“இதுவரைக்கும் எத்தனை மர்டர் நடந்திருக்கு?”
டி எஸ் பி துரைராஜ் கேட்க கண்ணபிரான் மெதுவான குரலில் சொன்னார்
“மூணு”
“குற்றவாளிங்க யாருன்னு ஏதாவது துப்பு கிடைச்சதா?”
“ஸாரி சார்”
கண்ணபிரான் தலைகுனிந்து சொல்ல டிஎஸ்பி பெருமூச்சு விட்டார்.
“செத்துப்போன மூணு பேருமே விஐபிஸ். மீடியால என்ன பேசறாங்கன்னு பார்த்திட்டுத்தானே இருக்கீங்க?”
“சார்”
“நகரில் தொடரும் மர்மக் கொலைகள். போலீஸ் திணறுகிறது.
ஒரு சேனல் செத்துப் போனவங்க பத்தி ஃபுல் கவரேஜ் கொடுக்கிறான்.
பார்த்திருப்பீங்களே?”
“யெஸ் சார்”
“இந்த கேஸ்ல உங்களோட அப்சர்வேஷன் என்னன்னு சொல்லுங்க.”
“சார்”
“ம்”
“செத்துப்போன கங்காதரன் லீடிங் இன்டஸ்ட்ரியலிஸ்ட். ராமலிங்கம் ஃபேமஸ் சயின்டிஸ்ட். தருண்குமார் எஜுகேஷனல் இன்ஸ்ட்யூட் நிறைய வச்சிருக்கார். ”
“ம்”
“மூணு பேருக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. ஐ மீன் மூணு பேரும் தொழில்லயும் சரி வேற எந்த வகையிலயும் சரி ஒருவருக்கொருவர் சம்பந்தப்படாதவங்க.”
“ஓகே”
“மூணு பேர் தங்கியிருந்த ரூம்லயும் ஒரு ப்ளெயின் கவர் கிடைச்சிருக்கு”.
“அதுல லெட்டர் ஏதாவது?”
“அப்படி எதுவுமில்ல சார்”
“ம்”
“மூணு பேரும் தற்கொலை பண்ணிக்கல.”
“எப்படி சொல்றீங்க? ”
“சூயிசைட் நோட் ஒண்ணும் இல்ல.”
“ம்”
கண்ணபிரான் மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் மௌனமாக இருக்க டிஎஸ்பி கேட்டார்.
“போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல ஏதாவது?”
“போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் படி சந்தேக மரணம்னு மட்டும் தான் இருக்கு. ”
“அப்படின்னா இந்த கேஸ் நமக்கு ஒரு சவால்.”
டி எஸ் பி சொல்ல கண்ணபிரான் மௌனமாய் பார்த்தார்.
“நமக்கு துப்பு கிடைக்கலன்னு நாம சும்மா இருக்க முடியாது. இந்த கேஸ் எப்படியாவது க்ளோஸ் பண்ணியாகணும். ஏன்னா மீடியால இருந்து நமக்கு பிரஷர் ஜாஸ்தி.”
“யெஸ் சார்”
“கண்ணபிரான் இந்த கேஸ்ல வேற ஏதாவது கோணத்திலிருந்து விசாரிச்சா நல்லாயிருக்குமே”
“எப்படி சார்?”
“மூணு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சம்பந்தம் இல்லாதவங்களாவே இருந்துட்டுப் போகட்டும். ஆனால் மூணு பேரையுமே பிடிக்காத யாராவது ஒருத்தர் இருந்தா?”
“சார்”
“சொல்லுங்க”
“கிடைச்ச எல்லா பிளெயின் கவர்லயும் டாக்டர் மாரிமுத்துன்னு பேர் இருக்கு.”
கண்ணபிரான் சொல்ல டிஎஸ்பி யோசித்தார்.
“அது சம்பந்தமா விசாரிச்சீங்களா?”
“யெஸ் சார் ஆனா செத்துப்போன மூணு பேரோட குடும்பத்துக்கும் டாக்டர் மாரிமுத்துன்னா யாருன்னு தெரியாது.”
