கங்காதரன் விடியற்காலையில் எழுந்து கொண்டார். ஐம்பது வயதிலும் நாற்பது வயது மதிக்கத்தக்க அளவில் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருந்தார்.
தினசரி ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்வது அவர் வாடிக்கை.
ஈரோட்டில் அவர் பெயரில் ஏராளமான டெக்ஸ்டைல் மில் உண்டு. இதுபோக மரச்செக்கு எண்ணெய் வியாபாரமும் அவருக்கு நன்றாக கை கொடுக்க ஈரோட்டில் கங்காதரன் என்றால் அனைவருக்கும் தெரியும்.
இப்போது கோவையில் ஆர்வி ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.
பத்து மணிக்கு தொழிலதிபர்கள் ஒன்று கூடும் மீட்டிங் ரேஸ்கோர்ஸில் நடக்க இருப்பதால் தயாரானார்.
இன்னும் மூன்று மணி நேரங்கள் உள்ளன.
வெளியே நடக்கத் தொடங்கினார்.
காலை வேளையில் வீசிய சில்லென்ற காற்று அவரை உற்சாகப்படுத்தியது. அஞ்சப்பர் ஹோட்டலைப் பார்த்தவர் தனக்குள் புன்னகைத்தபடி தொடர்ந்தார். அஞ்சப்பர் அவருக்குப் பிடித்த ஹோட்டல். மகளிர் பாலிடெக்னிக் வரை நடந்தவர் மீண்டும் திரும்பினார். ஹோட்டலை அடைந்தபோது குளிரிலும் அவருக்கு வியர்த்திருந்தது.
ஹோட்டலுக்குள் நுழைந்தவரை ரிசப்ஷனிஸ்ட் அழைத்தாள்.
“சார்”
“யெஸ்”
“ரூம் நம்பர் 308?”
“யெஸ்”
“உங்களுக்கு ஒரு கவர் இருக்கு”
“எனக்கா?”
“யெஸ் சார்” சொன்னவள் அந்தக் கவரை எடுத்துக் கொடுக்க கங்காதரன் திகைப்புடன் வாங்கிக்கொண்டார்.
அறைக்கு சென்ற அவர் அந்தக் கவரைப் பார்த்தார். ஃப்ரம் என்ற இடத்தில் டாக்டர் மாரிமுத்து என்றிருக்க மாரிமுத்து என்ற பெயரில் தனக்கு எவரேனும் தெரிந்தவர் இருக்கிறாரா என்று யோசித்தார். எவரும் இல்லை என்பது உறுதியான பின் கவரைப் பிரித்தார். உள்ளே ஒன்றும் இல்லை.
ஆச்சர்யமானவர் கவரை நன்றாக உதற ஒரு சிறிய பச்சைக் கலர் மாத்திரை கீழே விழுந்தது.
கங்காதரன் அது என்னவென்று எடுத்து பார்த்தார். அவருக்குத் தெரியவில்லை.
வேறு யாருக்கோ கொடுக்க வேண்டிய கவரை ரிசப்ஷனிஸ்ட் தனக்கு கொடுத்திருக்கிறாள்
நினைத்தவாறு குளிக்கச் சென்றார்.
***
ஒன்பதரை.
வாசு ரிசப்ஷனில் வந்து காத்திருந்தான். கங்காதரனின் கார் டிரைவர். வாசுவை ஒன்பதரை மணிக்கு வரச் சொல்லியிருந்தார்.
வாசு எப்பொழுதும் நேரம் தவறாமையைக் கடைபிடிப்பான். சொன்ன நேரத்தில் வர வேண்டும் அதே நேரத்தில் அவரை அழைக்கக் கூடாது அவரே அழைப்பார் அல்லது அவர் இறங்கி வருவார் இதுதான் பல வருடங்களாக நடந்து கொண்டிருப்பது.
நேரம் கடந்து கொண்டே இருக்க வாசு குழம்பினான்.
ஒன்பது அம்பதை நெருங்க வாசுவிற்கு ஏதோ தவறாகத் தெரிந்தது.
தன் அலைபேசியை எடுத்து கங்காதரனுக்கு அழைத்தான்.
ரிங் போனது. போய்க்கொண்டே இருந்தது அவர் எடுக்கவில்லை.
