கங்காதரன் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு அவர் வீட்டில் ஒப்படைக்கப்பட்டார். வீட்டில் இருந்தவர்களால் நடந்தது எதையும் நம்ப முடியவில்லை. அவர் மனைவி பார்வதி அழுதபடியே இருக்க மகன் சந்திரன் வந்து அழைத்தான்.
“அம்மா”
“ம்”
இன்ஸ்பெக்டர் வந்திருக்கார்
“ம்”
தளர்வாய் எழுந்தாள். ஹாலுக்கு வர அங்கே இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் சேரில் அமர்ந்திருந்தார்.
“வாங்கம்மா இந்த சூழ்நிலையில் நான் விசாரிக்கிறது உங்களுக்கு கஷ்டமாத்தான் இருக்கும் ஆனா ஃபார்மாலிட்டிஸ் நான் கம்ப்ளீட் பண்ணனும்.”
“பரவால்ல சார்”
“உங்க கணவருக்கு எதிரிகள் யாராவது இருக்காங்களா?”
“யாரும் இல்ல சார் அவர் ரொம்ப நல்லவர்.”
“உங்களுக்குத் தெரியாம யாராவது?”
“இல்ல சார் என் கணவர் எல்லாம் என்கிட்ட சொல்லுவார் அவருக்கு பர்சனலா தொழில் ரீதியா யாரும் எதிரிகள் இல்லை.”
“அவர் தற்கொலை பண்ணிக்க ஏதாவது காரணம் இருக்கா?”
“இல்ல சார் கண்டிப்பா அவர் தற்கொலை பண்ணியிருக்க மாட்டார்.”
ஐ சீ சொன்ன இன்ஸ்பெக்டர் அவளைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டார்.
“மிஸ்டர் கங்காதரன் டைரி கொடுக்க முடியுமா?”
“ஸாரி சார் அவருக்கு டைரி எழுதற பழக்கம் இல்லை.”
“இட்ஸ் ஓகே” சொன்னவர் வெளியில் வந்தார்.
கான்ஸ்டபிள் சோமு அவரைப் பார்த்தவுடன் ஓடி வந்தார்.
“சார்”
“நீ எதுக்கும் இன்னும் ஒரு வாரம் இந்த வீட்ல என்ன நடக்குது? யார் யார் வராங்க? எல்லாமே கண்காணி. எனக்கு அப்பப்ப தகவல் சொல்லு.”
“யெஸ் சார்”
“எப்பவும் மஃப்டிலயே இரு. நீ போலீஸ்காரன்னு யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது.”
“யெஸ் சார்”
***
“ஃபைனலி திஸ் ஈஸ் தி ரிசல்ட்”
ப்ரொஃபசர் ராமலிங்கம் சொல்ல அரங்கம் கைதட்டியது. கைத்தட்டல் அடங்க சற்று நேரம் ஆக ப்ரொஃபசர் அனைவரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு டயஸில் நின்றிருந்தார்.
செமினார் முடிந்தபின் ஜான்பால் ராமலிங்கத்தின் கைகளைப் பற்றி குலுக்கினார்.
“ப்ரொபஃசர் வழக்கம்போல் கலக்கிட்டீங்க.”
“தேங்க்ஸ் ஜான்.”
“சார் எனக்கு கொஞ்சம் டவுட்”
“கேளுங்க”
“இப்ப நீங்க சொன்ன மருந்து தயாரிப்பு எந்த ஸ்டேஜ்ல இருக்கு?”
“ஃபார்முலா ஃபைனலைஸ் பண்ணிட்டேன் சாம்பிள் தயாரிச்சுப் பார்த்தேன். சாம்பிள் டெஸ்ட் பண்ணியாச்சு. ரிசல்ட் சக்ஸஸ்ஃபுல். ரிப்போர்ட் ரெடி பண்ணி கவர்மெண்ட் அப்ரூவல்க்கு அனுப்பியிருக்கேன். கிடைச்சா தயாரிக்க ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.”
“க்ரேட் சார்” சொன்ன ஜான்பால் தொடர்ந்து கேட்டார்.
“சார்”
“ம்”
“இந்த மருந்து இனி வர்ற எல்லாத் தொற்றுங்க கிட்ட இருந்தும் மக்களை காப்பாற்றுமா?”
“கண்டிப்பா”
“இது யாரு வேணும்னாலும் எடுத்துக்கலாமா? பக்கவிளைவுகள் எதுவும் இருக்கா?”
“அது இப்ப சொல்ல முடியாது. இன்னும் ஸ்டடி போயிட்டிருக்கு.”
“ஓகே ப்ரொஃபசர். நீங்க கண்டுபிடித்திருக்கிற இந்த ஃபார்முலா மனித குலத்துக்கு மாபெரும் பரிசா இருக்கும்னு நம்பறேன் .”
“தேங்க்ஸ் ஜான்”
“எங்க இருக்கீங்க இப்போ?”
“ஹோட்டல் கிரீன் பார்க்ல தங்கியிருக்கேன். ”
“ஓகே ப்ரொஃபசர் முடிஞ்சா நாளைக்குப் பார்ப்போம்.”
ஜான் விடைபெற்றுப் போய்விட ராமலிங்கம் வெளியில் வந்தார்.
கார் பார்க்கிங்கை அடைந்து தன் காரில் ஏறிக்கொண்டார். காரில் பயணித்து தான் தங்கியிருக்கும் கிரீன் பார்க் ஹோட்டலை அடைய அவருக்கு முப்பது நிமிடங்கள் ஆனது.
பார்க் செய்து விட்டு உள்ளே நுழைந்தவரை ரிசப்ஷனிஸ்ட் அழைத்தாள்.
“சார்”
“யெஸ்”
“உங்களுக்கு ஒரு கவர் இருக்கு”
***
சோலார்.