“ம் அப்ப அது ஒரு ஃபேக் நேமா இருக்கலாம். ”
“சார்”
“கொலைகாரன் அப்படி கவர்ல அவனோட பேர் எழுதி அனுப்ப மாட்டான்.”
“யெஸ் சார்”
“கண்ணபிரான்”
“சார்”
“நீங்க விசாரணையை இன்னும் கொஞ்சம் துரிதப்படுத்துங்க. நானும் வேற எதாவது இந்த கேஸ்ல பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்.”
“யெஸ் சார்.”
கண்ணபிரான் விடைபெற்றுச் செல்ல டிஎஸ்பி யோசித்தார்.
அலைபேசியை எடுத்தவர் அழைத்தார்.
“அசோக்?”
***
டி எஸ் பி துரைராஜ் பங்களா.
தன் எதிரில் அமர்ந்திருந்த அசோக்கைப் புன்னகையுடன் பார்த்தார் டி எஸ் பி.
“எப்படி இருக்கீங்க அசோக்?”
“ஃபைன் சார்.”
“ஒரு கேஸ்ல உங்க ஹெல்ப் தேவைப்படுது.”
“யெஸ் சார்.”
“சிட்டில இப்ப நடந்த மூணு கொலைகளைப் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க.”
“யெஸ் சார் அந்த டிவில கூட கவர் பண்ணாங்களே?”
“ம்”
“அந்த மூணு பேர் பத்தின விவரங்கள். அவங்க கொலை சம்பந்தமான ப்ரிலிமினரி என்கொயரி ரிப்போர்ட். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எல்லாமே இந்த ஃபைல்ல இருக்கு.”
“யெஸ் சார்.”
“அப்புறம் சொல்லுங்க. உங்க டீம் மெம்பர்ஸ் எப்படி இருக்காங்க?”
“பரம சுகம் சார்.”
“ஆக்ஸிஜன் லேபரட்டரி கேஸ்ல மினிஸ்டர் ரொம்ப சந்தோசமா ஃபீல் பண்ணினார்.”
“தேங்க்யூ சார். அது டீம் வர்க்”
“நைஸ்.”
“அப்ப ஓகே சார்.”
“உங்க கிட்ட இருந்து ஒரு பாசிட்டிவ் ரிசல்ட் கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்.”
“டெஃபனிட்லி சார்.”
“எங்க தங்கியிருக்கீங்க?”
“ஹோட்டல் க்ரீன்பார்க் சார்.”
“ஓகே அசோக் பெஸ்ட் விஷ்சஸ்”
“தேங்க்யூ சார்.”
***
அன்றிரவு அசோக் அந்த ஃபைலை கவனமாக ஆராய்ந்தான்.
இறந்து போன கங்காதரன் ராமலிங்கம் தருண்குமார் மூவரின் விவரங்களைத் தனித்தனியே பேப்பரில் எழுதினான்.
கங்காதரன் வயது அம்பது
ராமலிங்கம் வயது அறுபத்திரண்டு.
தருண்குமார் வயது நாற்பத்தைந்து.
மூவரின் தொழில்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாமல் அமைந்திருந்ததை தனியாகக் குறித்து வைத்தான்.
கங்காதரனின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை எடுத்துப் பார்த்தான்.
மரணம் நிகழ்ந்த நேரம் காலை எட்டரை முதல் ஒன்பது மணி வரை.
உடலில் காயங்கள் எதுவுமில்லை.
ஆர்கான்ஸ் டீட்டெயில்ஸ் என்ற செக்ஷனில் பார்க்க நுரையீரலில் பெயர் தெரியா படிமங்கள் இருப்பதாகவும் சந்தேகத்திற்கிடமாகவும் இருப்பதாக எழுதப்பட்டிருக்க அசோக் சுறுசுறுப்பானான்.
ராமலிங்கம் ஃபைலை எடுத்துப் பார்த்தான். அந்த பாயிண்ட் இருக்கிறதா என்று பார்த்தான். இருந்தது.
தருண்குமார் ஃபைலிலும் அந்த பாயிண்ட் இருந்தது.
ஏன் அந்த பெயர் தெரியா படிமம் மூன்று பேரின் இறப்புக்குக் காரணமாக இருக்கக் கூடாது?
