“ராபர்ட் நீங்க சொல்றது நிஜமா?”
“யெஸ் சார்”
“அப்படி இருக்க வாய்ப்பிருக்கா?”
“வாய்ப்பு இல்லன்னு தான் நானும் நம்பினேன். ஆனா ரிசல்ட் வேற மாதிரி இருக்கு”
“உங்க ஃபைண்டிங்ஸ் என்ன? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க”
“வாள்ல இருக்கிற பிளட் சாதாரணமா மனுஷங்க உடம்பில இருந்து வந்ததில்ல”
“அப்படின்னா விலங்குகள் கிட்ட இருந்துன்னு சொல்ல முடியுமா?”
“நிச்சயமாக கிடையாது சார்”
“எப்படி அவ்ளோ தீர்மானமா சொல்றீங்க?”
“இந்த ஃபீல்டுல எனக்கு 12 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு சார். விலங்குகளோட ரத்தம் நிச்சயமா கிடையாது”
“அப்ப என்ன மீன் பண்றீங்க?”
“எனக்கு சரியா சொல்லத் தெரியல சார் ஆனால் ஏதோ ஒரு ஆபத்துன்னு மட்டும் தோணுது”
ராபர்ட் சொல்ல சப் இன்ஸ்பெக்டர் மனோ யோசித்தார்.
உஷாவிற்கு என்ன நடந்திருக்கும்? உஷா ஏன் இரவில் வெளியில் வரவேண்டும்? ஒருவேளை காதல் விவகாரமாக இருந்தால்… தன் காதலுடன் வேறு எங்காவது சென்று விடலாம் என்று யோசித்து இரவோடு இரவாக வெளியேறி சென்றுவிட தீர்மானித்ததிருந்தால்…
அது ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.
ஒருவேளை அது உண்மையாக இருந்தால்.. அந்த காதலன் எங்கு போயிருப்பான்? இப்போது கிடைத்த பேக் அவனுடையதாகக் கூட இருக்கலாம்.
ஒருவேளை அவனே வரச் சொல்லிவிட்டு கழுத்தறுத்துவிட்டு சென்றிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் அவன் எதற்காக பேக்கை விட்டுச் செல்ல வேண்டும்?
சம்பவ இடத்தில் வேறு எந்த கைகலப்பும் நடந்ததாகத் தெரியவில்லை.
உஷாவின் அப்பா மிகவும் சாதாரணமாகத்தான் இருக்கிறார் அப்படி என்றால் அந்த காதலனின் அப்பா பெரிய இடமாக இருக்க வேண்டும். தன் மகன் காதலித்த பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு தன் மகனை கடத்திக் கொண்டு சென்று பத்திரமாக வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது.
ஊரில் இன்னும் நன்றாக விசாரித்து பார்க்க வேண்டும்.
சப் இன்ஸ்பெக்டர் மனோ தனக்குள் யோசிக்க அவர் மொபைல் அடித்தது.
எடுத்தார்.
“சார்” கான்ஸ்டபிள் அகில்.
“சொல்லுங்க அகில்”
“கோவில் பூசாரியை யாரோ கொலை பண்ணிட்டாங்க” அகில் சொல்ல மனோ அதிர்ந்தார்.
“எப்ப ?”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சார்”
மனோ தன் ஜீப்பில் பூசாரியின் வீட்டை அடைந்தான்.
கூட்டம் கூடியிருந்தது. மனோவைப் பார்த்தவர்கள் விலகி வழி விட்டனர்.
பூசாரியின் மனைவி பெருங்குரல் எடுத்து அழுதாள்.
“உங்கள அன்னிக்கு வேட்டைக்குப் போகாதீங்கன்னு பல முறை படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டீங்களா? இப்ப என்ன ஆச்சு? “
அவள் கதறியபடி அழுததில் ஏதோ ஒரு செய்தி ஒளிந்திருப்பது போல் மனோவிற்குத் தோன்றியது.
மனோ உள்ளே சென்றார். பூசாரியின் விழிகள் எங்கோ பார்த்து நிலைத்திருந்ததில் பயம் தென்பட்டது. யாரையோ பார்த்து எக்கச்சக்கமாக பயந்தது போல் தோன்றியது.
