டேனியல் 6
கவுதம் கருணாநிதி
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பைத்தியம் பிடிப்பது போல் தோன்றியது. தோப்பில் இலக்கின்றி எங்கோ பார்த்தபடி நடந்தேன். சிவாவும் கூட வந்தான்.
சிவாவிடம் எல்லாத்தையும் சொல்லிவிட்டேன். சிவா அதிர்ந்து போவான் என்று நினைத்தேன். ஆனால் அவனுக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. யாரிடமும் நானாகப் போய் நான் தான் கொலை செய்துவிட்டேன் என்று சொல்லக் கூடாது என்று சிவா அறிவுறுத்தி இருந்தான்.
எஸ் ஐ சார் கொஞ்ச நாட்களுக்கு முன்பாக இந்த மாதிரி சொல்லி இருந்தால் கண்டிப்பாக இப்படி ஒரு கொலையை நான் செய்திருக்க மாட்டேன். இப்பொழுதும் எனக்கு ஒன்றும் இல்லை. அக்கா கல்யாணம் முடிந்து விட்டால் போலீஸில் சரணடைய நான் தயாராகத்தான் இருக்கிறேன். தூக்கில் போட்டாலும் போடட்டும். என்னை மாதிரி ஆட்கள் இங்கே இருப்பதால் யாருக்கு என்ன லாபம்? எனக்கு எப்பொழுதோ மனசு விட்டுப் போய்விட்டது.
சாரிடம் நான்தான் அவனைக் கொன்றேன் என்று சொன்னால் அடுத்த நிமிஷம் ஜெயிலில் இருப்பேன். அக்காவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறிவிடும். எப்படியாவது கல்யாணம் நடத்தி முடித்து விட்டபின் போலிசிடம் மாட்டினால் போதும். அதுவரை கண்டிப்பாக மாட்டக்கூடாது.
இதுவரை எனக்கு நல்லது என்று எதுவும் செய்யாத இறைவா. இந்த ஒரு முறை மட்டும் நான் கேட்பதை செய்து கொடு. அதன் பிறகு என்னை உன்னிடம் அழைத்துக் கொள்.
“என்னடா யோசனை?” சிவா தான்.
“ஒண்ணுமில்ல”
“மைண்ட ஃப்ரீயா வை”
“ம்”
“அவர் உன்னை அவ்வளவு ஈஸியா புடிக்க முடியாது. புரிஞ்சதா?”
“ம்”
“எப்படி சாவடிச்சே?”
“கழுத்தறுத்து”
“கத்தியாலயா?”
“ம்”
“கத்தியை என்னப்பண்ணே?”
“இதோ இங்கிருக்கு” என் மடியில் இருந்து எடுத்துக் கொடுத்தேன்.
“ஏண்டா லூஸா நீ?”
“ஏன் சிவா?”
“முதல்ல கத்தி யார்கிட்டயும் மாட்டாம டிஸ்போஸ் பண்ணனும்.”
“ம்”
“அன்னிக்கு என்ன ட்ரஸ் போட்டிருந்த?”
“காக்கி பேண்ட் காக்கி ஷர்ட்”
“ட்ரெஸ்ல எதுவும் ரத்தக்கறை பட்டுச்சா?”
சிவா கேட்க நான் யோசித்தேன்.
“இல்லை.”
“நீ யோசிக்கிறதப் பார்த்தா சந்தேகமா இருக்கு”
“இல்ல நிச்சயமாத் தெரியும்.”
“அந்த ட்ரஸ் எங்க இருக்கு?”
“வீட்ல இருக்கு.”
“அதையும் டிஸ்போஸ் பண்ணனும்”
“சிவா”
“சொல்லுடா”
“எனக்குப் பயமா இருக்குடா” சொன்ன நான் மடங்கி அமர்ந்தேன்.
சிவா என் தோளில் கை வைத்தான்.
“கல்யாணத்துக்கப்புறம் மட்டும் இல்ல எப்பவுமே நீ மாட்ட மாட்டே. நாம பார்த்துக்கலாம்.”
***
நான் தான் அறிவழகன். இந்த கேஸ் என்ன ரொம்ப குழப்பத்தில் வெக்குது. பாடியில் எந்த ரேகையும் இல்லை. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் படி மரணம் கூர்மையான ஒரு ஆயுதம் கழுத்தறுத்து அதில் ரத்தம் நிறைய வெளியேறியது தான் மரணத்துக்கு காரணம்.
அப்ப அந்த கூர்மையான ஆயுதம் எது?
ஒரு கத்தியா இருக்கலாம். அரிவாளா இருக்கலாம்.
பாடி கிடந்த ஸ்பாட்டில் நல்லாத் தேடியும் வேற எந்த எவிடென்சும் கிடைக்கல.
செத்துப்போன ரத்னத்துக்கு எதிரிகள் லிஸ்ட் கலெக்ட் பண்ணி எல்லாரையும் விசாரிக்கலாம்னு பார்த்தா அவனைத் தவிர எல்லாருமே அவனுக்கு எதிரிகளா இருக்காங்க.
எனக்கு பெருமூச்சு வந்துச்சு.
என்ன பண்ணப் போறேன்? எனக்குத் தெரியல.
என் போன் அடிச்சது.
எடுத்துப்பார்த்தேன்.
அம்மா.
