டேனியல் 8
கவுதம் கருணாநிதி
டேனியல் :
“கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வர முடியுமா?”
எஸ் ஐ சார் கூப்பிட
என்னுள் தவிப்பு. கண்டுபிடித்து விட்டாரா?
“வர்றேன் சார்”
வீட்டிலிருந்து வெளியே கிளம்பினேன். இப்படி டென்ஷனுடன் அவரை பார்த்தேன் என்றால் நிச்சயம் மாட்டிக் கொள்வேன். என்ன செய்யலாம்?
சிவாவை அழைத்தேன்.
“சிவா எங்க இருக்கே?”
“முக்குக் கடையில்”
“அங்கயே இரு வர்றேன்”
“என்னடா பிரச்னை ஆயிடுச்சா?”
“இரு வர்றேன்.”
பத்து நிமிட நடையில் முக்குக் கடை வந்தது.
சிவா எதிரில் வந்தான்.
“என்னாச்சு டேனியல்?”
சொன்னேன்.
சுற்றுமுற்றும் பார்த்தான்.
அடிக்குரலில் சொன்னான்.
“மொதல்ல டென்ஷனைக் குறைடா. அவர் எதுக்கு வேணாலும் கூப்பிட்டிருக்கலாம். நீயா அதையும் இதையும் ஏண்டா நினைச்சுக்கறே?”
“அதில்ல சிவா”
வாயை மூடு தனியாக அழைத்துச் சென்றான்.
“உன் நிலைமையில் நான் இருந்திருந்தாலும் அந்த *** மவனை கொன்னுத்தானிருப்பேன். அதுக்காகலாம் கவலப்படாத. சொல்லப்போனா நீ பெருமைப்படணும்.”
“நான் அதுக்கு கவலப்படல சிவா. அக்கா கல்யாணம்.”
“என்னடா சும்மா அக்கா அக்காங்கிற? கோகிலாக்கா உனக்கு மட்டுமில்ல எனக்கும் அக்காத்தான். எத்தனையோ நாள் அக்கா கையால சாப்பிட்டிருக்கேன். அக்கா கல்யாணம் எந்தப் பிரச்னையுமில்லாம நடக்கும். அதுக்கு முன்ன நீ மாட்டிட்டா நான் இருக்கேன். அந்த **** மவனைக் கொன்னது நான்னு சொல்லிப் பழி ஏத்துக்கறேன்.”
சிவா சொல்ல நான் உருகிப்போனேன்.
“சிவா” எனக்கு பேச்சு வரவில்லை.
“நாம என்ன பார்த்தா மட்டும் ஹாய் மச்சின்னு பேசிட்டுப் போற ஹை கிளாஸ்னு நினைக்கிறியா? பக்கா லோக்கல். உனக்கு ஒண்ணுன்னா என் உயிர் நான் தரமாட்டேன். நீயா எப்ப வேணாலும் எடுத்துக்கடா. சும்மா எதுக்கெடுத்தாலும் ஃபீல் பண்ணிட்டிருக்கான் மயிரு மாதிரி.”
சிவா சொல்ல நான் அவனை அணைத்துக்கொண்டேன்.
ரொம்ப நாளைக்கப்புறம் என் கண்ணுல கண்ணீர்.
முருகா இவன் எப்பவும் நல்லாயிருக்கணும். நான் இவன் கூட இருக்க முடியலன்னாலும் இவன நீ பார்த்துக்கப்பா
எனக்கு தைரியமாக இருந்தது.
“சிவா”
“சொல்லுடா”
“நான் ஸ்டேஷன்க்குப் போறேன்”
“தைரியமா இரு. பயம் இருந்தாலும் காட்டிக்காத. “
“ம்”
“போயிட்டு வா.”
நான் ஸ்டேஷனுக்குள் நுழைந்தேன்.
வாசலில் நின்றிருந்த கான்ஸ்டபிள் புன்னகைத்தார்.
வணக்கம் வைத்து நுழைந்தேன்.
எஸ் ஐ சாரின் அறைக்கு வெளியில் நின்றேன்.
