Home Featuredஜனனி 7

ஜனனி 7

by GK Tamil Novels
52 views

சில வாரங்கள் கடந்த நிலையில் பாலா ஜனனி அவர்களுக்குள்ளான அன்பு மேலும் வலுப்பெற்றிருந்தது. அவர்கள் அறிவிக்காமலே ஒருவரையொருவர் உணர்ந்திருந்தனர். பாலாவின் மனசாட்சி மட்டும் அவ்வப்பொழுது கேள்வி கேட்கும்.

‘உன் சுயநலத்திற்காக ஒரு சின்னப் பெண் வாழ்க்கையை வீண் செய்யாதே’ என்று.

மனப்போராட்டம் தொடர்ந்த நிலையில் ஜனனியுடன் பழகுவதையும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தான்.

இந்தக் காலகட்டத்தில் மேலும் பல பத்திரிகைகள் பாலாவின் நாவலை வெளியிட்டிருந்ததால் எங்கு சென்றாலும் எழுத்தாளர் பாலமுருகன் என்று கண்டுகொள்ளப்பட்டான்.

கொஞ்சம் மகிழ்வாக இருந்தாலும் நிறையவே வெட்கமாக உணர்ந்தான்.

‘அப்படி என்ன தான் எழுதி விட்டோம் என்று இவ்வளவு வரவேற்பு கிடைக்கிறது?’ தனியாக இருக்கும் தருணங்களில் அவன் அடிக்கடி யோசிக்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று.

கதைகளுக்கு பணம் தேடி வந்ததால் கமலம் அடிக்கடி உதாசீனப்படுத்துவதும் இப்போது குறைந்திருந்தது.

கணேஷ் மட்டும் எப்பொழுதும் போல் பாலாவுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தான்.

அன்று கணேஷ் எதார்த்தமாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்க சிறந்த எழுத்தாளருக்கான சாகித்ய அகாடமி விருது திரு பாலமுருகன் நூல் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்களில் அரசியல் கொள்கைகளின் விளைவுகள் என்று அறிவிக்கப்பட கணேஷ் துள்ளிக் குதிக்காத குறைதான்.

உடனே தன் பைக்கை எடுத்தான்.

“எங்கடா வந்ததும் வராததுமா எங்க கிளம்பறே” அம்மா குரல் கொடுத்ததை அலட்சியப்படுத்தி பாலமுருகன் வீட்டிற்கு விரைந்தான்.

அரை மணி நேரத்தில் பாலாவின் வீட்டை அடைந்தான்.

போய் அழைப்புமணியை அடிக்க கமலம் கதவைத்திறந்தாள்.

“யார் வேணும்?”

“பாலா”

“என்ன வாசகரா? ஒரு நேரம் காலம் இல்லையா? டைம் பாருங்க சார்?”

கமலத்தின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க

“இல்ல நான் பாலா கூட வர்க் பண்றேன் அவரோட கொலீக்.”

“இருக்கட்டுமே. அதுக்காக நேரம் காலம் பார்க்காமல் வருவீங்களா?”

கமலம் கேட்க கணேஷ் ஒன்றும் சொல்லவில்லை.

“ஒரு நல்ல விஷயம் சொல்ல வந்தேன்.”

‘எந்த நல்ல விஷயமா இருந்தாலும் நாளைக்கு சொன்னாபோதும் கிளம்புங்க”

கமலம் சொல்லும்போதே பாலா எழுந்து வந்தான்.

கணேஷைப் பார்த்தவன் மலர்ந்தான்.

“வா கணேஷ் ப்ளஷன்ட் சர்ப்ரைஸ்
உட்காரு என்ன சாப்பிடற?”

“என்னோட விசிட் சர்ப்ரைஸ் கிடையாது நான் சொல்லப் போற விஷயம்தான் சர்ப்ரைஸ்”

கணேஷ் புன்னகைக்க பாலா குழப்பத்துடன் பார்த்தான்.

“அப்படி என்ன விஷயம் சொல்லப் போறே?”

