டேனியல் 5
கவுதம் கருணாநிதி
ரொம்ப நாளாச்சு தோப்புக்கு வந்து.
மனசு விட்டுப் போயிடுச்சு.
இனி பிரச்னை இல்லன்னு ஒரு மனசு சொல்லுது. இனி தான் பிரச்னை இருக்குன்னு இன்னொரு மனசு.
ரத்தினம் செத்தது ஊருக்குள்ள எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு. நெறைய பேர் நெறைய விதமாப் பேசினாங்க. அவன் கொன்னிருப்பான் இவன் கொன்னிருப்பான்னு.
அவன் செத்தது தெரிஞ்ச அம்மா பிள்ளையார் கோவிலுக்கு போய் தேங்காய் உடைச்சிட்டு வந்தாங்க. அக்கா மட்டும் அடிக்கடி என்னையே பார்த்துச்சு. வீட்ல உட்கார்ந்திருந்தா அக்காகிட்ட கண்டிப்பா மாட்டிப்பேன்னு தோணுச்சு. அதான் இங்க வந்துட்டேன்.
வர்ற வழியில கயலப் பார்த்தேன். ரொம்ப அழகா இருந்தா. யாருக்கும் தெரியாம என்னப் பார்த்து கண்ணடிச்சா. அப்படியே ஜிவ்னு ஆயிடுச்சு. ஏண்டா கொலை பண்ணிட்டு பேசற பேச்சான்னு கேக்கறீங்களா? எனக்கென்னமோ அது கொலை மாதிரியே தெரியல. இது எப்படி சொல்றது? இருங்க ஒரு நிமிஷம் ரைட்டர் சார் கிட்ட கேட்டுச் சொல்றேன். ஓகே சார். சரி சார்.
வாழக் கூடாதவனை வழியனுப்பி வச்சேன். அவ்வளவு தான். கொஞ்சம் பேருக்கு அரசல் புரசலாத் தெரிஞ்சிருக்கும் போல. பார்த்தா விஷ் பண்ணிட்டுப் போறாங்க. எந்தத் தப்பும் பண்ணாம இருக்கறப்ப யாரும் என்னைக் கண்டுக்கலை. இப்ப ஒவ்வொருத்தன் விஷ் பண்றப்ப ஒரு போதை வருது.
துப்பாக்கில தளபதி சொல்ற மாதிரி
அந்த பயம் இருக்கணும்னு. நானும் சொல்லிப் பார்த்தேன். இல்ல. எனக்கு செட் ஆகல.
பணத்த அக்காவோட பேங்க் அக்கவுண்ட்ல போட்டுட்டேன். அக்கா மொபைலுக்கு வந்த மெசேஜை அக்கா பார்க்கறதுக்கு முன்னாடி அழிச்சிட்டேன்.
எனக்கு என்ன முடிவுன்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு. போலீஸ் எப்ப வேணாலும் கொண்டு போகும். எவ்வளவு லேட்டா வர்றாங்களோ அவ்வளவு லாபம் எனக்கு அவ்வளவு தான்.
அக்காக்கு ஒரு நல்லது பண்ணிட்டா அதுக்கப்புறம் எனக்கு எந்த பிரச்னையும் இல்ல.
என்னோட மொபைல் அடிச்சிச்சு.
புது நம்பர். மனசுல ஒரே பதட்டம்.
வெளிய காட்டிக்காம இருக்கணும். அதான் ரொம்ப முக்கியம். எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.
எடுத்தேன்.
“ஹலோ”
“யார் பேசறது? ஆட்டோ டேனியலா ?”
“ஆமா நீங்க?”
“சப் இன்ஸ்பெக்டர்”
முடிஞ்சு போச்சு எல்லாமே முடிஞ்சிடுச்சு. எனக்கு என்ன பேசறதுன்னு தெரியல. எதுவும் பேசாம இருந்தேன்.
“இருக்கீங்களா?” அவர் கேட்க
“இருக்கேன் சார்” சொன்னேன்.
