் விட்டுடு”

“பேனா எடுங்கடா “

நான் சொல்ல ஒண்ணும் புரியாம பார்த்தாங்க.

“எடுங்கடா”

பேனா எடுத்தாங்க

“***தா பேப்பர் யார்றா எடுப்பாங்க?”

பேப்பர் எடுத்தாங்க

“எழுதுங்கடா”

“என்ன எழுதணும்?” பயமா கேட்டாங்க

“பெண்களை இனித் தவறாகப் பேச மாட்டோம்”

நான் சொல்ல ரெண்டு பேரும் எழுதினாங்க.

“ரெண்டு பேரும் மண்டி போடுங்க”

“புரியல”

“முழங்கால் மடக்கி மண்டி போடுங்கடா “

நான் கத்த உடனே மண்டியிட்டார்கள்.

“இப்படியே ஒரு மணி நேரம் ரெண்டு பேரும் இருக்கணும். கையில் இந்த பேப்பரை வச்சிருக்கணும்.’

அவங்க தயக்கமாகப் பார்க்க நான் நேத்திலிருந்து வச்சிருக்கும் அதை வெளியில் எடுத்தேன்.

அதைப் பார்த்தவங்க பதறிப்போய் மண்டிபோட்டு பேப்பரைத் தூக்கி வச்சிட்டாங்க.

அது வேறொண்ணுமில்ல. கத்தி தான்.

அவங்க ரெண்டு பேரும் அப்படி இருக்கிறதை எல்லாரும் பார்த்துட்டுப் போனாங்க.

ஹேமா மேடம் அப்பத்தான் வந்தாங்க. அவங்கள அப்படி பார்த்தவங்க கண்ணுல ஒரு சந்தோஷம்.

“டேனியல் என்ன இது?” கேட்டாங்க

“ஒரு பழைய கணக்கு மேடம்”

“உள்ள வா” கூப்பிட்டாங்க

போனேன்.

“என்ன டேனியல் இது? நீ ஒரு குழந்தை மாதிரி”

அவங்க சொல்றப்ப அழுகை வந்துச்சு. ஆனா அழல. என் கிட்ட யார் பாசமா பேசினாலும் எனக்கு அழணும் போலிருக்கும். யாருக்கும் தெரியாம எங்கயாவது போய் அழணும் போலத் தோணும். இப்ப அழ மாட்டேன். நான் குழந்தையில்ல. வளர்ந்துட்டேன். கயல் சொல்லிருக்கா. என்னோட முத்தம் அவ ஞாபகத்திலயே இருக்காம். என்னை ரொம்பப் பிடிச்சிருக்காம்.
என் கூடத்தான் வாழ்வாளாம். நான் எப்ப செத்தாலும் அடுத்த செகண்ட் அவளும் செத்துடுவாளாம். அவ சொல்றப்ப எனக்கு சந்தோஷமாத் தான் இருக்கும். எனக்கு கயலைப் பிடிக்கும். ஆனா கல்யாணம் பண்ண முடியாதுன்னு நல்லாத் தெரியும்.

அக்காக்கு காசு சேர்த்து கல்யாணம் பண்ணவே எவ்வளவு வருஷம் எடுப்பேன்னு எனக்குத் தெரியல. உறுதியான காலம் தெரியாம நேசிக்கிற பொண்ண எனக்காகக் காத்திருன்னு சொல்றது அயோக்கியத்தனம். இவ்வளவு வியாக்கியானம் பேசற நீ எதுக்கு அவளக் கூப்பிட்டுப் போய் முத்தம் கொடுத்தே? நீங்க கேப்பீங்க. நீங்க கேக்கறதுக்கு முன்னாடி என்னை நானே கேட்டுக்கிட்டேன். சில நேரங்கள்ல புத்தி. சில நேரங்கள்ல மனசு. நான் என்ன பண்ண? நானும் மனுஷன் தானே?

“உன்கிட்டத்தான் பேசிட்டிருக்கேன் டேனியல் என்ன யோசனை?”

