Home Featuredடேனியல் 1

டேனியல் 1

by GK Tamil Novels
34 views

டேனியல் 1
கவுதம் கருணாநிதி

 

ரொம்ப நேரமா குயில் கூவறத வேடிக்கை பார்த்துட்டுருந்தேன்.
நல்லா இருந்துச்சு. இந்த தோப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். இங்கே வந்து ஒளிஞ்சுக்கிட்டா யாராலயும் அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது.

ஒரு மாதிரியா பார்க்கறீங்கன்னு தெரியுது. என்ன பண்றது? சின்ன வயசுல இருந்தே எனக்கு பயம் ஜாஸ்தி.

சின்ன வயசுல வெளியில விளையாடப் போவேன். யாராச்சும் அடிச்சிடுவேன்னு விளையாட்டுக்குச் சொன்னாக்கூட எனக்கு பயமா இருக்கும் வீட்ல வந்து ஒளிஞ்சுக்குவேன். ஸ்கூலுக்கு போறப்பக் கூட அவங்க யாராச்சும் பார்த்தா அப்படியே நைஸா ஓடிப் போய்டுவேன்.

சின்ன வயசுல இருந்தே எனக்கு பொண்ணுங்கன்னா ரொம்பப் பிடிக்கும். எவ்வளவு சாஃப்டா பேசறாங்க ஆனா பசங்க மட்டும் காட்டுத்தனமா கத்துவாங்க. நான் பொண்ணுங்க கூட விளையாடுறத வச்சு பசங்க என்ன அவங்க கூட சேத்துக்க மாட்டாங்க. எனக்கும் அது பெரிய பிரச்னையாத் தெரியல.

வீட்ல அப்பா மட்டும் என்ன காட்டுத்தனமா அடிப்பார். அப்பா அடிச்சு அடிச்சு எனக்கு மரத்துப் போச்சு. அப்பா என்னை அடிச்சுட்டு வெளியே போனதுக்கப்புறம் அம்மாவும் அக்காவும் அழுதுட்டே மருத்து போடுவாங்க. எனக்கு கஷ்டமா இருக்கும். அடி வாங்குனதுக்கில்லை. அவங்க ரெண்டு பேரும் அழறதைப் பார்த்து.

சின்ன வயசுல இருந்தா எங்க அப்பாக்கு என்னைப் புடிக்காம போயிருச்சு. என்னை யாருக்கு புடிச்சிருக்குன்னு லிஸ்ட் போட்டேன் ஒரு நாள்.

அம்மா
அக்கா
அனிதா. என் சித்திப் பொண்ணு.
கயல். என் க்ளாஸ் மேட்

அவ்வளவுதான்.

ம் சொல்ல மறந்துட்டேன்.

எங்க காலேஜ் மேடம்.
ஹேமா மேடத்துக்கு என்னைப் பிடிக்கும்

நான் ஒரு நாள் கேட்டுட்டேன்.

“ஏன் மேடம் என்னை உங்களுக்குப் பிடிக்கும்னு?”

அவங்க சிரிச்சாங்க. சிரிச்சிட்டே சொன்னாங்க.

“நீ ஒரு அப்பாவி டேனியல். அதான்.”

உண்மையா சொன்ன அப்பாவின்னா அப்ப எனக்குத் தெரியாது. அப்புறம் அம்மா கிட்ட கேட்டா சொன்னாங்க

அப்பாவின்னா ஒரு பாவமும் தெரியாதவன் ஒரு பாவமும் செய்யாதவன்.

எனக்கு சிரிப்பா வந்துச்சு. மேடத்துக்கு என்னப் பத்தித் தெரியல. நான் நிறையத் தப்பு பண்ணியிருக்கேன்.

காக்காக்கு வெக்கச் சொன்ன வடையை நானே சாப்பிட்டிருக்கேன். பாவம் காக்கா பசியா இருந்திருக்கும்.

