டேனியல் 4
கவுதம் கருணாநிதி
எங்கெல்லாமோ சுத்திட்டு சாயங்காலம் தான் வீட்டுக்குப் போனேன். அம்மாவும் அக்காவும் சோகமாக இருந்தாங்க.
என்னமோ நடந்திருக்கு.
“என்ன ஆச்சும்மா?” அம்மாவிடம் கேட்க அம்மா என்னைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல் மௌனத்தைத் தொடர்ந்தாள்.
அக்காவைப் பார்த்தேன்.
“என்னக்கா ஆச்சு?”
“ஒண்ணுமில்ல வா சாப்பிடு”
“என்னன்னு கேக்கறேனில்ல?”
அக்கா ஒன்றும் சொல்லவில்லை.
வெளியே கிளம்பினேன்.
தோப்புக்குப் போலாமா? யோசனை வர நடந்தேன்.
பாதி தூரம் நடந்திருப்பேன்.
எதிரில் சிவா வந்தான்.
“டேனியல் எங்க போன நீ?”
“என்னாச்சு சிவா?”
“ரத்தினம் வந்திருந்தான். வீட்ல வந்து கத்தினான்”.
எனக்குப் பதட்டமானது.
“அம்மா அக்கா மட்டும் தானே இருந்தாங்க? நான் வீட்ல இல்லையே?”
“அவன் அது பத்திலாம் யோசிக்கல. காட்டுத்தனமா வந்து கத்தினான். நான் தான் டேனியல் வரட்டும் பேசிக்கலாம்னு சொன்னேன். நீ என்ன என்கூட பேசற அளவுக்கு ஆள் மயிராயிட்டியான்னு கேட்டுட்டு..”
“கேட்டுட்டு?”
“அத விடு டேனியல்.”
“மறைக்காத சிவா. என்ன நடந்துச்சு?”
“விடு டேனியல். உனக்காக நான் அறை வாங்கக் கூடாதா?” சிவா சிரிக்க எனக்குள் கோவம்.
என்ன செய்யலாம்? அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்கணும். அதுக்கு என்ன வழி?
இப்போதைக்கு என் கிட்ட எந்த வழியும் இல்ல.
“சிவா ஸாரிடா” என் கண் கலங்கினதைப் பார்த்த சிவா
“டேனியல் சின்ன வயசிலிருந்தே எனக்கு உன்னப் பிடிக்கும் டா . உன் அப்பாகிட்ட அடி வாங்கி நீ கத்தற சத்தம் கேட்க முடியாம கதவைச் சாத்திக் கஷ்டப்பட்டுருக்கேன்.”
எனக்குள் நெகிழ்ந்தது.
“பணத்தை எப்படியாவது திரும்பக் கொடுத்துட்டு அதுக்கப்புறம் அவனை வெச்சுக்கறேன்.”
நான் சொல்ல சிவா புன்னகைத்தான்.
“படிப்ப விட்டுட்டியா?”
“ம்”
“அடுத்து என்ன பண்ணப் போறே?”
“தெரியல.”
“நான் ஒரு வழி சொல்லட்டா?”
“ம்”
“ஆட்டோ ஓட்டறியா?”
“தெரியாதே. அதுமட்டுமில்ல ஆட்டோக்கு என்ன பண்றது?”
“ஆட்டோ ஓட்டறது ஈஸி மூணு நாள்ல கத்துக்கலாம். கவுண்டர் கிட்டப் பேசலாம். அவருக்கு மூணு ஆட்டோ இருக்கு. டெய்லி கலெக்சன் அவர்கிட்ட கொடுத்துட்டு உன்னோட சம்பளத்தை வாங்கிக்கலாம்.”
“அவர் எதை நம்பி எனக்கு ஆட்டோ கொடுப்பாரு?”
“அது நான் பார்த்துக்கறேன்.”
சிவா சொல்ல தலையசைத்தேன்.
இருவரும் கவுண்டரின் தோட்டத்திற்குப் போனோம்.
நாங்கள் தோட்டத்திற்குள் நுழைவதை கவுண்டர் பார்த்துவிட்டார்.
“வாடா சிவா எப்படி இருக்கே?” பாசமாய் கேட்டார்.
“நல்லா இருக்கேன் அய்யா.”
“இதாரு?”
“டேனியல். ஃப்ரண்ட்”
“என்ன பண்ற நீ?”
கவுண்டர் என்னிடம் கேட்க சிவா இடைமறித்தான்.
