Home Featuredடேனியல் 2

டேனியல் 2

by GK Tamil Novels
12 views

டேனியல் 2
கவுதம் கருணாநிதி

ஒரு நிமிஷம் அவன் என்ன சொன்னான்னு எனக்குப் புரிஞ்சிக்க முடியல.

“என்ன சொல்ற சிவா?”

“உங்கப்பா செத்துப் போயிட்டாரு”

எனக்கு புரிஞ்சது. ஆனா என்ன பண்ணனும்னு சத்தியமாத் தெரியல.

ஐயோ அப்பான்னு கத்திட்டு ஓடணுமா?

எதுக்கு? இப்ப என்ன நடந்து போச்சு? ஒவ்வொரு நாளும் அவர் செத்துட்டிருந்தார். பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடியலன்னு. இப்ப ஒரேயடியா செத்துட்டாரு. அவ்வளவுதானே? இதுக்கு நான் எதுக்கு அழணும்?

அப்போ எங்கப்பாவ எனக்குப் பிடிக்கலையான்னு கேட்காதீங்க. ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் அவருக்கு விடுதலை கிடைச்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.

நான் சாதாரணமா நடந்து வர்றதைப் பார்த்த சிவா கேட்டான்.

“என்னடா இப்படி வரே? சீக்கிரமா வாடா”

“ம்”

இருவரும் விரைவாக நடந்தோம்.

வழில ஒரு பெட்டிக் கடையைப் பார்த்தேன்.

“சிவா”

“சொல்லு டேனியல்”

“ரெண்டு வாழைப்பழம் வாங்கிக் கொடுக்கறியா? பசிக்குது.”

நான் கேட்ட உடனே அவன் என்னைப் பார்த்தான். உடனே போய் ரெண்டு பழம் வாங்கிட்டு வந்தான். நான் சாப்பிடறதையே பார்த்தான்.

அவனுக்கு கண்ணு கலங்கிடுச்சு. எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. இவனுக்கு என்ன இவ்வளவு பிடிக்கும்னு எனக்குத் தெரியாது.

“வேற ஏதாவது வேணுமாடா?”

அவன் கேட்க வேணாம்னு தலையசைச்சேன்.

வீட்டுக்குப் போனோம்.

கூட்டம் சேர்ந்திருந்தது. அதுக்குள்ள பாடை கட்டறவங்க வந்து பாடை கட்டிட்டு இருந்தாங்க.

அம்மாவும் அக்காவும் சோகமா உக்காந்திருந்தாங்க. என்னப்பார்த்த அக்கா எந்திரிச்சு வந்துச்சு.

“என் கூட வா”

அக்கா சொல்ல பின்னாடியே போனேன்.

சமையல் கட்டுக்குப போன அக்கா ஒரு கட்டு பணம் எடுத்துக் கொடுத்துச்சு.

“அக்கா இது?”

“கையில இருக்கட்டும்
யார் யாருக்கு எவ்வளவுன்னு பார்த்துக் கொடு”

“சரிக்கா”

சங்கு சேகண்டி சத்தம் கேட்டுச்சு. சின்ன வயசுல இந்த சத்தம் கேட்கும்போது எனக்கு ஒண்ணும் புரியாது. தெரியாததை யாராவது கேட்டா தெரிஞ்சவங்க தெரியாதவங்களுக்குச் சொல்ல மாட்டாங்க. அதுக்குப் பதிலா அபசகுனமா பேசாதன்னு திட்டறாங்க. சகுனம் என்ன சுப சகுனம் என்னென்ன அபசகுனம் என்னென்னன்னு சொல்லிக் கொடுக்கலாமே

நான் யோசிச்சிட்டு நிக்க

“டேய்” அக்கா அதட்டினாள்.

“என்னக்கா?”

“நான் போறேன். தட்டுல நாலு இட்லி சட்னி போட்டு வச்சிருக்கேன். சீக்கிரம் சாப்பிட்டு வா”

சொல்லிட்டு அக்கா போய்டுச்சு. அப்பத்தான் எனக்கு கண்ல தண்ணி வந்துச்சு.

அப்பப் பார்த்து உள்ள வந்த ஒரு பெருசு

“அப்பாவோட இழப்பு ஈடு செய்ய முடியாதுப்பா கவலைப்படாதே” ன்னு சொல்ல நான் ஒன்றும் சொல்லவில்லை.