அக்கா செஞ்ச லட்டு அக்காக்கு தெரியாம திருடி சாப்பிட்டிருக்கேன். அக்காகிட்ட மாட்டிட்டு அக்கா ஒண்ணும் பண்ணல. சிரிச்சிட்டுப் போயிட்டா.

இப்ப எதுக்கு இந்த தோப்பில வந்து ஒளிஞ்சிட்டிருக்கேன்னா எங்கப்பா கிட்ட இருந்து தப்பிக்க.

கயல் கிட்ட முத்தம் கேட்டு அவளும் தரேன்னு யாரும் இல்லாத இடத்துக்குப் போனோம். அங்க ராஜண்ணன் சரக்கடிச்சிட்டிருந்தார். அவர் கிட்ட மாட்டி அவர் அப்பா கிட்ட சொல்றேன்னு சொல்லிட்டார்.

அப்பா வீட்டுக்கு வந்தா பெல்ட்டால அடி கிடைக்கும். என்னால முடியாது.

தோப்புக்கு வரும்போது சாப்பிட ஏதாவது கொண்டு வந்திருக்கலாம்.
அவசரத்தில் ஓடி வரும்போது எதுவும் கொண்டு வரல. பசிக்குது.

திருக்குறள் ஞாபகம் வந்துச்சு. செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
நல்ல விஷயங்களை கேட்க முடியாமப் போகும்போது மட்டும் தான் வயித்தப் பத்தி யோசிக்கணும் சாப்பிடணும்.

இப்ப குயில் கூவறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதற்காக சாப்பிடாம இருக்க முடியுமா?

இத நான் எங்கயாவது கேட்டா என்னக் கேவலமா பார்க்கிறாங்க.

அவ்வளவு பெரிய ஆளா ஆயிட்டியா நீ? அவங்க பார்வையில் தெரியும்.

வீட்ல இருந்தா அக்கா எனக்கு சரியான நேரத்தில ஏதாவது சாப்பாடு கொடுப்பா. அக்கா பாவம்.
இருபத்தாறு வயசாகுது. பிளாஸ்டிக் கம்பெனில வேலைக்குப் போகுது.

வீட்ல வரன் பார்த்துட்டுருக்காங்க வர்றவங்க எல்லாம் பொண்ணு புடிச்சிருக்குன்னு சொல்றாங்க. அதுக்கப்புறம் அவங்க கொடுக்குற லிஸ்ட் எங்களால ஒண்ணும் பண்ண முடியல. ஒவ்வொரு தாட்டியும் அக்காவப் பொண்ணு பார்க்க வரும்போது அன்னிக்கு சாயங்காலம் அப்பா ஒரு ஆஃப் பாட்டில் ஒரு கோழி வாங்கிட்டு வருவார்.

தண்ணியடிப்பார்.

வாய்க்கு வந்தபடி திட்டுவார். யாரைன்னு அவருக்கும் தெரியாது. எங்களுக்கும் தெரியாது.

என்னைக் கூப்பிடுவார். அவ்வளவுதான். எல்லாக் கோபமும் என் மேல இறங்கும். அக்காதான் அழுதுட்டே மருந்து போட்டுவிடும்.

நான் ஒருநாள் அப்பாகிட்ட கேட்டுப் பார்த்தேன்.

“அப்பா நான் வேணும்னா படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போகவா?”

“எதுக்கு?”

“அக்கா கல்யாணத்துக்கு நான் உங்களுக்கு உதவியா”

“ஒரு மயிரும் வேணாம். படிச்சு முடிச்சவனே ஆடிட்டிருக்கான். நீ படிப்ப விட்டுட்டு வெறும் பிளஸ் டு வச்சுட்டு வேலைக்குப் போனா என்ன கிடைக்கும்? வர்றவன் கேக்கறான் லட்ச லட்சமா. நீ வேலைக்குப் போய் வர்ற ஆயிரத்த வச்சு ஒண்ணும் புடுங்க முடியாது.”

“சரிப்பா”

“ஒழுங்கா படிக்கிற வேலையை கவனி.”