“அதுக்குத்தான் அய்யா உங்க கிட்ட வந்துருக்கோம்.”
“சொல்லு”
‘ஆட்டோ ஓட்டறதுக்கு ஆள்”
“யாரு இவனா? பார்க்க குழந்தை மாதிரி இருக்கான்.”
“நல்லவன். நீங்க மனசு வச்சா?”
“என்ன பண்ற நீ?”
என்னிடம் கேட்டார்.
“படிச்சுட்டிருந்தேன்.”
“ம்”
“அப்பா செத்துட்டாரு படிப்பை விட்டுட்டேன்.”
அவர் முகம் மாறியது.
“அதுக்காக எதுக்கு படிப்ப நிறுத்தணும்?”
கேட்டார்.
“என் விருப்பம்” நான் சொல்ல சிவா திடுக்கிட்டுப் போய் என்னைப் பார்த்தான்.
அந்த பதிலை கவுண்டர் எதிர்பார்க்கவில்லை. ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார். என்னைப் பார்த்து சிரித்தார்
“நான் உனக்கு ஆட்டோ தரேன்.”
***
ஒரு வாரத்தில் ஆட்டோ நன்றாக ஓட்ட ஆரம்பித்துவிட்டேன்.
காலையில் ஆறு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் நைட் பதினோரு மணிக்குத் தான் வருவேன். வெறி.
சும்மா இருந்தால் கண்ட நினைவுகள் வரும். காயப்படுத்தும். என்னை நானே பிஸியாக வைத்துக் கொண்டேன்.
அப்பாவின் வரவு செலவு கணக்கு நோட் புக்கை எடுத்துப் பார்த்ததில் புரிந்தது அவர் ரெண்டு லட்சம் ரூபாய் மட்டும்தான் வாங்கியிருக்கிறார். ரத்தினம் அதற்கு அநியாய வட்டி போட்டு வட்டிக்கு வட்டி போட்டு எப்படியோ நாலு லட்சம் கொண்டு வந்திருக்கான்.
ரெண்டு லட்சம் முதலில் அவனுக்குக் கொடுக்க வேண்டும். அதற்கு என்ன வழி?
யோசித்தேன். ஒரு வழியும் கிடைக்காது உறங்கிப் போனேன்.
மறுநாள் காலை ஆட்டோ ஸ்டாண்டில் நின்றிருந்தேன். போன் வந்தது.
“பேசறது டேனியலா ?”
“ஆமா நீங்க?”
“என் பேர் ராஜசேகரன். உங்க அப்பாவோட கம்பெனி முதலாளி”.
“அய்யா வணக்கம் மன்னிக்கணும் யாருன்னு தெரியாம”
“பரவாயில்ல”
“சொல்லுங்கய்யா”
“நீயும் உங்கம்மாவும் கம்பெனிக்கு வந்து ரிஜிஸ்டரில் சைன் பண்ணி செக் வாங்கிக்குங்க.”
“அய்யா இது?”
“வேலை செய்யும் போதே செத்துப்போனவங்களுக்கு எங்க கம்பெனில செய்ற நடைமுறைதான் இது.”
“நன்றிங்க”
“இருக்கட்டும்.”
அவர் பேசி முடித்துவிட்டு வைத்துவிட வீட்டிற்கு போய் அம்மாவை கூப்பிட்டுக்கொண்டு கம்பெனிக்குப் போனோம்.
அரசு அலுவலகங்கள் போல் அதிக நேரம் நாங்கள் காத்திருக்கவில்லை. அவர்கள் காத்திருக்க வைக்கவில்லை என்பதுதான் உண்மை. ஒன்றரை லட்சம் ரூபாய்க்கான செக் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது.
திரும்பி வரும்போது அம்மாவை ஒரு பேக்கரிக்கு அழைத்துச் சென்று காபி வாங்கிக் கொடுத்தேன்.
அம்மா ஏதோ யோசனையில் இருக்க
“என்னம்மா? சொல்லு. இந்தப் பணத்தை என்ன பண்ணனும்?”
கேட்டேன்.
“ரத்தினத்தோட கடனை முதல்ல அடைக்கணும்” அம்மா சொல்ல தலையசைத்தேன்.
அப்பா வாங்கியது இரண்டு லட்சம் இப்பொழுது செக் கிடைத்திருப்பது ஒன்றரை இலட்சத்திற்கு இன்னும் அம்பதாயிரம் தானே? எப்படியும் அடைத்து விடலாம் என்ற நம்பிக்கை வந்தது.