பொழுது இன்னும் முழுமையாக விடியாமல் இருக்க அவர்கள் இருவரும் காரில் காத்திருந்தனர். எஞ்சின் அணைக்கப்படாமல் உறுமியபடி இருந்தது.
“வரதா”
“ம்”
“என்ன ஆளைக் காணோம் இன்னும்?”
“வருவான். வீட்டில இல்ல. அப்ப ஜாகிங் போயிருக்கான்னு கன்ஃபர்ம் பண்ணிட்டேன். இந்த வழியாத் தான் வந்தாகணும்.”
“ம் வந்தா காரை வச்சு ஒரே ஏத்தா ஏத்திட வேண்டியதுதான்.”
“ம் இல்லன்னா பாஸ் நம்மள முடிச்சுடுவாரே”
அவர்கள் பேசிக்கொண்டே சாலையில் கூர்மையாகக் கவனித்தனர்.
“வரதா ஆள் வர்றான்.”
அவன் சொல்ல வரதன் பார்த்தான்.
அசோக் வெள்ளை ட்ராக் சூட்டில் ஓடிவந்து கொண்டிருக்க டாமி அவனுக்கு இணையாய் நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்தது.
வரதன் ஆக்சிலேட்டரை பலம் கொண்ட மட்டும் அழுத்தினான். கார் சீறியபடி பாய்ந்தது.
காருக்கும் அசோக்கிற்குமான இடைவெளி குறைந்து கொண்டே வர பனி மூட்டத்தில் அசோக் காரை கவனிக்கவில்லை.
அவன்மீது மோதப் போன கடைசி நொடியில் டாமி அசோக்கின் டிராக் சூட்டைப் பற்றி இழுத்து கீழே தள்ளியது. மயிரிழையில் கார் கடக்க அசோக் சட்டென்று எழுந்தான். டாமியைப் பார்த்து புன்னகைத்தான்.
“தேங்க்ஸ் டாமி”
டாமி வாலாட்டியது.
“என்ன பண்ணலாம்? போயிட்டாங்க போலிருக்கே. ”
அசோக் சொல்ல டாமி குரைத்தது.
“திரும்ப வருவாங்கன்னு சொல்றியா?”
டாமி தலையசைக்க அதே நேரத்தில் கார் அதிவேகத்தில் மீண்டும் வர அசோக் தயாரானான்.
கார் அருகில் வர சட்டென்று பக்கவாட்டில் நகர்ந்து கண்ணாடியை தன் ஷூக் காலால் உதைத்தான். கண்ணாடி உடைந்து கண்ணாடிச் சில்லுகள் டிரைவர் சீட்டில் இருந்த வரதன் மேல் பட அவன் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்து வயலில் இறங்கியது. நின்றது.
டாமி அசோக்கைப் பார்க்க
“என்ன பார்க்கிற? இப்ப எனக்கு சண்டை போடுற மூட் இல்ல. போய் அவங்க ரெண்டு பேரையும் பிடிச்சுக் கொண்டு வா.”
அசோக் புன்னகைத்தபடி சொன்னான்.
டாமி அவர்களை நோக்கிப் பாய்ந்தது.
காரிலிருந்து இறங்கிய வரதனும் மற்றவனும் டாமியைக் கண்டு பயந்தார்கள்.
“என்ன வரதா பார்த்துட்ருக்கே? கட்டய எடுத்து அதோட தலையில போடு.”
சொன்ன மற்றவனின் மேல் பாய்ந்தது. அவன் கையைக் கடிக்க அவன் துடித்தான்.
வரதன் டாமியிடமிருந்து தப்பி ஓடிவந்தான். அதிர்ந்தான்.
அசோக் புன்னகைத்தான்.
“யார் நீ? யார் உன்ன அனுப்பிச்சாங்க?”
அசோக் கேட்க வரதன் பதில் ஒன்றும் சொல்லாமல் அசோக்கைப் பார்த்தான்.
அதே நேரத்தில் ரத்தம் சொட்டும் கையுடன் மற்றவனும் அங்கு வர டாமியைப் பார்த்த வரதன் நடுங்கினான்.
*டாமி” அசோக் அழைத்தான்.
“உனக்குத்தான் இவன் பயப்படறான். நீயே கேளு. யார் இவனை அனுப்பிச்சதுன்னு”
அசோக் சொல்ல டாமி வரதனின் அருகில் வந்தது.
டாமி அவனைப் பார்த்து குரைக்க வரதன் நடுங்கியபடி அலறினான்.
“நான் சொல்லிடறேன்.”
அசோக் புன்னகைத்தான்.
“தட்ஸ் குட்”
***
தன் அறைக்குத் திரும்பிய ராமலிங்கம் கவரை மேஜை மீது வைத்தார்.
ரூம் சர்வீசுக்கு போன் செய்து ஒரு காஃபி என்றார்.
முகத்தை நன்கு கழுவிக் கொண்டு அழுத்தத் துடைத்தார்.
டிவி முன் அமரப் போனவர் மேஜை மீதிருந்த ரிமோட்டை எடுத்தார்.
அந்தக் கவர் அவரை என்னைத் திறந்து பார் என்றது.
எடுத்தவர்
யார் கொடுத்திருப்பார்கள் என்று ஃப்ரம் அட்ரஸைப் பார்த்தார்.
டாக்டர் மாரிமுத்து என்றிருந்தது.
கவரைத் திறந்து பார்த்தார்.
உள்ளே ஒன்றுமில்லை. திகைத்தவர் கவரை மேஜை மீது வைக்க உள்ளே அவர் கவனத்தைக் கவராமல் மெளனமாய் இருந்தது அந்த பச்சைக் கலர் மாத்திரை.