“சரிப்பா”

“என் பொண்ணோட கல்யாணம் என்னோட பிரச்னை. தலை இருக்க வால் ஆடக்கூடாது. புரிஞ்சதா?”

“புரிஞ்சதுப்பா”

லைஃப்ல பையனா பொறந்துட்டு அதுவும் குடும்பம் கஷ்டப்படறப்ப ஒண்ணும் பண்ண முடியாம இருக்கிறது அனுபவிச்சாத் தான் புரியும்.

சரி காலேஜ்ல ஃப்ரண்ட்ஸ் யாராவது அனுசரணையா இருப்பாங்கன்னு பார்த்தேன். எல்லாரும் பீர் சாப்பிடறதும் பைக்ல சுத்தறதுமா இருக்க எனக்கு செட் ஆகல. அப்படி இருக்கிற பசங்க கூடத்தான் பொண்ணுங்களும் பேச நான் காலேஜ்லயும் யார் கூடவும் பேசறதில்ல. ஹேமா மேடத்துக்கு மட்டும்தான் என்னைப் பிடிக்கும். எனக்கும். மேடம் ரொம்ப அழகா இருப்பாங்க. அவங்க என் கூட நல்லாப் பேசறது பார்த்து கிளாஸ் பசங்க கொஞ்சம் பேர் என்கிட்ட வந்து கேட்டாங்க.

“என்னடா உன்கிட்ட மட்டும் அவ பேசறா?”

“மேடத்தை அவ ன்னு சொல்லாதிங்க ப்ளீஸ்” நான் சொல்ல

சொன்னவன் மற்றவர்களைப் பார்த்து ஒரு மாதிரியாக சிரித்தான்

“மச்சான் அந்தளவுக்கு ஆயிடுச்சு. அவ ன்னு சொன்னா இவன் மனசு கஷ்டப்படுது”.

“சரி விடு”. சொன்னவன் என்னை நெருங்கி என் முகத்தருகே வந்து கேட்டான்.

“உன் கிட்ட மட்டும் பேசறாங்க உன் மேடம். என்னப் பண்ணினே?”

“டெய்லி அவங்க வரும்போது”

“வரும்போது?”

“விஷ் பண்ணுவேன்.”

நான் சொல்ல எல்லாரும் சிரித்தனர்.

“விஷ் பண்ணுவானாம் போடா போய் எல் கே ஜி படி” சொன்னவங்க ஹேமா மேடம் வர அவசரமா அங்கயிருந்து போயிட்டாங்க.

“என்ன டிஸ்கஷன்?”

“உங்களப்பத்தித் தான் மேடம்”

“என்னப்பத்தியா? என்னது?”

“நீங்க என்கிட்ட மட்டும் பேசறீங்க. நான் என்ன பண்ணேன்னு கேட்டாங்க”

“ராஸ்கல்ஸ் “

“எதுக்கு மேடம் அவங்களத் திட்டுறீங்க?”

நான் கேட்க மேடம் ஒன்றும் சொல்லவில்லை.

தோப்பிலே உட்கார்ந்துட்டு எல்லாமே யோசிச்சிட்டுருக்கேன். அப்பா கிட்ட மாட்டினா முதுகில தோல் உரிஞ்சிடும்.

ஆனா பசி அதையும் தாண்டி பிரச்னை பண்ணுச்சு.

பயமா? பசியா?

என்ன பண்றது?

யோசிச்சேன்.

“டேனியல்”

யாரோ என்னக் கூப்பிட்டாங்க.

யாருன்னு பார்த்தேன்.

சிவா. என்னோட ஃபிரண்ட். கயலுக்கு அடுத்த படியா இவங்கிட்டத் தான் நல்லாப் பேசுவேன்.

என்கிட்ட மூச்சு வாங்க வேகமா ஓடிவந்த சிவா சொன்னான்.

“டேனியல்”

“சொல்லு சிவா”

“உங்கப்பா செத்துப் போயிட்டாரு”

தொடரும்.

 

 

 

 

 

You may also like

Leave a Comment

error: Content is protected !!