Home Featuredடேனியல் 9

டேனியல் 9

by GK Tamil Novels
22 views

டேனியல் 9
கவுதம் கருணாநிதி

டேனியல்;

எஸ் ஐ சார் எழுந்து வந்தார்.
எனக்கு உதறல் எடுத்தது.
மனதிற்குள் சிவா வந்து திட்டினான்.

‘என்ன நடந்தாலும் டென்ஷனாகாத’

“வா வெளிய போய் பேசுவோம்” சொன்ன எஸ் ஐ சாரின் முகத்தில் புன்னகை இல்லை.

வெளியே வந்தோம். மொபைல் கேண்டீன் முன் நின்றவர்

“என்ன சாப்பிடற?” கேட்டார்.

“எதுவும் வேணாம் சார்.”

“ஓகே டேனியல்”

“சார்”

“உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்”

நான் தளர்ந்தேன்.

“கேளுங்க சார்”. நான் சொன்னது எனக்கே கேட்கவில்லை.

“ரத்தினத்துக்கும் உனக்கும் என்ன பிரச்னை?”

எஸ் ஐ சார் என் முகத்தையே பார்த்தார்.

“அப்பா கொஞ்சம் கடன் வாங்கி இருந்தார்.”

“ம்”

“அப்பா சாவுல வந்து ரத்தினம் கடனைத் திருப்பிக் கேட்டு பிரச்சனை பண்ணாரு. “

“ம்”

“அவ்ளோ தான் சார்”

“நீ அவரத் திட்டினதா கேள்விப்பட்டேனே?”

“சார்”

“சொல்லு டேனியல்”

“ஆமா சார் நானும் கொஞ்சம் அன்னிக்கு உணர்ச்சி வசப்பட்டுப் பேசிட்டேன்.”

“என்ன பேசினே?”

“உன்னப் பொணமாக்கிட்டு எங்கப்பாவத் தூக்கிக்கிட்டு சுடுகாட்டுக்கு நான் போவேன்னு”

“ம்”

கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் இருந்த எஸ் ஐ சார் மெலிதாய் புன்னகைத்தார். கேட்டார்.

“சொன்னபடியே செஞ்சுட்டியா?”

நான் திக்கென அதிர்ந்தேன்.

“சார்”

“பதில் சொல்லு டேனியல்.”

நான் மௌனமாய் அவரையே பார்க்க அவர் தொடர்ந்தார்.

“ரத்தினம் கொலையான அன்னிக்கு நீ எங்க இருந்த?”

“ஆட்டோ ஸ்டேன்ட்ல் தான் சார்.”

“நிச்சயமா?”

“நிச்சயமா சார்.”

“ம்”

“ரத்தினத்துக்கு நீ எவ்வளவு கொடுக்க வேண்டி இருக்கு?”

“ரெண்டு லட்சம் சார். அதுல ஒன்றரை லட்சம் கொடுத்துட்டேன். இன்னும் அம்பதாயிரம் கொடுக்கணும்.”

“ம். இட்ஸ் ஓகே. என் கடமை நான் சந்தேகப்படற எல்லோரையும் விசாரிச்சுத்தான் ஆகணும்.”

“பரவாயில்ல சார்.”

“அப்புறம்?”

“சொல்லுங்க சார்”

“வீட்ல என்ன சொல்றாங்க? “

கேட்டவரின் விழிகளைப் பார்த்தேன். சற்றுமுன் கேட்டவரின் விழிகளா இவை? நிச்சயமாக இல்லை. அன்பு வழியும் விழிகள். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் ரத்தினத்தைக் கொலை செய்ததை நானே ஒப்புக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

“வீட்ல சம்மதிச்சுட்டாங்க சார்”

“ஓ” அவர் முகத்தில் பரவசம் தெரிந்தது.

“அப்புறம் என்ன இன்னும் சார் ன்னு சொல்லிட்டு இருக்கே மாமான்னு கூப்பிடு.”