“முதல்ல கை கொடு பாலா.”

பாலாவின் கைகளைப் பற்றி குலுக்கினான் கணேஷ்.

“பாலா உனக்கு சாஹித்ய அகாடமி அவார்டு கிடைச்சிருக்கு.”

கணேஷ் சொல்ல பாலாவின் காதுகளில் சரியாக விழவில்லை.

“என்ன சொன்னே?”

“சாஹித்ய அகாடமி அவார்டு பாலா”

“எனக்கா? நிஜமாத்தான் சொல்றியா?”

“ஆமா பாலா. அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்.”

அதுவரை சும்மா இருந்த கமலம்

“காஃபி எடுக்கட்டுங்களா?” என்று கேட்டாள்.

பாலாவும் கணேஷும் ஒன்றாய் புன்னகைத்தனர்.

***
“பாலமுருகன் உங்களால எங்க ஸ்கூலுக்கு ரொம்பப் பெருமை. இனிமே நீங்க அங்க இங்கன்னு அலைய வேண்டியதிருக்கும் இலக்கியக் கருத்தரங்கு பாராட்டு விழா அப்படி . ”

பள்ளியின் முதல்வர் புன்னகையுடன் பாலாவின் கைகளைப் பற்றி குலுக்கினார்.

“லீவ் ஃபார்மாலிட்டீஸ் பற்றி ரொம்ப யோசிக்காதீங்க சும்மா எழுதி வச்சுட்டுப் போனா போதும்”

“ரொம்ப நன்றி சார். இது நீங்க எப்படி எடுத்துககுவீங்கன்னு ரொம்பக் குழம்பிப் போய் இருந்தேன்.”

“ஒரு குழப்பமும் வேண்டாம். உங்களுக்கான சம்பளம் எந்த விதத்திலும் குறைக்கக் கூடாதுன்னு கரஸ்பாண்டன்ட் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டிருக்காரு.”

“ரொம்ப நன்றி சார்.”

“நன்றி எல்லாம் வேண்டாம் பாலமுருகன். எழுதுங்க உங்களால் என்னென்ன முடியுமா எல்லாமே எழுதுங்க. நம்ம ஸ்கூலுக்கு பெருமை கிடைக்கட்டும்.”

“உங்க ஆசீர்வாதம் சார்.”

***
காஃபி ஷாப்.

“என்னப்பா ரொம்ப பெரிய ஸ்டார் ஆயிட்டீங்க? உங்க பக்கத்துல யாராவது இருக்காங்களான்னு பார்த்துப் பார்த்து வர வேண்டியது இருக்கு.”

ஜனனி சொல்ல

“அய்யோ ஜனனி நீங்க வேற. இப்பயும் உள்ளுக்குள்ள கூச்ச சுபாவம் இருக்கிற அந்த பாலாதான் எட்டிப் பார்த்திட்டுருக்கான். திடீர்னு வாழ்க்கை இப்படி மாறும்னு நான் எதிர்பார்க்கலை.”

“அதுதான் லைஃப். ”

ஜனனி புன்னகைத்தாள். அவளின் குழந்தை முகத்தில் அந்த புன்னகையைப் பார்த்த பாலா கரைந்தான்.

“பாலா”

“ம்”

“என்னாச்சுப்பா ?”

“ஒண்ணுமில்ல ஜனனி.”

“நிஜமா ஒண்ணுமில்லயா?”

“நிறைய இருக்கு”

“ம்”

“பயமா இருக்கு”

“எதுக்குப்பா பயம்?”

“தெரியலை.”

“என்கிட்டயா?”

“இல்ல.”

“சமூகமா?”

“இல்ல.”

“உங்க மனைவியா?”

“இல்ல.”

“அப்புறம் என்ன பயம்?”

“நான்.”

“என்ன பாலா சொல்றீங்க?”

“என்கிட்ட தான் எனக்குப் பயம். ”

“புரியலப்பா.”