வாசு பதறினான். வேகமாக லிப்டை அடைந்தவன் மூன்றாவது தளத்திற்கு அழுத்தினான்.
லிப்டில் இருந்து வெளிவந்து கங்காதரனின் அறையை நோக்கி ஓடினான். அறை உள்புறமாக பூட்டப்பட்டிருக்கத் திகைத்தான்.
“சார் ”
“சார்”
காலிங் பெல்லை அழுத்தினான்.
உள்ளிருந்து எந்தவித பதிலும் இல்லை.
மீண்டும் ரிஷப்ஷனை அடைந்தவன் பதற்றமாக ரிசப்ஷனிஸ்டிடம் விஷயத்தைச் சொல்ல அவன் பதற்றம் அவளையும் தொற்றிக்கொண்டது. அவள் இன்டர்காமில் யாருக்கோ விஷயத்தை போன் செய்து சொல்ல அடுத்த இரண்டு நிமிடங்களில் மேனேஜர் மற்றும் இரண்டு பேர் அங்கே ஓடி வந்தார்கள்.
“என்னாச்சு?” மேனேஜர் வாசுவைக் கேட்க வாசு வியர்த்துக் கொட்டியபடி சொன்னான்.
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு அய்யா உள்ள இருக்காரு ஆனா கதவைத் திறக்க மாட்டேங்கிறார்.”
“சார் கதவை உடைச்சுடலாமா?”
“முதல்ல போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணலாம்.”
மேனேஜர் சொல்ல வாசு பதறினான்.
“சார் ”
“ம்”
“அய்யாக்கு இப்ப மீட்டிங் இருக்கு.”
சொன்னவனைக் கேலியாகப் பார்த்தார் மேனேஜர்.
“உன் அய்யா ட்ரிங்க்ஸ் சாப்பிடுவாரா?”
“இல்ல சார் அந்த பழக்கமே அவருக்கில்லை.”
பேரர் மேனேஜரின் காதில் ரகசியமாய் சொன்னான்.
“சார்”
“ம்”
“போலீஸ்க்கு இந்த விஷயத்தைக் கொண்டு போய் காம்ப்ளிகேட் பண்ண வேண்டாம். எனக்கு ஒரு ஐடியா இருக்கு சார்.”
“சொல்லு”
“பக்கத்து ரூமுக்கு போய் அங்கிருந்து சன்ஷேட் வழியா ஜன்னல் மூலமா உள்ள போலாம்.”
“அது முடியுமா?”
“ட்ரை பண்றேன் சார்.”
“வேண்டாம்”. கொஞ்ச நேரம் யோசித்த மேனேஜர் சொன்னார்
“கதவை உடைச்சிடுங்க.”
அடுத்த இரண்டு நிமிடங்களில் கதவு உடைக்கப்பட்டு உள்ளே போடப்பட்ட லாக் விடுவிக்கப்பட்டது.
மேனேஜர் வாசு இருவரும் உள்ளே நுழைய கங்காதரன் கீழே தரையில் கிடந்தார்.
“சார்” வாசு பதறிப்போய் தூக்க முயன்றான். எக்கச்சக்கமாய் அதிர்ந்தான். கங்காதரன் விழிகள் எங்கோ நிலைத்தபடி சர்வ நிச்சயமாய் இறந்திருந்தார்.
***
“வேண்டாம் டேவிட் என்னை விட்டுடு காலங்கார்த்தால இப்படி பண்ணாத”
கார்த்தி தூக்கக்கலக்கத்தில் சொல்ல டேவிட் விடவில்லை.
இடம்: அசோக் டிடெக்டிவ் ஏஜென்சி
மொட்டைமாடி.
“நீதானே சொன்னே? நீ எக்ஸர்சைஸ் பண்ணும் போது என்னையும் கூப்பிட்டுக்கோ. நான் என்ன சொன்னாலும் என்னை விடாதேன்னு” டேவிட் புன்னகையுடன் கேட்க கார்த்தி சிரித்தான்.
“அது ஏதோ ஒரு ஆர்வத்துல சொல்லிட்டேன் ப்ளீஸ்.”