“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். என்னை வந்து பார்க்க முடியுமா?”
“வர்றேன் சார். “
வைத்துவிட்டார்.
இப்ப என்ன பண்றது? போய் ஒத்துக்கலாமா? நான் தான் கொன்னேன்னு. அம்மாவும் அக்காவும் என்ன நினைப்பாங்க?
கடவுளே நீ தான் அவங்களப் பார்த்துக்கனும். அவங்க ஏதும் தப்பாப் பண்ணிக்கக் கூடாது.
சிவா நான் போயிட்டு வரேன்டா மானசீகமாய் சொல்லிக் கொண்டேன்.
கயல் கண்ணடித்தது நினைவிற்கு வந்தது.
‘இல்லம்மா என்னை மன்னிச்சுக்கோ. நான் ஒரு கொலைகாரன்.’
எந்திரிச்சேன்.
போலீஸ் ஸ்டேஷன் இருக்கிற திசையில நடக்க ஆரம்பிச்சேன்.
கால் மணி நேரம்.
போலீஸ் ஸ்டேஷன் வந்துடுச்சு.
உள்ளே போனேன்.
“யாருய்யா?”
“எஸ் ஐ சார் வரச் சொன்னார்.”
“ஆட்டோ டேனியலா ?”
“ஆமா சார்”
“உள்ளே போ. ஃபர்ஸ்ட் ரூம்.”
போனேன்.
பெயர்ப்பலகையில் அறிவழகன் துணை ஆய்வாளர் என்றிருந்தது.
தயங்கி தயங்கி உள்ளே போனேன்.
“சார்”
என்னை நிமிர்ந்து பார்த்த சப் இன்ஸ்பெக்டர்
“யாருய்யா?” என்று கேட்டார்.
“டேனியல் சார்.”
உடனே அவர் முகத்தில் ஒரு மாற்றம்.
“வாங்க வாங்க” சொன்னவர் எழுந்தார்.
என்னைக்கண்டு இவர் எதற்காக எழுந்திருக்க வேண்டும்? என்னை எங்காவது கொண்டு சென்று விசாரிப்பதற்கா?
மனம் கிடந்து அடித்துக்கொண்டது.
அவர் முன்னால் நடக்க நான் அவரைத் தொடர்ந்தேன்.
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே அழைத்து வந்தார்.
அருகிலிருந்த கணேச பவன் ஹோட்டலுக்குள் அவர் நுழைய எனக்கு ஒன்றும் புரியவில்லை.
“வாங்க டேனியல்.”
உள்ளே போனேன்.
“சார் என்னை எதுக்கு?”
“சொல்றேன். என்ன சாப்பிடறீங்க? டீ ஆர் காஃபி ?”
என்ன நடக்கிறது என்று எனக்கு சுத்தமாகத் தெரியவில்லை
அவரே எனக்கும் சேர்த்து இரண்டு காஃபி ஆர்டர் செய்தார்.
“டேனியல்”
“சார்”
“நீங்க இவ்வளவு சின்னப்பையனா இருப்பீங்கன்னு நினைக்கல”
“சார்”
“இப்போ உங்க ஊர்ல ஒரு கொலை நடந்துச்சே?”
எனக்கு வாய் உலர்ந்தது.
“சார்”
“அந்த ரத்தினம்?”
ஆமா சார் நான் வேணும்னே பண்ணல சார் என்று சொல்ல வாயெடுத்தேன். அவர் என்னை எதுவும் சொல்ல விடாது அவரே தொடர்ந்தார்.