“சொல்லும்மா”
“அந்தப்பொண்ணு வீட்ல பேசிட்டியா?”
அம்மா கேட்க கோகிலாவின் ஞாபகம் வந்தது. அந்த முகம். எனக்கும் காதல் வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் சீரியஸ் கேரக்டர். காதலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்று நினைத்திருந்தேன். படிக்கும்போது நிறைய பேர் பெண்கள் பின்னால் சுற்றும் போதும் எனக்கு அதில் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை.
நீ என்ன ஜடமா? என்று கூட சில நண்பர்கள் கேட்டிருக்கின்றனர்.
அப்போதும் மெலிதாய் ஒரு புன்னகை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு வந்து விடுவேன்.
ஜென்ம ஜென்மமாய் காத்திருந்தேன் உனக்காக என்று காதல் வசனங்கள் வரும் பொழுது எனக்கு சிரிப்பாக இருக்கும். சுத்த முட்டாள்தனம் என்று.
ஆனால் கோகிலாவின் முகத்தை முதன்முதலாக பார்க்கும் பொழுது எனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நான் யார் எங்கே இருக்கிறேன் எல்லாமே மறந்து விட்டது. கூட இருந்த கான்ஸ்டபிள்கள் “சார்” என்று சல்யூட் அடிக்கும் போது தான் நான் யார் என்பதை உணர்ந்தேன்.
எத்தனையோ ஜென்மங்களாய் என்னுள் தங்கிய முகம் அது. மீண்டும் கோகிலாவை பார்ப்பதற்கென்றே அந்த ஊருக்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தேன். கோகிலாவின் பார்வையும் என் மீது பட்டு விட்டது.
முதல்முறை பார்த்தவள் புரியாது பார்த்தாள். இரண்டாம் முறை வியந்து பார்த்தாள். மூன்றாம் முறை அவளுக்கு என்மனம் புரிந்துவிட்டது.
அவள் விழிகளில் பயம் மட்டுமே தென்பட்டது.
அதைப்பார்த்த என் மனம் தாங்கவில்லை. உடனடியாக ஓடிச்சென்று நான் இருக்கிறேன் எதற்கும் பயப்படாதே என்று அணைத்துக்கொள்ள வேண்டும் போல் தோன்றியது.
என் மனசாட்சி என்னைக் கேள்வி கேட்டது.
உனக்கு அவள் மேல் ஈர்ப்பு இருக்கிறது அன்பு இருக்கிறது பிடித்திருக்கிறது. அவள் மனம் என்னவென்று புரிந்து நடந்து கொள். நீயாக அவளைப் பற்றி கட்டமைத்துக் கொள்ளாதே. ஒருவேளை அவளுக்கு உன்னை ஏற்க முடியவில்லை என்றால் வாழ்த்தி விடை கொடுத்துவிட்டு வா
எந்தக் காரணம் கொண்டும் உனது பதவி அவளை பயமுறுத்தாதபடி
பார்த்துக்கொள்.
சரி.
பல நாள் முயன்ற பின் ஒரு நாள் தனியாகக் கிடைத்தாள்.
“என்னங்க” அழைத்தேன்
நின்றாள்.
“என்னோட பேர் அறிவழகன். சப்-இன்ஸ்பெக்டர் “
“தெரியும்”
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”
சொன்ன என்னைப் பார்த்தாள்.
அவள் விழிகளில் தெரிந்த அமைதி என்னுள் ஊடுருவி படபடத்த என் இதயத்தை அமைதிப்படுத்தியது.
என்ன பேச வேண்டும் என்பதை மறந்து சிலையாய் நின்ற என்னை கோகிலாவின் புன்னகை உயிர்ப்பித்தது.
நான் பேசவில்லை. அவள் பேசினாள்.
“உங்க மனசு எனக்குப் புரியுது. உங்களை வேண்டாம்னு சொல்ற அளவுக்கு நாங்க பெரியவங்க இல்ல. உங்களுக்கு ஏதாவது பேசணும்னு தோணினா என் பிரதர் டேனியல் கிட்ட பேசுங்க. என் விதி நல்லாயிருந்தா நீங்க நினைக்கிறது நிச்சயம் நடக்கும்.”
சொன்னவள் போய்விட்டாள்.
என் தலைமேல் ஐஸ்கட்டி இருந்ததைப் போல் நடுங்கியது எனக்கு.
“டேய் போனை ஆன் பண்ணிட்டு என்னடா பண்றே? எவ்வளவு நேரமா கத்திட்டிருக்கேன்? காது கேக்குதா? கேக்கலயா?”
அம்மாவின் குரல் கேட்டுப் பதறினேன்.
“ஸாரிம்மா” அசடு வழிந்தேன்.
“என்ன ட்ரீம்க்கு போயிட்டியா? பாட்டு எதுவும் பாடிடாத” அம்மா என்னை வார எனக்குப் புன்னகை.
பேசிவிட்டு வைத்தேன்.
மீண்டும் மொபைல் அடித்தது.
டி எஸ் பி.
“குட் மார்னிங் சார்”
“குட் மார்னிங் அறிவழகன்” சொன்ன டி எஸ் பி கேட்டார்
“அந்த ரத்தினம் கேஸ்ல ஏதும் டெவலப்மெண்ட் இருக்கா?”
தொடரும்.