“சார்” அழைத்தேன்.
நிமிர்ந்து பார்த்தவர் எழுந்தார்.
***
அறிவழகன்:
கலந்து பேசி சொல்கிறோம் என்று கோகிலாவின் அம்மா சொன்னதும் எனக்குள் பதட்டம்.
அந்தம்மாவிற்கு ஏதோ ஒரு தயக்கம். எதுவும் சிக்கல் வராது என்று நினைத்திருந்த எனக்கு அது அதிர்ச்சியைக் கொடுத்தது.
அம்மாவிடம் கேட்டேன்.
“என்னம்மா இனியும் கலந்து பேச என்னம்மா இருக்கு?”
அம்மா ஒன்றும் சொல்லாமல் என்னைப் பார்த்தார். புன்னகைத்தார்.
“அறிவு உனக்குள்ள உன்னையும் மீறி ஒரு சுப்பிரியாரிட்டி காம்ப்ளக்ஸ் இருக்கு. அது சரியில்லப்பா. கரெக்ட் பண்ணிக்க”
அம்மா சொல்ல நான் அதிர்ந்தேன்.
“என்னம்மா சொல்ற?”
“உண்மையத்தான் சொல்றேன்.
பதவியில பொருளாதாரத்தில நீ அவங்கள விட மேல்னு நீ நினைக்கிறதால தான் ஏன் இன்னும் சம்மதிக்காம கலந்து பேசறேன்னு சொல்றாங்கன்னு உனக்குத் தோணுது..”
“அய்யோ அம்மா அப்படியில்லம்மா”
“அப்படியில்லாம இருந்தா சந்தோஷம் பா. அவங்க பொண்ணப் பெத்தவங்க. நாலும் யோசிப்பாங்க. யோசிக்கணும். அதுதான் நடைமுறை. அவங்கள எனக்குப் பிடிச்சிருக்குப்பா. நீயே போனாலும் உடனே விழுந்தடிச்சு ஓகே சொல்லாம நிதானமா இருக்காங்க. அந்தப் பொண்ணும் நிதானமா இருக்கு. உனக்கேத்த பொண்ணு. உன் வேலையில் உனக்கு வர்ற டென்ஷனெல்லாம் நீ வீட்டுக்கு வர்றப்ப அந்த நிதானம் உன்ன அமைதிப்படுத்தும். ஒரு மனுஷனுக்கு வீடு அமைதியும் நிம்மதியும் கொடுத்தா அவன விடக் கொடுத்து வச்சவன் யாருமில்லப்பா.”
அம்மா சொல்ல எனக்குப் புரிந்தது
என் புன்னகை முகத்தை பார்த்து அம்மா மலர்ந்தார்.
“தெளிவாயிட்டியா?”
“ம்”
“கவலப்படாத. அந்தப் பொண்ணுக்கு உன்னப் பிடிச்சிருக்கு.”
அம்மா சொல்ல எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மகிழ்ந்தேன். கேட்டேன்.
“நிஜமாவாம்மா?”
“ம். காஃபி கொடுத்த ஒரு நிமிஷம் அவ முகத்தில சந்தோஷம். எங்க அவளோட சந்தோஷத்தை யாரும் கவனிச்சிடுவாங்களோன்னு ஒரு பதட்டம். கடைசியா அவ அம்மா கலந்து பேசி சொல்றோம்னு சொல்றப்ப சட்டுன்னு முகம் வாடி உடனே வெளியே காட்டிக்கக்கூடாதுன்னு இயல்பா இருந்தது இதெல்லாம் என்ன?”
என்னால் தாங்க முடியவில்லை. ஆச்சரியத்தின் விளிம்பிற்கே போனேன்.
“எப்படிம்மா இத்தனை விஷயத்தை கவனிச்சிருக்க?”
“நான் போலீஸ்காரன் அம்மா டா”
அம்மா சொல்ல எனக்கு சிரிப்பு வந்தது.
“ஸ்டேஷனுக்கு போ டூட்டி பாரு. நல்லது கண்டிப்பா நடக்கும்.”
