டேனியல் 7
கவுதம் கருணாநிதி
வாசலிலேயே காத்திருந்தேன். இன்று எஸ் ஐ சார் அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருவதாக சொல்லி இருக்கிறார்.
அக்காவிடம் அவரைப் பற்றி சொல்லும் பொழுது அக்காவின் முகத்தைப் பார்த்த எனக்கு அக்காவிற்கும் பிடித்துவிட்டது என்பது புரிந்தது.
அம்மா மட்டும்தான் தயங்கினார்.
“எதுக்குப்பா போலீஸ் கூடலாம் சம்மந்தம் வச்சுட்டு?” நான்தான் சமாதானப்படுத்தினேன்.
வருபவரை எப்படியாவது சீக்கிரமாக திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள செய்ய வேண்டும். திருமணத்தைத் தள்ளிப் போடக்கூடாது. ரத்தினம் கொலை வழக்கில் போலீஸ் மிக மும்முரமாக இருக்கிறது. நேற்று கூட இரண்டு கான்ஸ்டபிள்கள் ஊருக்கு வந்திருந்ததாக சிவா சொன்னான்.
யோசனையில் நின்று கொண்டிருந்த நான் கார் வருவதை கவனிக்கவில்லை. அருகில் வந்து கார் நின்றவுடன்தான் சட்டென்று பார்த்தேன்.
எஸ் ஐ சார் இறங்கினார். உடன் அவர் அம்மாவும்.
“வாங்க சார்” புன்னகைத்தேன்
“வாங்கம்மா”
என் தோளில் பாசமாகத் தட்டியவர் புன்னகைத்தார். அவரின் களங்கமற்ற புன்னகையை பார்க்கும் பொழுது எனக்குள் மனம் உறுத்தியது.
‘எனக்கு உண்மையா இருக்குறவங்கள ரொம்பப் பிடிக்கும்’
அவர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
அவர் விழிகளை பார்ப்பதை கஷ்டப்பட்டுத் தவிர்த்தேன். இன்னும் கொஞ்ச நேரம் பார்த்தேன் என்றால் என்னையும் அறியாமல் அவருக்கு நான் உண்மையாக இருந்து விடுவேன்.
இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றேன்.
அம்மா கும்பிட்டு வரவேற்றார்.
எஸ் ஐ சார் மட்டுமல்ல. அவரின் அம்மாவும் மிகவும் நல்ல மாதிரியாகத் தெரிந்தார்.
“என் பையன்தான் எனக்கு எல்லாம். அவன் விருப்பத்துக்கு மாறா நான் எதுவும் செஞ்சதில்லை. செய்யவும் மாட்டேன். உங்க பொண்ணு அவனுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நாங்க இப்ப வந்தது பொண்ணு பார்க்கறதுக்கு இல்ல கல்யாணம் எப்போன்னு பேசி முடிக்கிறதுக்குத் தான்.”
எஸ்ஐ சாரின் அம்மா சொல்ல அம்மாவின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
“என்னாச்சும்மா? “
“இதெல்லாம் இவங்கப்பா இருந்து பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்.”
அம்மா சொல்ல எஸ் ஐ சாரின் அம்மா அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டார்..
“கவலைப்படாதீங்க நல்ல நேரம் வர்றப்போ எல்லாமே நல்லதா நடக்கும்.”
“ம்”
நான் உள்ளே புகுந்தேன்.
“அம்மா”
அம்மா என்னைப் பார்த்தார்.
அக்காவை வரச் சொல்லுங்க சைகையில் சொன்னேன்.
புரிந்துகொண்ட அம்மா எழுந்து உள்ளே சென்றார். கொஞ்ச நேரத்தில் அக்கா காபி கொண்டுவந்து சாருக்கும் அவர் அம்மாவிற்கும் கொடுக்க சாரின் அம்மா அக்காவைப் பார்த்தார்.
“அறிவு “
“மா”
“பொண்ணு எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு “
சாரின் அம்மா சொல்ல இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு? கண்களை மூடி பழனிமலை முருகனுக்கு நன்றி சொன்னேன்.
எப்படியாவது கல்யாணத் தேதியும் சீக்கிரமா குறிச்சு கல்யாணம் முடிஞ்சுடுச்சுன்னா பெரிய டென்ஷன் இல்லாமப் போயிடும்.
முருகனை வேண்டிக் கொண்டேன்.
“அப்புறம் என்ன அறிவு கல்யாணத் தேதி குறிச்சுட வேண்டியது தானே?”
சாரின் அம்மா கேட்க அம்மா திகைத்தபடி பார்த்தார்.
“பையன்கிட்ட கலந்து பேசிட்டு சொல்லட்டுங்களா?” அம்மா கேட்க எனக்கு திடுக்கென்றது.
ஆனால் அவர்கள் இருவரும் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டனர்.
“அப்படியே பண்ணுங்க. நீங்க கலந்து பேசிட்டு சொல்லுங்க. அதுக்கப்புறம் நம்ம குடும்பத்துக்கு தெரிஞ்ச ஜோசியர் ஒருத்தர் இருக்காரு. அவர்கிட்ட பையன் ஜாதகம் பொண்ணு ஜாதகம் ரெண்டும் கொடுத்து முகூர்த்தத்தேதி குறிச்சிடலாம்.”
சாரின் அம்மா சொல்ல எங்கே அம்மா எதுவும் சொல்லிவிடுவாளோ என்று நானே முந்திக் கொண்டேன்.