இரண்டு நாட்கள் கழிந்து ஒன்றரை லட்ச ரூபாய் எடுத்துக்கொண்டு ரத்தினத்தைப் பார்த்து கொடுத்து விட்டு வரலாம் என்று முடிவு செய்தேன். அவனுக்கு சொந்தமான காட்டில் தான் பெரும்பாலும் அவன் இருப்பான் என்று சிவா சொல்லியிருந்தான்.
போனேன். என்னைப் பார்த்தவன் என்ன என்று கேட்டான்.
“பணம் கொண்டு வந்திருக்கேன்.”
“எவ்வளவு?
“ஒன்றரை லட்சம்.”
“கொண்டா”
கொடுத்தேன். எண்ணிப்பார்த்தான்.
“மீதி?”
“மீதி அம்பதாயிரம் சீக்கிரமாத் தரேன்.”
“வட்டி எங்க?”
“அப்பா செத்துட்டாரு. அவர் இருந்திருந்தா வட்டியும் சேர்த்துக் கொடுத்திருப்பார். வட்டிக்குப் பணம் வாங்கினவன் செத்துப்போயிட்டா வட்டிய கொஞ்சம் விட்டுக் கொடுங்க. அது ஒண்ணும் தப்பில்லை.”
“இந்த உபதேச மயிர் எல்லாம் வேண்டாம். அன்னிக்கு நீ என்னமோ பெரிசா கிழிக்கற மாதிரி எகிறினே. எழவு வீடுன்னு தான் பிரச்சனை பண்ணாம வந்துட்டேன். புரிஞ்சதா?”
ரத்தினம் எகிற நான் மௌனமாய் நின்றேன்.
“உன்ன மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருப்பேன்? நேத்து பெய்ஞ்ச மழையில இன்னைக்கு முளைச்ச காளான் நீ.”
கொஞ்சநேரம் அவனையே பார்த்தேன்.
எத்தனை பேரிடம் வட்டி வாங்கி இருப்பான்? எத்தனை பேர் மனம் நொந்து போயிருப்பர்? ராசம்மா இவன்கிட்ட வட்டிக்கு வாங்குனதால தற்கொலை பண்ணி செத்துப் போய்ருக்கா. இவனுக்கு ஒண்ணும் ஆகலையே? தோப்பு மேல தோப்பு வாங்கறான். புல்லட்டில் பெரிய மயிரு மாதிரி ஊருக்குள்ள பவனிவரான்.
“என்னடா யோசனை? நாலு லட்சத்துக்கு ஒரு ரூவா குறைஞ்சாலும் நான் மனுஷனா இருக்க மாட்டேன்”
அவன் சொல்ல அவனையே பார்த்தேன்.
“இப்ப மட்டும் நீ மனுஷனாவா இருக்க?” நான் கேட்க
கோபத்தோடு எழுந்தான்.
“என்னடா எகத்தாளம் பண்றியா?”
சுற்றுமுற்றும் பார்த்தேன். என் நல்ல நேரமா அல்லது அவனுக்கு கெட்ட நேரமா என்று தெரியவில்லை. யாரும் இல்லாமல் தனியாக மாட்டியிருக்கிறான். சட்டென்று பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து காற்றில் ஆவேசமாக வீசினேன். அது ரத்தினத்தின் கழுத்தை நேர்கோடாய் அறுக்க நம்ப முடியாமல் என்னைப் பார்த்தான்
கீழே தள்ளினேன்.
“டேய் ***தா நான் உன்னை எதும் பண்ணக் கூடாதுன்னு ரொம்ப முயற்சி பண்ணேன். ஆனா நீ தான் ஜெயிச்சுட்ட. உனக்கு நாலு லட்சத்துக்கு ஒரு ரூவா குறையக் கூடாது. அவ்வளவு தானே? மேலப் போ எங்கப்பன் இருப்பான். அவன்கிட்ட வாங்கிக்க”
அவன் மேல் அமர்ந்து கொண்டு நிறுத்தி நிதானமாய் அவன் கழுத்தை அறுத்தேன். முகம் அஷ்டகோணலாய் வைத்துத் துடித்தான். அஞ்சு நிமிஷம் துடிச்சான். அடங்கிட்டான். கத்திய எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டேன். நான் கொடுத்த ஒன்றரை லட்சத்தை நானே எடுத்துக்கிட்டேன்.
சாவகாசமா நடந்தேன். என்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
தொடரும்.