“அந்த ரத்தினம் கொலை சம்பந்தமாக விசாரிக்க உங்க ஊருக்கு வந்தேன்.அப்பத்தான் உங்க சிஸ்டர் கோகிலாவப் பார்த்தேன். பிளாஸ்டிக் கம்பெனில வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு போயிட்டுருந்தாங்க.எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க வீட்டுல எனக்கு பொண்ணு பார்த்துட்டிருக்காங்க.உங்க சிஸ்டர் பத்தி வீட்ல சொல்லிட்டேன். எனக்கு அம்மா மட்டும் தான். அம்மாக்கு டபுள் ஓகே. இது விஷயமா யார்கிட்ட பேசணும்னு விசாரிச்சேன். நீங்கதான் கோகிலாவோட பிரதர்னு சொன்னாங்க. நான் அண்ணன்னு நெனச்சேன். “
அறிவழகன் சிரித்தபடி சொல்ல இதைவிட சந்தோஷமான நிமிஷம் என்னோட வாழ்க்கையில வந்ததே இல்லை.
“சார்”
“சொல்லுங்க டேனியல்.”
“நீங்க ரொம்பப் பெரியவங்க சார் வாங்க போங்க எல்லாம் கூப்பிடாதிங்க வா போன்னே கூப்பிடுங்க.”
நான் சொல்ல அவர் சிரித்தார்.
“சார்”
“ம்”
“நீங்க சொன்னது எனக்கு ஓகே சார். ஆனா உங்க ஸ்டேட்டஸ்க்குத் தகுந்தபடி இப்ப என்னால செய்ய முடியுமான்னு தெரியல சார். ஆனா என்னோட அக்காதான் எனக்கு எல்லாமே சார். என் அக்கா என்னிக்கும் எனக்கு பாரம் கிடையாது சார். நான் உயிரோடு இருக்கிற கடைசி நாள் வரைக்கும் என் அக்காக்கு என்ன வேணுமோ நான் செய்வேன் சார்.”
“டேனியல் கமான் கூல். நீ ஒண்ணுமே செய்ய வேண்டாம். நான் என்னோட டூட்டியில் கரெக்டா இருப்பேன். லஞ்சம் வாங்க மாட்டேன். வரதட்சணை வாங்கறது லஞ்சம் வாங்கறது ரெண்டும் ஒண்ணுதான்.என்கிட்ட யார் உண்மையா இருக்காங்களோ அவங்கள எனக்கு ரொம்பப் பிடிக்கும்.நீ அது பண்ணனும் இது பண்ணனும்கிறது கிடையாது. நெறஞ்ச மனசோட உன்கூடப் பொறந்தவள எங்க வீட்டுக்கு வாழ அனுப்பி வச்சாப் போதும்.”
“சார் நான் உண்மையிலேயே ஏதோ ஒரு ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கேன் சார்.”
“காஃபி ஆறுது குடி”
காஃபியை குடிக்கும் போது சொன்னார்.
“உங்கப்பா இப்ப சமீபத்தில் தவறினார் இல்லையா?”
“ஆமா சார்.”
“இப்ப நீங்க எப்படி?”
“புரியல சார்”
“ஒரு வருஷத்துக்கு நல்லது பண்ண முடியாதுன்னு இருக்கா?”
“இல்ல சார். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை அது மட்டும் இல்லாம அக்காக்கு நல்லது நடந்தால கண்டிப்பா அப்பாவோட ஆத்மா சந்தோஷப்படும்.”
“நைஸ். அப்ப நல்லகாரியம் சீக்கிரமாவே நடக்கட்டும். நாம தள்ளிப்போட வேண்டாம்.”
“சரிங்க சார். ஒரு நாள் அம்மாவக் கூப்பிட்டு நீங்க வீட்டுக்கு வாங்க சார்.”
“நிச்சயம் வர்றேன். அதுக்கு முன்னாடியும் உங்க ஊருக்கு அடிக்கடி வர வேண்டியிருக்கு”
சொன்னவரைப் புரியாமல் பார்த்தேன்.
“உங்க ஊருக்கு வந்ததுக்கு அப்புறம் நான் ஹேண்டில் பண்ற முதல் கேஸ் ரத்தினம் கொலை கேஸ்தான். கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியும் அக்யூஸ்ட்டை அரஸ்ட் பண்ணிடுவேன்.”
புன்னகைத்தபடி அவர் சொல்ல எனக்குள் திக்கென்றது.
தொடரும்.