“சரிங்கம்மா அப்படியே பண்ணிடலாம்”
சாரும் அவர் அம்மாவும் விடை பெற்றனர்.
அவர்கள் விடைபெற்றுப் போனபின் அம்மாவிடம் கேட்டேன்.
“என்னம்மா அவங்க எப்படி?”
“நல்லாத்தான் இருக்காங்க நல்லாப் பேசறாங்க. ஆனால் நமக்கு சக்திக்கு மீறின இடமா இருக்கு.”
“ஏம்மா அப்படி நினைக்கிற?”
“அக்காவோட வாழ்க்கை நமக்கு முக்கியம் பா. நாளப்பின்ன ஏதாவது பிரச்சினைன்னா போலீஸ்னா நாம போய் எதுவும் கேட்க முடியாது.”
“அப்படி ஏம்மா நினைக்கிற?”
“டேனியல் நீ சின்னப் பையன். வாழ்க்கையில் இவர் நல்லவர். இவர் கெட்டவர்னு சட்டுன்னு முடிவு பண்ணக் கூடாது. கெட்டவங்க நல்லவங்களானா சந்தோசம். ஆனா நம்ம நேரம் நல்லவங்க கெட்டவங்க ஆயிட்டா? என்ன பண்ண முடியும்? உதாரணமா உங்கப்பாவை எடுத்துக்கோ. உங்கப்பா ரொம்ப எமோஷனல் கேரக்டர். பணம் சம்பாதிப்பார். ஃப்ரண்ட்ஸ்க்கு ஏதாவது ஆத்திரம் அவசரம்னா உடனே உதவி பண்ணுவார். அதனால பொண்ணப் பெத்திருக்கோம். பொண்ணுக்கு தேவையானது நாம சேர்த்து வைக்கணும்னுங்கிற நினைப்பே அவருக்கில்ல. அவருக்கு ஒரு தேவைன்னு வரும்போது அவர் கிட்ட பேசக் கூட யோசிச்ச அவரோட ஃப்ரண்ட்ஸப் பார்த்து ரொம்பவே வெக்ஸ் ஆயிட்டார். ஏமாற்றம்.
குடிக்க ஆரம்பிச்சார்.குடிச்சிட்டு யாரைன்னே தெரியாம எல்லாரையும் திட்ட ஆரம்பிச்சார்.
அடிக்கிற அப்பா மட்டும் தான் உனக்குத் தெரியும். உன்னை ஆறு வயசு வரைக்கும் தோள்ல தூக்கிட்டு ரொம்ப பெருமையா ஊரைச்சுத்தி வந்த அப்பா உனக்குத் தெரியாது டேனியல். அவருக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்.
இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா சட்டுனு யாரையும் நல்லவங்கன்னு முடிவெடுக்க முடியாது. ஏன்னா வாழப்போறது நம்மப் பொண்ணு..”
அம்மா சொல்ல எனக்குள் நெகிழ்ந்தேன்.
“சரிம்மா”
“அது மட்டும் இல்ல உடனே கல்யாணம்னா நம்ம கையில் கொஞ்சம் பணம் வேணும்.”
“இருக்கும்மா” என்ற என்னை அம்மா கூர்மையாகப் பார்க்க சுதாரித்தேன்.
“நான் கவுண்டர் கிட்ட பேசி வச்சிருக்கேன்மா. பணம் கிடைக்கும்”.
“எதுக்கும் நல்லா யோசிச்சு?”
“அம்மா சாரைப் பத்தி நான் விசாரிச்சுட்டேன். ரொம்ப நல்ல மாதிரின்னு தான் சொல்றாங்க.”
“என்னமோப்பா அந்த முருகன் தான் நம்ம கூட இருக்கணும்.”
அம்மாவிடம் பேசி சம்மதிக்க வைத்தேன்.
“கம்பெனில சீட்டு போட்டிருக்கேன் டேனியல். கவுண்டர் கிட்ட கடன் வாங்காத ” அக்கா என்னைப் பார்த்து சொன்னாள்.
அக்காவுக்கு எப்போதும் என் மீது அக்கறை தான். அக்காவையே பார்த்தேன்.
என்னைவிட ஆறு வயது தான் பெரியவள். ஆனால் அவளுக்கு எப்போதும் நான் குழந்தைதான். என்னை விட்டுவிட்டு சாப்பிட மாட்டாள். யாராவது விளையாட்டில் என்னை அடித்தாலும் அவள் அழுவாள். அப்பா என்னை அடித்துத் துவைக்கும் போதெல்லாம் ரத்தக் கண்ணீர் வடித்தவள். இதோ இப்போதும் கவுண்டரிடம் நான் கடன் வாங்கி கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சீட்டு போட்டு வைத்திருக்கிறாள். எனக்கு பெருமையாகவும் இருந்தது அதே நேரத்தில் வருத்தமாகவும் இருந்தது
நாளை என்னைத் தூக்கில் போடும்போது நிச்சயம் துடித்துவிடுவாள். முருகா அக்காவைப் பார்த்துக்கோ. என்னால் அவ்வளவு தான் சொல்ல முடியும்.
“என்னடா? அப்படியே நின்னுட்டே?” அக்கா கேட்க “ஒன்றுமில்லை” என்று புன்னகைத்தேன்.
என் அலைபேசி அடித்தது.
யார் என்று பார்த்தேன்.
எஸ் ஐ சார் தான்.
“சார்”
“டேனியல்”
“சார்”
“கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வர்றியா?”
தொடரும்.