“வாழ்க்கை விரக்தியாப் போயிட்டிருந்த ஒரு நாள்ல ஒரு முகத்தைப் பார்த்தேன். என்னன்னு தெரியல. அந்த குழந்தை முகம் அந்தப் புன்னகை எப்பப் பார்த்தேனோ எனக்குள்ள ஏதோ ஒரு சந்தோஷம். அந்த முகம் என்னோடு பழக ஆரம்பிக்க என்னால் என்னோட விரக்தி தோல்விகள் எல்லாத்திலும் இருந்து என்னால் தள்ளியிருக்க முடிஞ்சது. என்னோட மனசு என்கிட்ட அடிக்கடி சொல்லும். சின்ன வயசுல நிறைய சொல்லியிருக்காங்க . நாம வேண்டிக்கிட்டா நமக்கு வரம் கொடுக்க தேவதை வருவாங்கன்னு.
அந்த மாதிரி எங்கிருந்தோ வந்த அந்த தேவதை எனக்குள்ள ஒளிஞ்சிட்டிருந்த திறமையை ஊர்முழுக்க வெளிச்சம் போட்டுக் காட்ட வெச்சிடுச்சு. இந்த உடம்பில் உயிர் இருக்கிற வரைக்கும் அந்த குழந்தை முகத்தில் இருக்கிற புன்னகை என்னிக்கும் மாறக்கூடாது. அதுக்கு தப்பித்தவறி நான் காரணமாகக் கூடாதுங்கிற பயம் எனக்கிருக்கு.

யெஸ் ஜனனி எனக்கு என் மேல பயம். வீட்ல கிடைக்கவேண்டிய சந்தோசம் கிடைக்காம இருக்கேன். எனக்குள்ள இருக்கிற சாத்தான் உன்னை எதுவும் பண்ணிடக் கூடாதுன்னு ஒவ்வொரு நிமிஷமும் பயப்படறேன் ஜனனி.”

பாலா பேசி முடிக்க அங்கே ஓர் அமைதி நிலவியது. ஜனனி பாலாவின் கண்களை உற்றுப் பார்த்தாள்.

‘உன்னை மிகப்பெரிய அறிவாளி என்று நினைத்திருந்தேன் பாலா. இன்னும் என் மனம் புரியவில்லையா என்ன? எப்போதோ நான் உன் வசம் ஆகிவிட்டேன். நான் உனக்கு சினேகிதி. எதையும் மறுக்காமல் கொடுக்கும் ஸ்நேகிதி’

தனக்குள் எண்ணிக் கொண்ட ஜனனி பாலாவின் கைகளைப் பிடித்தாள்.

“பாலா உங்ககிட்ட வெளிப்படையா ஒண்ணு சொல்லப் போறேன். நீங்க என்னப் பத்தி உங்க மனசுல வெச்சிருக்குற பிம்பம் அதனால உடைஞ்சாலும் பரவாயில்லை.

உங்களுக்கு எங்கிட்ட எந்த தயக்கமும் வேண்டாம். உங்களுக்கு நான் எப்ப வேணும்னு தோணுதோ அப்போ என்ன கூப்பிடணும்னு கூட நீங்க கஷ்டப்பட வேண்டாம் என்னோட மொபைலுக்கு ஒரே ஒரு ரிங் கொடுங்க போதும். என்னை நான் உங்களுக்குக் கொடுக்க ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பாலா ”

ஜனனி சொன்ன பிறகு இருவரும் நீண்ட நேரம் எதுவும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். தன் கைகளைப் பிடித்திருந்த ஜனனியின் கைகளிலிருந்து பாலா தன் கரங்களை விடுவித்துக்கொள்ளவில்லை.

அதேநேரம் ஜனனியைப் பின்தொடர்ந்து வந்திருந்த அருண் அவர்களின் பார்வையில் படாதபடி இருவரையும் வன்மமாய் பார்த்தபடி சற்றுத்தள்ளி அமர்ந்திருந்தான்.

 

You may also like

Leave a Comment

error: Content is protected !!