யார் அந்தப் பெருசுன்னு சத்தியமாக எனக்குத் தெரியல. யாருன்னு கேட்க ஆர்வமா இருந்தாலும் அக்கா ஏற்கனவே சொல்லிட்டுப் போயிருக்கு. யாரையும் யாருன்னு கேட்டுடாத. தப்பாப் பேசுவாங்கன்னு.

நான் ஒண்ணும் கேட்டுக்கல.

நான் அப்பாக்கு பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அவர் முகத்தைப் பார்த்தேன்.

என்னிக்குமே என்னப் பார்த்து சிரிக்காத ஒரு முகம்.

“அப்பா நான் கணக்குல எண்பது வாங்கிருக்கேன்.”

“அதுக்கென்ன இப்ப?”

“இல்ல கணக்கில் 60 வாங்கின பக்கத்து வீட்டு கணேஷுக்கு அவங்கப்பா வாட்ச் வாங்கிக் கொடுத்திருக்கார்.”

“அடி செருப்பால. இந்த வயசுலயே பக்கத்து வீட்டுக்காரன் கூட கம்பேர் பண்ணி அப்பனைக் கேள்வி கேக்கறியா? ஏண்டி இங்க வா இந்த நாயா நமக்கு நாளைப் பின்ன கஞ்சி ஊத்தப் போகுது?”

என்னை எட்டி உதைச்சிட்டு அம்மாகிட்டக் கேட்டார்.
அக்கா ஓடி வந்து தாங்கிப் பிடிச்சிடுச்சு.

“விட்றா அவர் குணம் தான் தெரியும்ல? எதுக்கு அவர்கிட்ட போய் பேசறே? “

அக்கா சமாதானப்படுத்துச்சு.

“டேனியல் நடராஜா தியேட்டர்ல மேட்டர் படம் பார்க்கப் போறோம். வர்றியா?”

ஃப்ரண்ட் ஒருத்தன் கூப்பிட்டான்.

ஆனா எனக்கு அப்ப மேட்டர்னா என்னன்னு தெரியாது. அவன் கிட்டே கேட்டேன். மேட்டர்னா என்னன்னு?

அவன் சிரிச்சான் ஒண்ணும் சொல்லல. என்னப் படத்துக்கு கூப்பிட்டுப் போகல. அவன் மட்டும் போயிட்டு வந்துட்டான்.

எனக்கு மேட்டர்னா என்னன்னு தெரிஞ்சுக்கணும். யார் கிட்ட கேட்கிறது? யோசிச்சுப் பார்த்தேன்.

அன்னிக்கு அப்பா எனக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்திருந்தார். நல்ல மூட்ல இருக்காரு என்னிக்காவது ஒரு நாள்தான் நல்ல மூடில் இருப்பார்.

கேட்டா தப்பா நினைக்க மாட்டார்னு நினைச்சு அப்பாக்கிட்ட கேட்டேன்.

அவர்கிட்ட கேக்கறதுக்கு முன்னாடி பக்கத்திலிருந்த கம்பு குச்சி எடுத்து அடிக்கறதுக்கு என்னென்ன இருந்துச்சோ எல்லாத்தையும் மாத்தி வச்சிட்டேன்.

“அப்பா”

“ம்”

“ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?”

“அது நீ கேட்கிற விஷயத்தை பொறுத்தது.”

என்னோட மனசாட்சி எச்சரிக்கை பண்ணுச்சு. அதையே இதையும் கேட்டு இந்த மனுஷன் கிட்ட அடி வாங்கிச் சாகாதன்னு. நான்.கண்டுக்கல. என்னோட நேரம் அப்படி .நான் என்ன பண்றது?

“என்ன விஷயம்? சீக்கிரம் கேளு”..
அப்பா சட்டென்று சொல்ல யோசிக்காமல் கேட்டுவிட்டேன்.

“மேட்டர்னா என்னப்பா?”

என்ன கேட்ட?

“மேட்டர்னா “முடிக்கவில்லை கொத்தாக என் முடியைப் பற்றி அப்படியே தூக்கி கீழே எறிந்தார்.

“அய்யோ அப்பா வேணாம்பா விடுங்கப்பா”

நான் கத்துனது அவர் காதில விழல. செம்ம அடி.

இறந்து கிடந்தவர் முகத்தில் ஒரு அமைதி தெரிந்தது.

‘என்னப்பா நீ? பையன் கிட்ட எப்படி நடக்கணும்னு கடைசி வரைக்கும் தெரியாமயே போயிட்டியே. பாவம்பா நீ.’