யோசித்தான்.
ஆனால் எப்படி?
நுரையீரலில் இப்படி ஒரு படிமம் இருந்தால் அது சுவாசத்தின் மூலம் உடம்பிற்குள் சென்று மரணத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் யாருடைய அறையிலும் எந்தவித போராட்டமும் நடந்ததாக இந்த ஃபைலில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் தற்கொலை என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டு கொலை என்று விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
அசோக் ஃபைலில் கிடைத்த மற்ற தடயங்களை ஆராய்ந்தான்.
மூன்று தனித்தனி கவர்கள் ஃ ப்ரம் டாக்டர் மாரிமுத்து என்ற பெயரில் கிடைத்திருப்பதாக குறிப்பு எழுதப்பட்டிருந்தது.
அசோக் மணி பார்த்தான்.
பத்து.
தன் அலைபேசியை எடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணபிரானை அழைத்தான்.
ரிங் போய் எடுக்கப்பட்டது.
“ஹலோ”
“கண்ணபிரான் சார்?”
“ஸ்பீக்கிங்”
“நான் அசோக் பேசறேன்.”
“அசோக் டிடெக்டிவ் ஏஜென்சி?”
“யெஸ்”
“வாட் எ சர்ப்ரைஸ். எங்க இருக்கீங்க?”
“கோயம்புத்தூரில்தான் இருக்கேன். கிரீன்பார்க் ஹோட்டலில் ஸ்டே.”
“நைஸ் சொல்லுங்க அசோக்”
“அந்த த்ரீ மர்டர்ஸ் ஃபைல் தான் பார்த்துட்டிருக்கேன்.”
அசோக் சொல்ல மறுமுனையில் கண்ணபிரான் மகிழ்ந்தார்.
“சொல்லுங்க அசோக் ”
“எனக்கு ஒரு டவுட்.”
“ம்”
“இறந்த மூணு பேருக்கும் டாக்டர் மாரிமுத்துங்கற பேர்ல மூணு கவர் கொடுத்திருக்காங்க.”
“ஆமா”
“அந்த மூணு கவரும் தனித்தனி ஆளுங்க கொடுத்தாங்களா இல்ல ஒரே ஆள் மூணு கவரும் கொடுத்தாரா?”
“அது செக் பண்ணல அசோக். அந்த கவர்ல ஒண்ணும் இல்லாததால அதுக்கு அந்தளவு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கல.”
“சார் நீங்க என்ன சொல்றீங்க? மூணும் வெறும் கவரா?”
“ஆமா அசோக்”
அசோக்கிற்கு ஏதோ நெருடியது.
“சரி அது விடுங்க. அந்த மூணு கவரும் எங்க இருக்கு?”
“என் கஸ்டடில இருக்கு.”
“ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா?”
“சொல்லுங்க அசோக்”
“அந்த மூணு கவரும் பாரன்சிக் டிபார்ட்மெண்ட்ல கொடுத்து மூணுமே ஒரே ஆள் கொடுத்தாங்களா அல்லது மூணு பேர் தனித்தனியா கொடுத்தாங்களான்னு செக் பண்ணனும்”
“பண்றேன்”
“தேங்க்ஸ் சார்.”
“வெல்கம் அசோக். நாம நாளைக்கு மீட் பண்ணுவோம்.”
“கண்டிப்பா.”
***
மறுநாள் காலை.
அசோக் ஜாகிங் முடித்துக்கொண்டு வர ரிஷப்ஷனிஸ்ட் அழைத்தாள்.
“மிஸ்டர் அசோக்”
“யெஸ்”
“உங்களுக்குப் போன் வந்தது. நீங்க ஜாகிங் போயிருக்கீங்கன்னு சொன்னேன். உடனே திரும்பி போன் பண்றேன்னு சொல்லியிருக்காங்க.”
“யாருன்னு சொன்னாங்களா?”
“யெஸ் சார். அவர் பேர் …”
யோசித்த ரிசப்ஷனிஸ்ட் தொடர்ந்தாள்
“டாக்டர் மாரிமுத்து.”