அவர் சந்தோஷமாக சொல்ல எனக்கும் கூப்பிட ஆசைதான். நான் ஏன் ரத்தினத்தை கொன்றேன்? அந்த நாள் எதற்காக என் வாழ்க்கையில் வந்தது?

ஒரு நல்ல சொந்தம் கிடைத்தும் என்னால் மகிழ முடியவில்லை. என்னை வேறு யாரும் குற்றப்படுத்த வேண்டாம். என் மனசாட்சி ஒன்று மட்டும் போதும். இப்பொழுதெல்லாம் தூங்கினால் ரத்தினம் தான் கனவில் வருகிறான்.

ஏண்டா என் கழுத்தை அறுத்த? எனக்கு வலிக்குதுடா என்று ரத்தம் வழியும் தன் கழுத்தை பிடித்துக் கொண்டு ரத்தினம் கேட்பதுபோல் கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த என் நெற்றியில் அம்மா பழனி மலை முருகனின் விபூதியை வைத்துவிட்டார்.

“என்ன நீ அடிக்கடி ஏதோ யோசனைக்கு போயிடறே? அப்படியென்ன யோசிப்பே?” சார் கேட்க சுதாரித்தேன்.

“இல்ல சார் சும்மா”

“ம்”

“சார் அக்காவோட ஜாதகம் இது.”

“டேனியல் எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. நம்ம நாட்டில பெரும்பாலானவங்களுக்கு கல்யாணம் ஆகாம இருப்பதற்கு முக்கிய காரணமே ஜாதகம் பார்க்கறது தான்.”

அவர் சிரித்தபடி சொல்ல தலையசைத்து ஆமோதித்தேன்.

ஜாதகத்தை வாங்கிக் கொண்டார்.

***

அறிவழகன்:

டேனியல் வந்து ஜாதகத்தை கொடுத்துப் போனபின் கோகிலாவின் ஜாதகத்தைப் பார்த்து கொண்டிருந்தேன்.

மறுநாள்

நானும் அம்மாவும் கலைமகள் ஜோதிட நிலையத்தை அணுகினோம்.

எத்தனையோ ஜோதிடர்கள் இருந்தாலும் அம்மாவுக்கு இவர் சொல்வதில் தான் நம்பிக்கை. இவர் ஓரளவிற்கு சரியாகவே கணித்து சொல்வார்.

என் நண்பர்கள் சிலருக்கு இவர் சொன்னது அப்படியே நடந்திருக்கிறது. இவர் சொன்னதால்தான் அவை நடந்தது என்று அல்ல. நடக்கப்போவதை முன்கூட்டியே கணித்து சொல்லும் வல்லமை இவருக்கு இருப்பதாக சிலர் சொல்லும்பொழுது அதை ஒப்புக் கொள்ளக்கூடிய சில சம்பவங்கள் உண்டு என்பதே புரிந்துகொள்ள வேண்டியது.

அம்மா அவரிடம் என் ஜாதகத்தையும் கோகிலாவின் ஜாதகத்தையும் கொடுத்துவிட்டு பவ்யமாக அவரையே பார்த்தார்.

அவர் எங்கள் இருவரின் ஜாதகங்களையும் பார்த்து ஒரு வெள்ளைத் தாளில் எழுத்து கணக்குப் போட ஆரம்பித்தார்.

கணக்கு போடும் போது என் முகத்தை அடிக்கடி பார்த்தார். தலையை மறுப்பாய் இடதும் வலதும் ஆட்டிக்கொண்டார்.

சோழிகளை உருட்டிப் போட்டார். அவர் முகத்தில் திருப்தியின்மை தெரிந்தது. மீண்டும் உருட்டிப் போட்டார். அவர் முகத்தில் ஒரு கலவரம் தெரிந்தது.

இருவரின் ஜாதகங்களையும் அம்மாவிடம் திருப்பிக் கொடுத்தார்.