ஹேமா மேடம் என்னையே பார்த்தாங்க.

“மேடம்”

“சொல்லு”

“நான் குழந்தை இல்லை மேடம்.”

“அப்புறம்?”

“நான் வளர்ந்துட்டேன் மேடம்”.

மேடம் ஒண்ணும் சொல்லாம என்னையே கொஞ்ச நேரம் பார்த்தாங்க. சிரிச்சாங்க.

“உட்காரு”

“பரவாயில்ல மேடம்”

“அடச்சீ உட்காரு”

உட்கார்ந்தேன்.

“சாப்பிட்டியா?”

இல்லைன்னு பொய் சொன்னேன்.

அவங்க என் கண்ணப் பார்த்தாங்க. நான் தரையப் பார்த்தேன்.

டிஃபன் பாக்ஸ் எடுத்துக் கொடுத்தாங்க.

“சாப்பிடு”

“பரவாயில்லைங்க மேடம்”.

“சாப்பிடு”

வேண்டாம்னு சொல்ல முடியல

பாக்ஸ் ஓபன் பண்ணேன்.

பிரியாணி இருந்துச்சு. இது எனக்கு வீக்னஸ். யார் பிரியாணி கொடுத்தாலும் ரொம்ப ரசிச்சு சாப்பிட்டுருவேன். அதுக்காகவே அவங்க திரும்ப பிரியாணி செய்யும்போது எனக்கும் போட்டுக் கொண்டுவந்துடுவாங்க.

சாப்பிட்டேன். மனம் நிறைந்தது.

“எப்படி இருக்கு ?” மேடம் கேட்க

“செம்ம மேடம்”. என் முகத்தின் மலர்ச்சி மேடத்தைப் புன்னகைக்க வைத்தது.

“நான் சொன்னா கேப்பியா?” மேடம் கேட்க தலையசைத்தேன்.

“அந்த ரெண்டு பேரையும் போகச் சொல்லு. பேரண்ட்ஸ் யாரும் பார்த்தா காலேஜ் பேர் கெட்டுடும்.”

மேடம் சொல்ல “சரிங்க மேடம்” னு சொல்லி

வெளியில் வந்தேன். ரெண்டு பேரும் என்னை பயமாய் பார்க்க

“எந்திரிச்சுப் போங்கடா” நான் சொன்னேன்.

சட்டுன்னு எந்திரிச்சுத் திரும்பிப் பார்க்காம ஓடுனாங்க.

மேடத்துக்கிட்ட படிப்பை விடற விஷயத்தைச் சொன்னேன். அவங்க எதிர்பார்க்கல.

கொஞ்ச நேரம் ஒண்ணும் பேசாம இருந்த மேடம் கண் மூடி சாமி கும்பிட்டாங்க. சொன்னாங்க.

“எங்க இருந்தாலும் நல்லா இரு. கோவப்படாத. எது செஞ்சாலும் யோசிச்சுப் பண்ணு”

“சரிங்க மேடம். வர்றேன் மேடம்”

தலையாட்டினாங்க.

“டேனியல்” கூப்பிட்டாங்க.

“மேடம்”

“பணம் எதுவும் வேணுமா?” கேட்ட மேடத்தை ஒண்ணும் சொல்லாமல் பார்த்தேன். என் உலகத்தில் கொஞ்ச நாள் மேடமும் இருந்திருக்காங்கங்கிறது எனக்குப் பெருமையா இருந்துச்சு.

“என்னங்க பட்டும் படாம பேசுங்க. காசு வேணும்னு கேட்டுறப் போறான்னு” சொல்ற சொந்தக்காரங்க இருக்கிற என் உலகத்தில் தான் மேடமும் இருக்காங்க.

“வேண்டாம் மேடம்” சொன்னேன்.

கையெடுத்துக் கும்பிட்டேன்.

வெளில வந்தேன்.

இனி என் லைஃப்ல காலேஜ் இல்ல.

தொடரும்..

 

 

You may also like

Leave a Comment

error: Content is protected !!