“சரிம்மா.”
ஸ்டேஷனுக்கு வந்து விட்டேன். அம்மாவிடம் இருக்கும்பொழுது அம்மா கொடுத்த நம்பிக்கையால் மனம் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
ஸ்டேஷனுக்கு வந்தவுடன் மனதில் அமைதி போய்விட்டது.
ஒருவேளை பொருளாதார சிக்கல்கள் எதுவும் இருந்தால்..
நாம்தான் எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டோமே.
சொன்னாலும் அவர்கள் பொண்ணுக்கு என்று அவர்கள் எதையாவது செய்யத்தான் செய்வார்கள். அதுவும் சப்-இன்ஸ்பெக்டர் என்னும் பொழுது கண்டிப்பாக கூடுதலாக செய்ய ஆசைப்படுவார்கள். அதை எண்ணி எதுவும் வில்லங்கம் வந்து விடப்போகிறது.
எதற்கும் டேனியலை அழைத்துப் பேசினால் என்ன?
பாவம். அவன் ஒரு அப்பாவி. ரொம்ப நல்லவன். அக்கா மேல் உயிராக இருக்கிறான். என் மேலும் பாசமாகவும் மரியாதையாகவும் இருக்கிறான். உடன்பிறந்தவர்கள் எவரும் இல்லாமல் தனியாக இருக்கும் எனக்கு டேனியல் மீது ஒரு தனிப் பாசம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எப்பொழுது பேசினாலும் அவனுள் ஏதோ ஒரு பதட்டம். ஏதோ ஒரு தப்பு செய்துவிட்டது போல் பார்க்கிறான். சப்-இன்ஸ்பெக்டர் என்னும் பதவி அவனை பயமுறுத்தியிருக்கிறது போல்.
நான் ஒன்றும் பூதமல்ல. இயல்பாக இரு டேனியல் என்று சொல்லத் தோன்றும். அவன் அக்காவுடன் எனக்கு கல்யாணம் ஆகட்டும். வீட்டிற்கு வரப்போக இருந்தால் இயல்பாக மாறிவிடுவான்.
அலைபேசி எடுத்தேன். டேனியலுக்கு அழைத்தேன்.
“டேனியல்”
“சார்”
“கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வர்றியா?”
வருவதாகச் சொல்லியிருக்கிறான்.
“சார்”
நிமிர்ந்து பார்த்தேன்.
கான்ஸ்டபிள் கந்தசாமி நின்று கொண்டிருந்தார்.
“வாங்க கந்தசாமி உட்காருங்க”
அமர்ந்தவர் சொன்னார்.
“சார் அந்த ரத்தினம் கொலை வழக்கு விஷயமாக ஒரு தகவல் உங்ககிட்ட சொல்லணும்.”
“சொல்லுங்க.”
“ரத்தினம் கொலையாகறதுக்குக் கொஞ்ச நாளுக்கு முன்னாடி டேனியல் வீட்ல பிரச்னை பண்ணிருக்கான் சார்.”
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது என்ன புது தகவல்?
“எதுக்காக?”
“பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில டேனியலுக்கும் ரத்தினத்துக்கும் தகராறு இருந்திருக்கு.”
சொன்ன கந்தசாமி போய்விட்டார்.
விசாரிக்க வேண்டும் டேனியலை. என் மனம் முடிவு செய்தது.
அவன் நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறவளின் தம்பி. பார்த்து நடந்து கொள் .சொன்ன மனசாட்சியைப் புறக்கணித்தேன்.
எனக்கு கடமைதான் முக்கியம். எனக்கு கிடைக்கப்போகும் தனிப்பட்ட பலன்கள் என் கடமையை ஒப்பிடும் பொழுது எனக்கு பெரிதல்ல.
முடிவெடுத்து அமர்ந்திருந்தேன்.
“சார்”
நிமிர்ந்து பார்த்தேன்
டேனியல் நின்றிருந்தான்.
எழுந்தேன்.
தொடரும்..