“என்ன நடந்தது?” மனோ கேட்க பூசாரியின் மனைவி கதறியபடி சொன்னாள்.
“காலையில நல்லாத்தான் போனார். திரும்ப வர்றப்ப முகமெல்லாம் ஒரு மாதிரி இருந்துச்சு. அப்பவே எனக்கு சந்தேகம் ஆச்சு. ஏங்க ஒரு மாதிரி இருக்கீங்கன்னு கேட்டேன். அதுக்கு ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டார். சரிங்க நானும் கடைக்கு போயிட்டு வந்தேன். வந்து பார்த்தா இப்படி…” முடிக்காமல் கதறி அழுதாள்.
மனோ சுற்றிலும் நின்றவர்களைப் பார்த்தார்.
“நீங்க எல்லாரும் பக்கத்து வீட்ல தானே இருக்கீங்க? உங்களுக்கு எந்த சத்தமும் கேட்கலயா?”
அனைவரும் அமைதியாக இருக்க ஒருவர் மட்டும் தயக்கமாக சொன்னார்.
“இல்ல சார்”
ஒரு கான்ஸ்டபிள் மனோவிடம் நெருங்கி வந்தார்.
“சார்”
“ம்”
“பாரன்சிக் டீம் வந்திருக்காங்க”
“ப்ரொசீட்”
மனோ தர்மகர்த்தாவிடம் வந்தார்.
“கோவிலுக்கு ஒரு பூசாரி தானா? இல்ல வேற யாராவது இருக்காங்களா?”
“இன்னொருத்தர் இருக்கார்”
“அவர் எங்க இருக்கார்?”
“இங்கதான்..” என்று சொன்ன தர்மகர்த்தா “இதோ இங்க இருக்கார்” என்று ஒருவரை காட்டினார். அவருக்கு வயது அறுபதைக் கடந்திருந்தது.
மனோ அவரை ஏறிட்டார்.
“நீங்க?”
“என் பேர் ராமன்”
“ம்”
“கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் நான் பூஜை செஞ்சேன். இப்ப பண்றதில்ல”
“ஏன்?” மனோ கேட்க அவர் முகம் வெளிறியது. சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தார்.
“வயசாயிடுச்சு”
“வீரையன யார் கொன்னிருப்பாங்கன்னு நினைக்கறீங்க?”
“தெரியாது”
“சரிங்கய்யா. இப்ப நீங்க போலாம். திரும்ப ஏதாவது தகவல் வேணும்னா உங்களை விசாரிக்கிறேன்” சொன்ன
மனோ வெளியே வந்தார். தன் ஜீப்பை நோக்கி நடக்க ஆரம்பிக்க அது எங்கிருந்தோ அவர் மீது பாய்ந்தது. அதை சற்றும் எதிர்பாராத மனோ நிலைகுலைந்து கீழே விழ இப்போது அதன் முகம் மனோவின் முகத்திற்கு நேரே வர அது என்னவென்று பார்த்த மனோ அதிர்ந்தார்.
ரத்தம் வழியும் வாயுடன் எதிரில் நின்றது ஓநாய்.
கான்ஸ்டபிள்கள் தங்கள் லத்தியால் அதைத் தாக்க முயல ஒநாய் ஒரு கான்ஸ்டபிள் மீது பாய்ந்தது. அவர் கீழே விழ கழுத்தில் கடித்தது. ரத்தம் பீறிட அவர் கழுத்தைப் பிடித்தபடி அலறினார்.
மற்றொரு கான்ஸ்டபிள் தாக்கும் முன் அவர் மீது பாய்ந்த ஓநாய் தன் கூரிய நகங்களால் அவரைத் தாக்கியது.
மற்றவர்கள் அந்த ஓநாயை அதிர்ச்சியாகப் பார்க்க அது மனோவிடம் மீண்டும் பாய அவர் அவசரமாக ஜீப்பில் ஏறினார். ஜீப் டிரைவர் தயாராக ஜீப்பை எடுக்க ஓநாய் ஜீப்பின் பின் ஓடி வந்தது. அதை நம்ப முடியாமல் பார்த்த மனோ தன் உடம்பில் இருந்து வழிந்த ரத்தத்தைத் துடைத்தார்.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு..