“அந்த ஆர்வம் ரொம்ப நல்ல விஷயம் டெய்லி காலங்காத்தால எந்திரிச்சு நம்ம உடம்பு நல்லாயிருக்க நாம கொஞ்ச நேரம் கொடுக்கணும். அது நமக்கு நல்லது”.
டேவிட் சொல்லியபடியே தண்டால் எடுக்க கார்த்தி புன்னகைத்தான்.
“அசோக் எங்க?”
“அசோக்குக்கு டெய்லி ஜாகிங் போகணும். அத விடமாட்டான். இப்போ அவனுக்கு கம்பெனி வேற கிடைச்சிருக்கில்ல? ரொம்ப சந்தோஷமா இருக்கான்.”
“கம்பெனியா?”
“ம் டாமி” டேவிட் சொல்ல கார்த்தி சிரித்தான்.
“டாமி அசோக் கூட ரொம்ப ஒட்டிக்கிச்சு”
“நம்மள மாதிரி.”
கீழே போன் அடித்தது.
“திவ்யா முழிச்சிட்டிருக்காளா?”
“அவ அப்பவே முழிச்சிட்டா. ஏதோ படிச்சிட்டிருந்தா.”
“ம்”
திவ்யா கீழே பேசியது மாடியில் கேட்டது.
“யெஸ் அசோக் டிடெக்டிவ் ஏஜன்ஸி”
“சொல்லுங்க”
“சார் இல்ல. ஒரு ஒன் ஹவர் கழிச்சு போன் பண்ணுங்க.”
கீழே இறங்கிய கார்த்தி கேட்டான்.
“யார் திவ்யா?”
“கோயம்புத்தூரில் இருந்து அழைப்பு.”
“என்ன விஷயம்?”
“காலேஜ் பங்ஷனுக்கு வர முடியுமான்னு”
“அதுக்கு அசோக்க எதுக்கு கூப்பிடறாங்க?”
“அதானே.”
“என்ன சொன்னே?”
“ஒரு மணி நேரம் கழிச்சு பேசச் சொன்னேன்.”
“திவ்யா உன் கிட்ட பேசினது யாருன்னு சொன்னாங்களா?”
“இல்லையே ஏன்?”
“ஏன் ஒருவேளை அது ஃபேக் காலா இருக்கக் கூடாது?”
“என்ன கார்த்தி சொல்ற?”
“அசோக் எங்க இருக்கான்னு கண்காணிக்க அந்தக் கால் பண்ணியிருக்கலாம் இல்லையா?”
கார்த்தி கேட்க திவ்யா அதிர்ந்தாள்.
“என்ன கார்த்தி சொல்ற? அப்படியா இருக்கும்?”
“வாய்ப்பிருக்கு.”
“இப்ப எப்படி உறுதிப்படுத்த?”
“திரும்ப ஒரு மணி நேரம் கழிச்சு போன் வந்தா அது உண்மையான கால் இல்லேன்னா அது ஒரு ஃபேக் கால்.”
***
அடுத்த பத்து நிமிடங்களில் போலீஸ் வந்தடைந்தது. கங்காதரன் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார். இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் மேனேஜரைப் பார்த்தார். மேனேஜர் பவ்யமாக வணக்கம் வைக்க தலையசைத்தார்.
“கதவு நீங்கதான் உடைச்சீங்களா?”
“சார் அது வந்து”
“ஸே யெஸ் ஆர் நோ?”
“யெஸ் சார்.”
கண்ணபிரான் அறையை நன்றாக ஆராய்ந்தார். யாரும் வந்த சுவடு ஒன்றுமில்லை. அறையில் கைகலப்பு எதுவும் நடந்தது போல் எந்தத் தடயமும் இல்லை.
இது ஒரு க்ளீன் சூயிசைட் கேஸ் சூயிசைட் நோட் ஏதாவது இருந்தால் வேலை எளிதில் முடிந்துவிடும்..
கண்ணபிரான் நன்றாக தேடிப் பார்த்தும் எந்தவிதக் கடிதமும் இல்லை.
அப்போது அவரின் பார்வையில் கீழே கிடந்த அந்தக் கவர் கிடைத்தது.
எடுத்துப் பார்த்தார்.
ஃப்ரம் டாக்டர் மாரிமுத்து என்றிருந்தது.
