Home Featuredடேனியல் 10

டேனியல் 10

by GK Tamil Novels
26 views

அக்காவிற்கு கல்யாணத் தேதி குறிக்கப்பட்டிருக்க நான் அந்த வேலைகளில் மும்முரமாக இருந்தேன்.

ஒருநாள் சிவா ஓடிவந்தான்.

“டேனியல் உனக்கு விஷயம் தெரியுமா?”

“என்ன சிவா?”

“செங்கோடனை அரஸ்ட் பண்ணிட்டாங்க.”

“எதுக்கு?” நான் கேட்க சிவா காதருகில் வந்து மெதுவாகச் சொன்னான்.

“ரத்தினத்தைக் கொலை செஞ்சது அவன்தான்னு.”

நான் அதிர்ந்தேன்.

“என்ன சிவா இது? எப்படி?”

“கண்டுக்காத செங்கோடனும் வட்டிக்கு விட்டு நிறைய கொடுமை பண்ணிருக்கான். அதனால் எல்லாமே கடவுள் விருப்பப்படிதான் நடந்திருக்கு.”

“அதுக்கில்ல”

“இனிமே ரத்தினத்தைப் பத்தி பேசாத அது முடிஞ்சு போன கேஸ்.”

சிவா சொல்ல என் மனசாட்சி என்னைக் குற்றப் படுத்தியது.

நான் செய்த கொலைக்கு இன்னொருவன் தண்டனை அனுபவிப்பது எனக்கு மன பாரத்தை அதிகப்படுத்தியது.

அக்கா கல்யாணம் முடிந்த பின் போலீசில் சரண் அடைய முடிவு செய்தேன்.

திருமணத் தேதியும் நெருங்கியது.

எஸ் ஐ சார் இப்போதெல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார். அதற்கு காரணம் ரத்தினம் கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்து விட்ட மகிழ்ச்சி. நாளை உண்மை தெரிந்தால் வருத்தப்படுவார் என்று தோன்றியது. நல்ல மனிதன். அவரை வருத்தப்பட வைப்பது எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. அக்கா அக்கா என்று யோசித்து நான் சுயநலமாக நடந்து கொள்கிறேனோ என்று எனக்கு என் மீது வெறுப்பாக வந்தது.

எஸ் ஐ சாரைப் பார்த்து உண்மையை சொல்லி விடுவோம். அதுவும் கல்யாணம் நடைபெறுவதற்கு முன் அவரிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். அவர் என்ன முடிவு எடுத்தாலும் சரி. கல்யாணம் நடைபெற்ற பிறகு சொன்னால் அவரை ஏமாற்றியது போல் ஆகும்.

என் மனசாட்சி பலவித கணக்குகளைப் போட்டு துன்புறுத்தியது. இறுதியில் அவரிடம் உண்மையைச் சொல்ல முடிவு செய்துவிட்டேன்.

ஒவ்வொருமுறையும் அவரை நெருங்கும் போதெல்லாம் சொல்லிவிட வேண்டும் என்று தீர்மானிப்பேன். ஆனால் சொல்ல முடியாதபடி ஏதாவது ஒரு காரணம் வந்துவிடும்.

விடிந்தால் கல்யாணம். எனக்கு அவரை ஏமாற்றப் பிடிக்கவில்லை.

சிவாவிடம் சொன்னேன் அவரிடம் உண்மையை சொல்லப் போவதாக.

“என்னடா பைத்தியம் புடிச்சிருக்கா உனக்கு? இவ்வளவு நாள் நீ உண்மையை மறைச்சது உன்னோட அக்காவுக்கு கல்யாணம் ஆகறதுக்குத் தானே?”

“ஆமா சிவா. ஆனா நான் சாருக்கு உண்மையா இருக்க ஆசைப்படுறேன். நான் உண்மையை சொன்னாலும் அவர் அக்காவைக் கைவிடமாட்டார். எனக்கு நம்பிக்கை இருக்கு.”

“டேனியல்”

“ப்ளீஸ் சிவா புரிஞ்சுக்கோ”

சிவா ஒன்றும் சொல்லவில்லை.

கண்கள் கலங்க என்னைப் பார்த்தான்.

எஸ் ஐ சார் எங்கே இருக்கிறார்? தேடினேன். அறையில் தனியாக இருக்கிறார் என்று தெரிந்து அவரிடம் சென்றேன். சிவாவும் என் பின்னால் வந்தான்.

“என்ன டேனியல்?”

“சார்”

“சொல்லு என்ன விஷயம்?”

“உங்ககிட்ட ஒரு உண்மைய சொல்லணும்”.

“உண்மையா? என்ன உண்மை?”

கொஞ்சம் தயங்கினேன்.

“பரவால்ல சொல்லு டேனியல்”.

“ரத்தினத்தை”

“ரத்தினத்தை?”

“கொன்னது நான்தான் சார்”

சொல்லிவிட்டேன்.

அவர் முகம் மாறியது. என் அருகில் வந்தார். ஒன்றும் சொல்லாமல் என் முகத்தைக் கொஞ்சநேரம் பார்த்தார்.

“எனக்குத் தெரியும் டேனியல்”.

அவர் சொல்ல நானும் சிவாவும் அதிர்ந்தோம்.

“ரத்தினத்தை நீ தான் கொன்னேன்னு எனக்கு ரொம்ப நாள் முன்னாடியே தெரியும். அப்புறம் ஏன் நான் உன் மேல நடவடிக்கை எடுக்கலைன்னு பார்க்கிறயா?