எனக்கு அவர் மீது அனுதாபம் வந்தது. உலகத்தை சந்திக்க முடியாம அந்த கோபத்தை வீட்ல காண்பிக்கிற எத்தனையோ பேர்ல நீயும் ஒண்ணுப்பா. போயிட்டு வா முடிஞ்சா என் பையனா வா. ஒரு அப்பா எப்படி நடந்துக்கணும் நான் நடந்து காட்டறேன்.

சிவா மெல்ல என் பக்கம் வந்தான்.

“டேனியல் ஒரு சின்ன பிரச்னை”

எந்திரிச்சேன்.

“என்ன?”

“அதோ நிக்கறாரே. ப்ளு கலர் ஷர்ட் போட்டு.”

“ம்”

“அவர் கிட்ட அப்பா கொஞ்சம் காசு வாங்கி இருக்காரு அது கொடுக்காம?”

“கொடுக்காம?”

“அப்பாவை எடுக்கவிடமாட்டேன்னு சொன்னார்.”

“எவ்வளவு வாங்கியிருக்கார்?”

நாலு லட்சம்.

“நாலு லட்சமா?”

“ம்”

எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. நாலு லட்சம் எங்களுக்கு ரொம்பப் பெரிய தொகை.

அவர்கிட்டப் போனேன்.

“ஐயா வணக்கம் நீங்க?”

“என்னோட பேர் ரத்தினம். பைனான்ஸ் பண்றேன்.”

“அப்பா உங்ககிட்ட எவ்வளவு வாங்கியிருக்காரு?”

“நாலு லட்சம்.”

“எங்ககிட்ட உங்க கிட்ட பணம் வாங்குனது பத்தி ஏதும் சொல்லல.”

“அதுக்கு?”

“கொஞ்சம் பொறுமையா இருங்க என்னால் கண்டிப்பா திருப்பிக் கொடுக்க முடியும் அப்பா உங்ககிட்ட பணம் வாங்கியிருந்தா”

நான் சொல்லச்சொல்ல அவர் சத்தம் போட ஆரம்பித்தார்

“டேய் யார்கிட்ட? என்னோட பணம் வராம பொணத்தைத் தூக்க விட மாட்டேன்.”

“அப்படி சொல்லாதீங்கய்யா உங்க பணம் எங்கேயும் போகாது நான் கண்டிப்பா கொடுத்திடுவேன்”

நான் கையெடுத்துக் கும்பிட அவர் கண்டுகொள்ளவில்லை.

அனைவரும் வேடிக்கை பார்த்தனர்.

அம்மாவும் அக்காவும் என்ன செய்வதென்று தெரியாமல் என்னைப் பார்க்க ஒரு நிமிடம் திரும்பி அப்பாவைப் பார்த்தேன். அவர் அறைக்குள் சென்றேன். பாதி குடித்து விட்டு வைத்திருந்த ஃபுல் பாட்டில் இருந்தது. யோசிக்காமல் எடுத்து காலி செய்தேன்.

வெளியே வந்தேன்.

எங்க போச்சு என்னோட பயம்?

“டேய் **””தா “

நானா? என்னால் நம்ப முடியவில்லை.

ரத்தினம் அதிர்ந்து போய் பார்க்க

“அப்பா உன்கிட்ட வாங்கின பணம் எவ்வளவு?”

“ரெண்டு லட்சம்.”

“என்ன **** நாலு லட்சம்னு சொன்னே?”

“வட்டியெல்லாம் சேர்த்து”

“டேய் ரத்தினம் அசல் மட்டும் ஆறு மாசத்துக்குள்ள தரேன். வட்டி கேட்டேன்னு வை வகுந்துடுவேன்.
பொணத்தைத் தூக்க விட மாட்டேன்னு இன்னொரு தாட்டி சவடால் பேசினா **”” உன்னைய பொணம் ஆக்கிட்டு என் அப்பனை தூக்கிட்டு நான் சுடுகாட்டுக்கு போறேன்டா”

நான் சொல்ல ரத்தினம் பேச்சு மூச்சில்லாமல் நின்றான். எல்லாரும் என்னை விசித்திரமாகப் பார்த்தனர்.

எங்கிருந்து வந்தது இந்த கோபம்? எனக்குத் தெரியவில்லை.

தலை இருக்க வால் ஆடக்கூடாதுன்னு அப்பா சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு. தலை தான் இல்லயே இப்ப. இனி வால் தான ஆடணும்.

ஆடறேன். இனி என்னோட ஆட்டம் தான்.

தொடரும்.

 

You may also like

Leave a Comment

error: Content is protected !!