மனோ தன் முன் அமர்ந்திருந்த ராமனை ஏறிட்டார்.
“சார்”
“சொல்லுங்க ராமன் உங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு சொன்னா அத என்னால் நம்ப முடியாது”
“நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல சார்”
“ரொம்ப வருஷமா நீங்க கருப்பசாமி கோவில் பூசாரியா இருக்கீங்க”
“ஆமா”
“சாமி வேட்டைக்கும் போயிருக்கீங்க”
“ஆமா”
“சாமி வேட்டையில என்ன நடக்கும்?”
“பெரும்பாலும் வேட்டைக்குப் போறவங்களுக்கு சாமி வேட்டைல என்ன நடக்கும்னு தெரியாது எனக்கும் தெரியாது”
“அப்படியா?”
“ஆமா”
“ வீரையன் சாமி வேட்டைக்குப் போனதுல வாள்ல ரத்தம் இருக்கே தெரியுமா?”
“தெரியும்”
“அது எப்படி வந்திருக்கும்னு நினைக்கிறீங்க?”
“எனக்கு தெரியல”
“நீங்க எத்தனை முறை சாமி வேட்டைக்குப் போயிருக்கீங்க?”
“முப்பது வருஷமா”
“ராமன்”
“சொல்லுங்க சார்”
“உங்களுக்கு இந்த ஏவல் தெரியுமா?”
“சார்”
“ ஏவல் சார். ஏவி விடறவங்க”
“கேள்விப்பட்டிருக்கேன்”
“நாங்க அங்க வந்தப்ப எங்கள ஒரு ஓநாய் அட்டாக் பண்ணது தெரியும்னு நினைக்கிறேன்”
“தெரியும்”
“அது எங்களை குறி வச்சு யாரோ ஏவி விட்ட மாதிரி எனக்கு தோணுது. நீங்க என்ன சொல்றீங்க?”
“எனக்கு அப்படி தெரியல”
“சரி போகட்டும். அந்த இடத்துக்கு ஓநாய் எப்படி வந்திருக்க முடியும்?”
“கொஞ்ச தூரத்திலேயே காடுதான். அதனால வந்திருக்கலாம்”
“நீங்க கொஞ்சம் வெளிப்படையா பேசினா ரொம்ப நல்லது”
“நீங்க கேட்ட எல்லா கொஸ்டின்ஸுக்கும் நான் ஆன்சர் பண்ணிட்டேன் சார்”
“நீங்க எதுவும் மறைக்கலயா?”
“இல்ல”
“உங்க பொண்ணு கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாடி சூயிசைட் பண்ணிட்டாங்க. அப்படித்தானே?”
“அதுக்கும் இந்த கேஸ்க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா சார்?”
“உங்க பொண்ணு சாவுல மர்மம் இருக்குன்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்ப்ளைன்ட் வந்துச்சு இல்லையா?”
*ம்”
“ஆனா போலீஸ் வர்றதுக்குள்ள பாடி எரிச்சிட்டீங்க”
“அதெல்லாம் வருஷங்களுக்கு முன்னாடி நடந்த கதை”
“இருக்கலாம் ஆனால் இன்னும் முடியாத கதை”
மனோ சொல்ல ராமன் ஒன்றும் சொல்லாமல் பார்த்தார்.
“ஓகே ராமன் இப்ப நீங்க போலாம் ஆனா எங்க விசாரணை இன்னும் முடியல”
***
டிஎஸ்பி சந்திரகுமார் தன் முன் அமர்ந்திருந்த மனோவை கவலையாய் பார்த்தார்.
“மனோ”
“சார்”
“எனி இம்ப்ரூவ்மென்ட்?”
“ஸாரி சார். இன்வெஸ்டிகேசன் இஸ் கோயிங் ஆன் சார்”
“ஒரு காலேஜ் ஸ்டுடன்ட் ஒரு கோவில் பூசாரி ரெண்டு பேர் செத்திருக்காங்க. ஆனா நாம இன்னும் சாலிடா எதுவும் பண்ணல”
டிஎஸ்பி சொல்ல மனோ ஒன்றும் சொல்லாமல் அவரைப் பார்த்தார்.