நான் இந்த ஊருக்கு வந்த புதுசுல என் கிட்ட வந்த முதல் கேஸ் ராசம்மா தற்கொல கேஸ். ரெண்டு குழந்தைகளை விட்டுட்டு அந்தப் பொண்ணு தூக்கு மாட்டி செத்துப் போயிடுச்சு. அதுக்கு காரணம் ரத்தினம். வட்டி கொடுக்க முடியலன்னு அந்தப் பொண்ண தராதரம் இல்லாமப் பேசி தற்கொலைக்கு தூண்டியிருக்கான். அள்ளிட்டு வந்து லாக்கப்பில் போட்டு மிதிக்கணும்னு நெனச்சேன். ஆனா அடுத்த நாளே நியூஸ் வருது அவன் செத்துப் போய்ட்டான்னு.

உன் வீட்டில் ரத்தினம் வந்து பிரச்சனை பண்ணது ரத்தினத்தைப் பார்க்க நீ போனது அவன் செத்த அன்னிக்கு ஆட்டோ ஸ்டாண்ட்ல தான் இருந்தேன்னு என்கிட்ட நீ பொய் சொன்னது எல்லாமே எனக்குத் தெரியும்.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல ரத்தினத்தோட உடம்புல விஷம் இருக்குங்கிறது தெரிஞ்சது. அவனைக் கொல்றதுக்காக பைனான்ஸ் பண்ற செங்கோடன் பிராந்தில விஷம் கலக்கி இருக்கறது தெரிஞ்சது. அவன் கழுத்தறுபட்டு செத்தத ரிப்போர்ட்ல இருந்து மாத்தி விஷத்தால் தான் செத்தான்னு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை மாத்தி எழுதினோம்.
செங்கோடனும் தண்டிக்கப்பட வேண்டியவன் தான்.

எனக்கு எப்பவுமே கடமை முக்கியம். என்னோட பார்வையில கடமைங்கிறது சட்டத்தை குருட்டுத்தனமா ஃபாலோ பண்றது இல்ல. மக்களப் பாதிக்கிறவன் எவனோ அவன் தான் தண்டிக்கப்படணும். நீ ஒரு அப்பாவி டேனியல். உன்னைத் தண்டிக்கிறது எனக்குப் பிடிக்கல. இதுக்கும் உன்னோட அக்காவை நான் கல்யாணம் பண்றதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இனிமேலாவது நடந்ததை மறந்திட்டு சந்தோசமா இரு”

எஸ் ஐ சார் சொல்ல நான் நெகிழ்ந்திருந்தேன்.

“சார்”

“இன்னும் என்ன சார்? மாமா நான் உனக்கு” அவர் சிரிக்க அவரை முதல்முறையாக மனம் நிறைந்து கூப்பிட்டேன்

“மாமா”

“இது எவ்வளவு சூப்பரா இருக்கு? “

சொன்னவரை சிவா நெருங்கினான்.

“சார் உங்கள ஒண்ணு பண்ணலாமா?” சிவா கேட்க அவர் ஒன்றும் புரியாமல் தலையசைத்தார்.

அவரைக் கட்டியணைத்த சிவா கன்னத்தில் முத்தமிட்டான்.

“ரொம்பத் தேங்க்ஸ் சார் “ சிவா சொல்ல சிரித்தார்.

“டேனியல்”

“மாமா”

“ஹேமா மேடம் உன்னை ஈவினிங் காலேஜ்க்கு சேர சொல்லியிருக்காங்க. படி திரும்பவும்.”

“மாமா அவங்க?”

“என் ஃப்ரண்ட் தான் மச்சான். காலையில கல்யாணத்துக்கு வருவாங்க.”

நான் மலர்ந்தேன்.

“மச்சான் இன்னொரு கெஸ்ட் உண்டு”

“யார் மாமா?”

“உன்னோட கயல்”

மாமா சொல்ல நான் வெட்கப்பட்டேன்.

“போங்க மாமா”

“வெட்கம் கூட படுவியா நீ?” அவர் சிரிக்க சிவாவும் அவருடன் இணைந்து கொண்டான்.

காலையில்

நிறைந்த மனதுடன் நான் நின்றிருந்தேன்.

அக்காவின் கழுத்தில் மாமா தாலி கட்டினார்.

‘முருகா ரொம்ப நன்றி. என் கண்களில் நீர். என் மாமா எங்களுக்குக் கிடைத்த வரம்.’

கயல் என்னருகில் நின்றபடி ரகசியமாய் புன்னகைத்தாள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹேமா மேடத்தைப் பார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

“ஆட்டோ ஓட்டறது உன் முடிவு. ஆனா கண்டிப்பா ஈவினிங் காலேஜ் ஜாயின் பண்றே “

ஹேமா மேடம் சொல்ல புன்னகையுடன் தலையசைத்தேன்.

வாசலையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“யாரையோ முக்கியமா எதிர்பார்க்கறியா?”

மாமா கேட்க தலையசைத்தேன்.

“தோ வந்துட்டாரே”

போய் வரவேற்றேன்.

“ரைட்டர் சார் வாங்க சார் எங்க வர மாட்டீங்களோன்னு பயந்திட்டுருந்தேன்”.

“உன்னை மறக்க முடியுமா டேனியல்?”

ரைட்டர் சார் சொல்ல மலர்ந்தேன்.

அக்காவையும் மாமாவையும் அட்சதை போட்டு வாழ்த்தினார்.

***

தோப்பில் ரொம்ப நாளைக்கப்புறம் நிம்மதியா இருக்கேன்.

குயில் கூவறது காதில் கேட்டுச்சு.

என் மடியில் கயல் இருக்கா.

ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்.

அவளத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.

நிறைந்தது.

வாசித்தோருக்கும் நேசித்தோருக்கும் நன்றிகள்

கவுதம் கருணாநிதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!