“சாமி ஒண்ணும் சொல்லலைங்களே?”

அம்மா கேட்க

“சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல” அவர் சொன்னார்.

எனக்கு உள்ளுக்குள் அதிர்ந்தது.

“என்ன சாமி சொல்றீங்க?” அம்மா பயத்துடன் கேட்க

“இந்த ரெண்டு ஜாதகங்களுக்குப் பொருத்தம் கிடையாது. இவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க முடியாது. மீறிப் பண்ணி வைக்க முயற்சி பண்ணினா ஒரு கெட்டது குறுக்க வருது. அது தானா விலகுமா இல்ல யாரையாவது காவு வாங்கிட்டு விலகுமான்னு இப்ப சொல்ல முடியாது.”

அவர் சொல்ல அம்மா அதிர்ந்து போய் பார்த்தார்.

“என்ன சாமி சொல்றீங்க?”

“இந்த இரண்டு ஜாதகங்களுக்கும் மணவாழ்க்கை ஒரு கெட்டதுலதான் ஆரம்பிக்கும். “

“கெட்டதுன்னா?”

அம்மா கேட்க அவர் ஒரு நிமிடம் கண்களை மூடி பிரார்த்தனை செய்தார்.

“உங்க தரப்புல இல்ல அவங்க தரப்புல ஒரு உயிர் போறதுக்கான வேளை ரொம்பக் கிட்ட இருக்கு.”

அவர் சொல்ல சொல்லவே அம்மா அழுது விட்டார்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்னதான் எனக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றாலும் அவர் சொல்வதை மறுத்துப் பேச என்னால் முடியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“சாமி இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா?”

அவர் எங்கள் இருவரையும் பார்த்தார். சோழிகளை உருட்டினார்.

ஏமாற்றமானார்.

“மன்னிச்சிடுங்கம்மா பரிகாரம் ஒண்ணும் இல்ல.”

அவரிடம் விடைபெற்று வீட்டிற்கு செல்லும் வரை நானும் அம்மாவும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை மௌனமாக இருந்தோம்.

அம்மா எதுவும் தடை சொல்லி விடுவாரோ என்று பயந்தேன்.

“அறிவு”

“அம்மா”

“ஒரு பொண்ணு வீட்ல போயிட்டு பேசிட்டு வந்திருக்கோம். இப்ப மாத்திப் பேசினா நல்லா இருக்காது:ஒரு பொண்ணோட பாவம் நமக்கு வேண்டாம்”

“சரிம்மா”

“அதுமட்டுமில்லாம உனக்கு அவள புடிச்சிருக்கு. அதனால இப்ப நாம போய் ஜாதகம் பார்த்ததப் பெரிசா எடுத்துக்க வேண்டாம்.”

அம்மா சொல்ல எனக்கு ஆச்சரியம்.

“ரொம்பத் தேங்க்ஸ்மா” நான் சொல்ல அம்மா புன்னகைத்தார்.

அடுத்து வந்த நாட்களில் ரத்தினம் கொலை வழக்கு சீரியஸாக விசாரிக்க ஆரம்பித்திருந்தேன்.

கவுண்டர் ஊரின் பெரிய மனிதர்களில் ஒருவர் என்பதால் அவரிடம் விசாரணை செய்யும் போது கிடைத்த தகவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ரத்தினம் கொலையான அன்று கவுண்டர் தன் ஆட்டோக்களை எஃப் சி க்கு அனுப்பியிருந்தார். அப்படி என்றால் அன்று டிரைவர்கள் வரத் தேவையில்லை. அதாவது டேனியல் அன்று வரவில்லை.

நான் விசாரிக்கும் பொழுது ஆட்டோ ஸ்டாண்டில் இருந்தேன் என்று டேனியல் என்னிடம் சொன்னது பொய்.

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

You may also like

Leave a Comment

error: Content is protected !!