“மனோ”
“சார்”
“நான் இப்ப உங்கள கூப்பிட்டது அதுக்கு மட்டும் இல்ல எனக்கு ரகசியமாக ஒரு மெயில் வந்திருக்கு அது பிரிண்ட் எடுத்து வச்சிருக்கேன் அத பாருங்க ஒரு நிமிஷம்.”
சொன்ன டிஎஸ்பி பிரிண்ட் அவுட்டை மனோவிடம் நீட்டினார்.
‘மதிப்பிற்குரிய டிஎஸ்பி அவர்களுக்கு
எனக்கு நத்தக்காடையூரில் கொஞ்சம் நிலம் இருக்கிறது. நீண்ட நாட்களாக ஒன்றும் செய்யாமல் இருந்த நான் இப்பொழுது ஏதாவது சாகுபடி செய்யலாம் என்று தோன்றியதால் கடந்த மாதம் எங்கள் நிலத்தை உழுதோம். அப்போது எங்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக கொஞ்சம் எலும்புகள் கிடைத்தன. அவை மனிதர்களின் கை விரல் எலும்புகள் கால்விரல் எலும்புகள். எங்களுக்கு பயமாகப் போய்விட்டது. எங்கள் நிலத்தை நன்றாக உழுது பார்த்தோம். மேற்கொண்டு எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் நாங்கள் இதை காவல்துறைக்கு தெரிவிக்காமல் மறைத்து விடத்தான் நினைத்தோம். அப்படி நினைத்து கிடைத்த எலும்புகள் அனைத்தையும் எரித்து விட்டோம். ஆனால் சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவி அங்கே கொலை செய்யப்பட்டு கிடந்ததும் அதை விசாரிக்க காவல்துறை வந்ததும் தெரிந்தது. ஒருவேளை உங்கள் வழக்கிற்கு இந்தத் தகவல் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதை நான் உங்களிடம் தெரிவிக்கிறேன்.
நான் என்னை வெளிப்படுத்திக் கொள்ளப் போவதில்லை என்றாலும் நான் கடிதத்தில் சொன்ன அனைத்தும் உண்மை என்று மீண்டும் உறுதி கூறுகிறேன்.’
மனோ கடிதத்தை முழுவதும் படித்து முடித்தார்.
“சார் இது…”
“மனோ நீங்க நினைக்கிற மாதிரி இது ஒரு சாதாரண கொலை வழக்கு கிடையாது. இதுக்கு பின்னாடி வேற என்னமோ பெருசா இருக்கு.”
“சார்”
“நாம தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் யாருக்கோ ஆபத்தா முடியும்”
“புரியுது சார்”
“உஷாவை கொன்னது யாருன்னு கண்டுபிடிக்கணும். பூசாரி எப்படி செத்தார். அவர் கொலைக்கு பின்னாடி யாருன்னு கண்டுபிடிக்கணும். சாமி வேட்டையில நிஜமா என்ன நடக்குதுன்னு நமக்கு தெரிஞ்சாகணும். அந்த ஓநாய் எப்படி குறிப்பா உங்கள வந்து தாக்குச்சின்னு தெரிஞ்சாகணும்”
டிஎஸ்பி சொல்ல மனோ புன்னகைத்தார்.
“எப்படி சார்?”
“ஒரு வழி இருக்கு”
“சார்”
“ஒருத்தன் இருக்கான். அவன் கிட்ட சொல்லிட்டா கேஸ் முடிஞ்சதுன்னு நாம நிம்மதியா இருக்கலாம்.”
“நிஜமாவா சார்?”
“ஆமா எவ்வளவு சிக்கலான கேஸானாலும் கூலா ஹேண்டில் பண்ணுவான்.”
“ சூப்பர் சார்”
“நான் கால் பண்ணிப் பார்க்கிறேன்” சொன்னவர் தன் மொபைல் எடுத்தார்.
டயல் செய்தார்.
மறுமுனையில் ரிங் எடுக்கப்பட்டது.
“ஹலோ நான் டிஎஸ்பி சந்திரகுமார் பேசறேன்”
“சொல்லுங்க சார்”
“அசோக் இருக்காரா ?”
தொடரும்
